Thursday, March 3, 2011

Madhuramurali March 2011 Wrappers





Advertisements if Madhuramurali March 2011


Sayings of Sri Swamiji

உலகத்தில் ஒரு நாட்டின் வெற்றிக்காக பாடுபடுபவர்கள் யாரும் அதை கொண்டாடும் போது இருப்பதில்லை. அதைப்போல் ஒரு கொள்கைக்காக போராடுபவர்கள் சிலர். அதன் பலனை அனுபவிப்பது வேறு சிலர்.

வாழ்க்கையில் பின்பற்றத்தக்க அரிய கருத்துகளை படிக்கவோ, கேட்கவோ நேர்ந்தால், அதை உடனே பிறருக்கு சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். அதைவிட அதை நான் வாழ்வில் பின்பற்ற வேண்டும் என்று நினைப்பதுதான் சிறந்த வழிமுறையாகும்.

-மஹாரண்யம் ஸ்ரீமுரளீதர ஸ்வாமிஜி

Sanathana Pudhir Qtn 25 - Answers 24 - By Athreyan

சனாதனப் புதிர் - பகுதி - 25
1) சாந்திரமான சைத்ர மாதத்தில் ஐந்து விசேஷங்கள் வருகின்றன. இவை யாவை?
2)    தேவஹூதி யாருடைய பெண்? அவள் கணவர் பெயர் என்ன? எத்தனை குழந்தைகள்? அவருக்கு யார் உபதேசம் செய்தது? இந்த உபதேசம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
3)    ரிக் வேதம் பசுவை எப்படி குறிப்பிடுகிறது? மற்றும் பசுவின் பெருமைகள் எங்கு போற்றப்படுகின்றன?
4)    தேவ வ்ரதன் இவர் யார்? இவருக்கும் க்ருஷ்ணரது புல்லாங்குழலுக்கும் என்ன சம்பந்தம்?
5)    காசியில் கங்கைக் கரையில் மணிகர்ணிகா காட் இருக்கிறது. இதன் மற்றொரு பெயர் என்ன?
6)    அத்வைத சன்யாசிகள் தீக்ஷைக்குப் பிறகு புதிய நாமகரணத்தோடு அடைமொழியும் சேர்த்துக் கொள்கிறார்கள்  இந்த அடைமொழிகள் யாவை?
7)    தக்ஷிணாமூர்த்தி உபநிஷத் - இது எந்த வேதத்தைச் சார்ந்தது? எத்தனை ஸ்லோகங்கள்? எத்தனை மந்திரங்கள்?
8)தேவாபி இவர் யார்? இவருக்கும் பீஷ்மருக்கும் என்ன சம்பந்தம்?
9)சம்பாபுரி  - இது எந்த தேசத்து தலைநகர்? இதை ஆண்ட மன்னர்கள் யார்? இது எங்கு இருக்கிறது?
10)தேவி உபநிஷத்  இது எந்த வேதத்தில் காணப்படுகிறது? மொத்தம் எத்தனை மந்திரங்கள்?

சனாதனப் புதிர் : பகுதி - 24 விடைகள்
1)    ப்ரஹதாரண்யக உபநிஷத். இவர் காசி அரசர் மஹாஞானி; த்ருப்த பாலகி என்ற ரிஷிக்கு உபதேசம் செய்தவர்.கௌஸிதகி ப்ராஹ்மண உபநிஷத்  இதை உறுதி செய்கிறது.
2)    பத்ம புராணம் - காண்டம் 5 (உத்திர காண்டம்) சர்க்கம் 36 முதல் 66 வரை.
3)    மனைவி - கொடுஞ்செயல்; பொய் - மகன்; ஏமாற்றும் வஞ்சிக்கும் குணம் - மகள்; மாயை, பயம், வேதனை, நரகம், துக்கம், மரணம் - இவைகள் சந்ததிகள்;  விஷ்ணு புராணம் (1.7).
4)    பத்ம புராணம் ; காண்டம் 4 - பாதாள் காண்டம்; சர்க்கம் 71,75,76.
5)    சுக்ல யஜுர் வேதம்; நிர்வாண அனுசாஸனம்; தூரீயத அவதூத உபநிஷத்.
6)    பத்ம புராணம்; காண்டம் 5 - உத்திர காண்டம்  சர்க்கங்கள் 171 முதல் 190 வரை.
7)    சபர்மதி நதி கடலில் கலக்கும் இடம் - (பத்ம புராணம்) மற்றும் சல்ய பர்வா - (49) மஹாபாரதம்  - விஷ்ணு மது-கைடபர்களை இங்கே ஸம்ஹாரம் செய்தார்.
8)    தக்ஷகனின் மகளான அஸ்வசேனனை.
9)    மத்வாச்சாரியாருக்கு ; நாராயண ஆசார்யார் எழுதிய மணிமஞ்சரி என்ற நூல்.
10) ப்ரஹ்ம வைவர்த்திக புராணம்.

அப்பாலுக்கு அப்பால் - 2

சேட் ஒருவருக்கு குழந்தை பிறக்கவே இல்லை. இந்த சேட் பண்டரிபுரம் வந்து பாண்டுரங்கனை சேவித்தார். தமக்கு குழந்தை பிறந்தால் பாண்டுரங்கனுக்கு அழகான பொன்மாலை அணிவிப்பதாக வேண்டிக்கொண்டார். வேண்டிக்கொண்ட பின் சேட் தன் ஊருக்கு சென்றார். குழந்தை பிறந்தது. சேட், பண்டரிநாதனின் அருளால்தான் குழந்தை பிறந்தது என்பதை உணர்ந்து தான் நேர்ந்தபடியே அவனுக்கு தங்கமாலை அணிவிக்க முடிவு செய்தார். அதற்காக நரஹரி சோனாரின் கடைக்கு சென்றார் சேட். நரஹரியும் வரவேற்று பேசினார். பேச்சினூடே தமது அபிலாஷையை சொன்னார் சேட். அதிலும் எப்படி சொன்னார் என்றால் அந்த மாலையில் பகவானின் பத்து அவதாரங்களையும் அழகாக பதிக்க வேண்டும் என்று விண்ணப்பித்தார். ஒருமுறையேனும் கனவிலும் விஷ்ணுவை நினையாத நரஹரி சோனாருக்கு இது சாத்தியமாகப்படவில்லை. அவர் சேட்டை பார்த்து சொன்னார் "வேறு கடையை பார்த்து கொள்ளும். எம்மால் இது ஆகாது".
சேட் : ஏன் ஆகாது?
சோனார்: நாம் தசாவதாரங்களை பதிக்க  முடியாது. மேலும் பாண்டுரங்கனுக்காக முடியவே முடியாது.
சேட்:  அதுதான் ஏன்?
சோனார்: எமக்கு தலைவர் பரமசிவனே. வேறு ஒருவரை நாம் நினைப்பதில்லை. பிற தெய்வங்களிடம் எமக்கு தூஷனை இல்லை. சிந்தனையும் இல்லை.
சேட்: இது உமது தொழில். தொழிலில்  உமது உதவியை நாடிய என்னை  தள்ளுவது உமது தொழிலுக்கு செய்யும் அவமரியாதை அல்லவா? மேலும் உம்மைப்போல பொற்கொல்லர் இவ்வூரில் இல்லை என்பதனால்தான் உம்மிடம் வந்தேன் .
சோனார்: (அரை மனதோடு) சரி, சரி! அளவும் பொன்னும்  கொடுத்து செல்லுங்கள். செய்து வைக்கிறேன்.
மிக நேர்த்தியாக சோனார் பொன் மாலையை செய்தார். மத்ஸ்ய, கூர்ம, வராஹ , ந்ருசிம்ம, வாமன, திரிவிக்கிரம, பரசுராம, ராம கிருஷ்ண, புத்த, கல்கி அவதாரங்களை மிக அழகாக செய்தார். மாலை ஜொலிக்கத்தான்  செய்தது. ஒரு நல்ல நாளில்  சேட் வந்து மாலையை பெற்றுக்கொண்டு பாண்டுரங்கனுக்கு அணிவிக்க சென்றார். அணிவிக்கும்பொழுதுதான் தெரிந்தது. மாலை பாண்டுரங்கனுக்கு அணிவிக்க முடியாத அளவு இறுக்கமாய் அமைந்தது. சேட்டிற்கு துக்கம்.  அவருக்கு பாண்டுரங்கனை பார்க்கையில் தன் குழந்தை போல் தோன்றியது . மாலையை எடுத்துகொண்டு மறுபடி சோனாரிடம் வந்தார் சேட். சோனாரை நன்றாக  திட்டினார். "காசு வாங்கிக்கொண்டு வேலையை ஒழுங்காக செய்ய மறுக்கிறாய். சரியான பித்தலாட்டக்காரன் நீ" இப்பொழுது, சோனாரால் விட்டு விட முடியுமா? முதலில் ஒப்புக்கொண்டு இருக்கிறாரே? என்ன செய்வது? பரமசிவனை நினைந்தார். "பிரபோ! ஏன் என்னை சோதிக்கிறாய்?". இவர் பரமசிவனை நினைக்கையில் அங்கு பாண்டுரங்கன் சிரித்தான் "சோனாரே! என் விளையாட்டு இன்னும் முடியவில்லை. இப்பொழுதே நீர் சலித்துக்கொண்டால் எப்படி?".
    மாலையை வாங்கி அவசர அவசரமாய் வேலை செய்து பெரிது பண்ணிக்கொடுத்தார். சேட்டும் பாண்டுரங்கன் கோவிலுக்கு வந்தார். மாலையை அணிவித்தார். இப்பொழுது ஒரு குறை! மாலை மிக பெரிதாக நீண்டு இருந்தது! பண்டாக்கள் "என்ன அய்யா! இம்மாலையை அணிவித்தால் பாண்டுரங்கனுக்கு பொருத்தமாக இருக்காதே! ஏன் இப்படி அரையும்  குறையுமாக கொண்டு வருகிறாய். அந்த பொற்கொல்லனை கூப்பிட்டு அளவெடுக்க சொல்" என்றனர். மிக்க வருத்தத்தில் இருந்த சேட் இப்பொழுது மின்னல் அடித்தால் போல் பிரகாசமானார். ஆஹா! அருமையான யோசனை! இப்பொழுதே சோனாரை வரவழைத்து அளவெடுக்க சொல்வோம் என முடிவெடுத்தார். நரஹரிசோனாருக்கு செல்ல விருப்பமில்லை என்றாலும், காரியம் செய்ய ஒப்புக்கொண்டு விட்டதால் கண்ணைக்கட்டிக்கொண்டு தன்னை கோயிலினுள் கொண்டு செல்ல சொன்னார். அங்கு சென்று பண்டரிநாதனை அளவெடுப்பதற்காக தொட்டார். அவருக்கு தூக்கி வாரிப்போட்டது. இருப்பது யார்? தலையில் ஜடை இருப்பது போல் தோன்றியது அவருக்கு. கங்கையை தொட்டாற்போல் கைகளில் குளிர்ச்சி வேறு. சற்றே மேலே சென்றால் நாகமும் தென்பட்டது. கழுத்தில் நாகமும் ருத்திராக்ஷமும் கலந்து இலங்குவது தட்டுப்பட்டது. இடுப்பில் புலித்தோல். சட்டென கண்ணை கட்டியிருக்கும் துணியை எடுத்தார். வெளியில் பாண்டுரங்கன் சிரித்தான். சட்டென கண்களை கட்டிக்கொண்டார். மறுபடி தொட்டால் சிவவரூபம்தான் இலகியது. இரண்டு மூன்று முறை இப்படி ஆன பின், நரஹரி சோனாருக்கு  சிவபெருமானாக பாண்டுரங்கனே விளங்குகிறான் என்பதை உணர முடிந்தது. இப்படி நரஹரி நினைத்தவுடன் பாண்டுரங்கன் சிரித்தவாறு தனது இயல்பான தோற்றத்துடன் விளங்கினான். பின்னாட்களில் அவனது மிகச் சிறந்த பக்தராகவும் விளங்கினார்.
    அடுத்த இதழில் கர்நாடகத்தில் விளங்கிய சிறந்த கவிஞரும் சிவபக்தருமாகிய அல்லமபிரபு பற்றி பார்ப்போம்.

மாலே மணிவண்ணா - 93 -மகாவித்துவான் மயிலம். வே. சிவசுப்பிரமணியன்

வைணவ சமய தத்துவப்படி, உலகத்தோற்றத்திற்கு அதாவது தனு-கரண-புவன லோகங்களுக்கு அடிப்படையான மூன்று காரணங்களாகவும் இருப்பவன் எம்பெருமானே என்பது அடிப்படைக் கொள்கைகளுள் ஒன்றாகும். ... (சென்ற இதழ் தொடர்ச்சி) கடலிலிருந்து அலைகள் தோன்றி கடலிலேயே  அடங்கிவிடுகின்றன.அது போல் இந்த உலகம் உன்னிடத்திருந்து தோன்றி, உன்னிடத்திலே ஒடுங்கி விடுகின்ற தன்மை நின்னிடத்துள்ளது  என்கிறது  திருச்சந்த விருத்தம்.
"திரிவித காரணமும் தானேயாய்"
"ஜகத்துக்கு திரிவி த காரணமும் தானேயாய்"
"நிமித்ததோ பாதாந  ஸஹகாரிகளும் தானே என்கை"
என்று திருவாய்மொழி வியாக்கியானங்களில் குறிக்கப்படுவதையும் இங்கு இணைத்து அறியலாம். இதையே இன்னும் விளக்குகிறது ஓர் உரை. "தான் ஓர் உருவே தனிவித்தாம்" என்பதற்கு, "தான்" என்கிற இத்தால் உபாதாநாந்தரம் இல்லை (வேறு முதற்காரணம் இல்லை) என்கை; "ஓர்" என்கிற இத்தால் ஸஹகார்ய அந்தரம் இல்லை (வேறு துணைக் காரணம் இல்லை). "தனி" என்கிற இத்தால் நிமித்தாந்தரம் (வேறு கருத்தா) இல்லை. "என்கை" என்றும், "முதல் தனிவித்தேயோ" என்பதற்கு, முதல்- நிமித்த காரணம், தனி- துணைக் காரணம், வித்து- உபாதான காரணம் மூன்றுமாக உள்ளவனே என்று எழுதிய உரைகளைக் காணுங்கால் இக்கருத்து மேலும் விளங்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.
    நுண்மை நிலையின் அறிவுள்ள பொருள்களோடும் அறிவில்லாப் பொருள்களோடும் கூடியிருக்கும் பரம்பொருளே முதற்காரணம் என்று விளக்குகிறது திருச்சந்தவிருத்த உரை.
    இவ்வுலகத்தைப் படைத்தற்கேற்ற அறிவாற்றல்களோடு கூடிய பரம்பொருளே துணைக்காரணம் என்றும், தன்னில் வேறாகப் பிரிந்திராத அறிவுள்ளபொருள், அறிவில்லாப் பொருள்களை விசேடமாக உடைய நினைவோடு (சங்கற்பத்தோடு) கூடிய பரம்பொருளே வினைமுதல் என்றும் கூறுவர்.
    எனவே முதல், துணை, நிமித்த காரணன் ஆக ஜகத்துக்கு எம்பெருமானே என்ற கருத்தை விஷ்ணு ஸஹஸ்ர நாமம் தன் தொடக்கத் திருநாமத்திலேயே சொல்லிவிடுகிறது.
    1.விவம் - எல்லாமாக இருப்பவர் - உலகில் உள்ள எல்லாமும், உலகமும் அவரே; இறைவனைச் சொல்லால் குறிப்பிடுவது ப்ரணவம். பரம்பொருளும் அதன் விரிவான உலகமும் ஓங்காரமே. பரம்பொருள் உலகமாகக் காரியப்படும் நிலையில் முதலில் தோன்றியது ஆகாசத்தின் தன்மாத்திரையான ஒலிதான். அந்த ஒலியின் முதல் விளக்கம் "ஓம்" எனும் ப்ரணவம். அதனால் பரம்பொருளுக்கு விளக்கம் தரும் வேதத்தை ஓதத் தொடங்குகையில் முதலில் ஓங்காரம் இடம்பெறுகிறது. பிரணவத்தில் தொடங்கி பிரணவத்தில் முடிவதால், வேதமும் பரம்பொருளாகிறது. பிரணவம் உலகத்தில் எல்லா சப்தத்திலும் விரவி நிற்கிறது. உலகமாக விரிய இருக்கும் பரம்பொருளின் முதல் தோற்றம் ஒலி; அதிலிருந்து எல்லாமும். ஆகவே பிரணவமும் விவம். ஆகவே எல்லாமாய் இருப்பவர் இறைவனே. எல்லையற்ற பரிசுத்தமான மங்கள குணங்கள், பெருமை, இவை எம்பெருமானிடம் எல்லையற்ற  கருணையோடு கூடியுள்ளன. அவர் ஸ்வயம் பரிபூரணர். அதனால் விஷ்ணு விவம் ஆகிறார்.

ஸ்வாமி க்ருஷ்ணானந்தஜி-6 - ப்ருந்தாவனமும் நந்தகுமாரனும் - Janani

பாவ லோகத்தில் நடக்கும் லீலைகள் ஸாதாரண மனிதர்களுக்கு புரியவே புரியாது. அவர்கள் மஹான்களின் இந்த லீலைகளை நாடகம் என்று கூட எண்ணலாம். ஆனால், "இவை எவ்வளவு உத்தமமானவை, லோக கந்தமே இல்லாதவை". ராமக்ருஷ்ண பரமஹம்ஸரிடம் கோபாலேர்மா என்றொரு வயதான பெண்மணி வருவாள். அவள் வாத்ஸல்ய பாவத்தில் பகவானிடம் பக்தி செய்வாள். அவளை பார்த்த மாத்திரத்தில் ராமக்ருஷ்ணர் தன் நிலை மறந்துவிடுவார். அவளிடம் விதவிதமான தின்பண்டங்கள் வேண்டும் என்று கேட்பார்.
    ப்ராண கோபால் கோஸ்வாமி, க்ருஷ்ணாநந்ததாஸ் பாபாஜி போன்ற மிகவும் உத்தமமான சிஷ்யரால், பக்தி ப்ரசாரம் நன்கு ஏற்பட்டு, நாஸ்திகமும் அதர்மமும் அழியும் என்று மிகவும் எதிர்பார்த்தார். ஆனால் பாபாவோ இரவும் பகலும் பாவத்தில் முழுகி க்வாரியா பாபாவுடன் பாவ லோகத்திலேயே தன்னை மறந்திருப்பதைக் கண்டு, ப்ராணகோபால ஸ்வாமி சிந்தனைக்குள்ளானார். ஒருநாள் அவர் பாபாஜியை அழைத்து அவரிடம் உமக்கு பகவானின் க்ருபையால் என்ன கிடைத்திருக்கிறதோ அதை எல்லாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும். உலகில் க்ருஷ்ணபக்தி மற்றும் கீர்த்தனத்தை ப்ரசாரம் செய் என்று ஆக்ஞாபித்தார்.
    பாபா குருவின் ஆக்ஞையை பாலனம் செய்ய முடிவு செய்தார். ஆனால், ஸ்வதந்திரமாக ப்ரசாரம் செய்ய அவர் முன் ஒரு பெரிய தடையிருந்தது. முடிந்தவரையிலும் எந்த ஒரு ஸ்த்ரீயின் முகத்தையும் பார்ப்பதில்லை என்று அவர் ஸங்கல்பம் செய்திருந்தார். பல வருடங்களாக அந்த ஸங்கல்பத்தை கடைப்பிடித்தும் வந்தார். அவரது குடிலுக்கு ஸ்த்ரீகள் வருகை தடை செய்யப்பட்டிருந்தது. மதுகரிக்கு செல்லும்போது கூட தலையில் துணியணிந்து பார்வையை கீழே வைத்தபடியே தான் செல்வார்.
    ஒரு ஸம்பவத்தின் காரணமாக அவரது ஸங்கல்பத்தை அவர் கைவிட நேர்ந்தது. ஹின்டௌல் க்ராமத்தின் அருகில் நகலா லக்ஷ்மண்புர் எனுமிடத்தில், ஸ்ரீலாலாராம்ஜி என்பவரின் புதல்வியான ஸ்ரீமதி தேவா என்ற பெண் பதினோரு வயதிலேயே பால்ய விதவையாகிவிட்டாள். அவள் மனதினாலேயே க்ருஷ்ணானந்த பாபாஜியை தனது குருவாக ஏற்று, மனதாலும் உடலாலும் டாகுர்ஜியின் ஸேவையிலேயே தன்னை ஈடுபடுத்திக்கொண்டாள். ஆனால் குருதேவரின் தரிசனம் பெறாமல் அவள் மிகவும் வருந்தினாள். பல பேர் அவளைப் பற்றி பாபாஜியிடம் கூறிய பொழுது, பாபாஜி ஒரு காகிதத்தில் மஹாமந்திரத்தை எழுதி அதை ஜபிக்குமாறும், ஸக்ய பாவத்தில் பக்தி செய்யுமாறும் அவளுக்கு சொல்லியனுப்பினார். அவள் அப்படியே ஜபமும் சிந்தனையும் செய்யலானாள். ஆனால் அவளும் ஒரு ப்ரதிக்ஞை செய்து கொண்டாள். குருதேவரை காணாதவரை சூரியனையே பார்ப்பதில்லை என்று விரதம் எடுத்துக் கொண்டுவிட்டாள். காலை நான்கு மணியிலிருந்து தனது பஜன குடீரத்திலமர்ந்து ஸூர்யாஸ்தமனம் வரை ஜபம் செய்வாள். இவ்வாறே மூன்று வருடங்கள் கழிந்தன. ஆனால் குருதேவரின் தரிசனம் இன்னும் கிடைக்கவில்லை. அதனால் அவள் அன்ன-பானங்களையும் த்யாகம் செய்தாள். அன்ன-பானம் இல்லாமல் ஒன்பது நாட்கள் கழிந்து விட்டன. அப்பொழுது க்ருஷ்ணானந்த பாபாவிற்கு, பலராமரின் ஆக்ஞையால், தனது ஸங்கல்பத்தை கைவிடும்படியாயிற்று. பலராமர், அவரிடம் அப்பெண்ணிற்கு தரிசனம் தருமாறு கூறிவிட்டார். அதனால், தனது ஸங்கல்பத்தை விட்டு பாபாஜி அந்த பெண்ணிற்கு தரிசனம் தந்தார்.
    சில நாட்களிலேயே அந்த பெண்ணிற்கு ஸக்ய பாவம் ஸித்தியாகிவிட்டது. அவளுடைய நடை-உடை-பாவனை எல்லாமே ஸ்ரீக்ருஷ்ணனின் நண்பனைப் போல் ஆகிவிட்டன. மக்கள் அவளை பையா (भैया) "அதாவது தம்பி" என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டனர். பகவானும் பையாவுடன் பல விதமாக லீலைகள் செய்தான்.
ஆனால் ஸ்ரீ க்ருஷ்ணருடைய திவ்ய ஸாந்நித்யத்தை பையாவின் ப்ராக்ருத சரீரத்தால் வெகு நாட்கள் தாங்க முடியவில்லை. அவருடைய தேஹம் மிகவும் க்ஷீணமாகிவிட்டது. ஒருநாள் மயக்க நிலையிலேயே குருதேவரின் தோளில் சாய்ந்தபடி அவர் ராம-க்ருஷ்ணர் என்னை அழைக்க வந்திருக்கிறார்கள் பையா! என்றார். (அவர்கள் ஒருவரையொருவர் தம்பி என்றே அழைத்துக் கொள்வார்கள்.) குருதேவர் கண்ணீருடன், "பையா, நீ செல்! நான் பின்னாலேயே வருகிறேன்" என்று கூறினார். குருதேவருடைய ஆக்ஞை கிடைத்தவுடன் அவர் உடம்பை விட்டு திவ்ய தாமத்தை எய்தினார்.
    க்ருஷ்ணாநந்தரும் தனது குருவின் ஆக்ஞையை சிரமேற்கொண்டு தீவிரமாக பக்தி ப்ரசாரம் செய்தார். அவர் பல க்ரந்தங்களையும் இயற்றினார். அவரது காரியம் முடிந்தவுடன்  1941ஆம் ஆண்டு க்ருஷ்ண ஸப்தமி அன்று இரவு 12 மணிக்கு "ஹரே க்ருஷ்ண" என்று உச்சரித்தவாரே பாபாஜியும் திவ்ய தாமத்தையடைந்தார். 

சென்ற மாத செய்திகள் - March 2011

ஸ்ரீரங்கம் S.B.காலனியில் 17.4.2006ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்டு கிருஷ்ண யஜூர் வேதபாடசாலையும் ரிக்வேத பாடசாலையும் நடந்து வருகின்றது. மேற்படி பாடசாலைக்கு ஸ்ரீரங்கம் ராமச்சந்திரன் அவர்கள் தன் வீட்டை கொடுத்திருந்தார். அவர்தான் சமீபகாலம் வரை பாடசாலையையும், சகல பொறுப்பையும் நிர்வகித்து வந்தார். ஆரோக்ய குறைவு காரணமாகவும், அடுத்த தலைமுறையை உற்சாகப்படுத்தவும் பாடசாலை நிர்வாகத்தின் சகல பொறுப்பையும் தத்வமஸி கனபாடிகளிடம் ஒப்படைத்து விட்டார். உதனேவர பட் ரிக்வேதத்திற்கு அத்யாபகராக உள்ளார். மேற்படி பாடசாலை 127/24, வடக்கு உத்திர வீதி, ஸ்ரீரங்கத்தில் செயல்பட்டு வருகிறது. இதனுடைய திறப்பு விழா மாசி மகம் (பிப்ரவரி 18)அன்று நடந்தது. இதற்கு பிரேமிக வேதாரமம் என்று பெயர் சூட்டப்பட்டது. ஸ்ரீஸ்ரீஅண்ணாவும் ஸ்ரீரங்கம் நாராயண ஜீயரும் பொன் அடி சாற்றி அனுக்ரஹித்தார்கள். வேதத்தின் பெருமையையும் அதை ரக்ஷிக்க வேண்டிய அவசியத்தையும் ஸ்ரீஸ்ரீஅண்ணாவும் ஜீயரும் அழகாக எடுத்துரைத்தார்கள். ஸ்ரீஸ்ரீஅண்ணா அவர்களின் திருக்கரங்களால் பாடசாலை திறந்து வைக்கப்பட்டது. ஸ்ரீஸ்வாமிஜியின் P.R.O. ஸ்ரீவெங்கடேசன் இதற்கான எல்லா ஏற்பாடுகளையும் அழகாக செய்திருந்தார்.
பிப்ரவரி 5, 6 தேதிகளில் குடியாத்தம் ராஜகோபால் நாயுடு ஆஸ்தீக சமாஜத்தில் பகவத்கீதை குறித்து ஸ்ரீஸ்வாமிஜி அருளுரை நிகழ்த்தினார்கள். இதே சமயத்தில் வளசை, டி.பி.பாளையம், கல்பாடி, கனவை மோட்டூர் என்ற அருகிலுள்ள கிராமங்களுக்கும் ஸ்ரீஸ்வாமிஜி விஜயம் செய்து அங்கு கிராம மக்களுடன் சத்சங்கம் செய்து வந்தார்கள். பிப்ரவரி 8 அன்று மதுரபுரி ஸ்ரீகல்யாணஸ்ரீனிவாசபெருமாளின் பிரதிஷ்டாதினம் ஸ்ரீஸ்வாமிஜி அவர்களின் முன்னிலையில் மிக சிறப்பாக நடைபெற்றது. காலையில் பெருமாளுக்கும் உற்சவருக்கும் திருமஞ்சனம் செய்யப்பட்டு அலங்காரத்தில் அழகாய் விளங்கினர். வந்திருந்த அன்பர்கள் அனைவருக்கும் ஸ்ரீவாமிஜி அவர்கள் தமது திருக்கரங்களாலேயே தீர்த்தபிரசாதம் வழங்கினார்கள். பிப்ரவரி 17 அன்று கன்யாகுமரி ஜயஹனுமாருக்கான 68நாள் ஏகதின சுந்தரகாண்ட பாராயணம் நிறைவுபெற்றது. இதில் ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் கலந்துகொண்டு ஹனுமாருக்கு வடைமாலை சாற்றி பூஜை செய்தார்கள்.
பிப்ரவரி 10 அன்று சென்னை பாரதிதாசன்காலனி புவனேவரி அம்மன் கோவில்-  டிசம்பர் 1 முதல் பிப்ரவரி 9வரை 50நாட்கள் தினமும் அன்பர்களின் இல்லங்களில் மஹாமந்திர கீர்த்தனம் நடைபெற்று வந்தது. இதன் பூர்த்தி அன்று ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் புவனேவரி அம்மன் கோவில் வளாகத்தில் அருளுரை வழங்கினார்கள். பிப்ரவரி15ஆம் தேதியன்று சென்னையை அடுத்த கொடுங்கையூர் சென்று ஸ்ரீஸ்வாமிஜி அன்பர்களிடையே சத்சங்கம் செய்து வந்தார்கள்.
பிப்ரவரி 19,20 அன்று வேலூர் அருகே உள்ள அகரம் ஸ்ரீவாரணவல்லி ஸமேத ஸ்ரீகஜேந்திரவரதராஜபெருமாள் கோவில் மற்றும் ஸ்ரீஅன்னபூரணிவிசாலாக்ஷி ஸமேத ஸ்ரீகாசிவிவநாதஸ்வாமி கோவில்கள் கும்பாபிஷேகம், ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அகரத்தில் 19ஆம் தேதியன்று ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் கஜேந்திர மோக்ஷம் குறித்து அருளுரையாற்றினார்கள்.
பிப்ரவரி 23 அன்று ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் சென்னை பரங்கிமலை அருகே உள்ள பாண்டுரங்கன் கோவில் கும்பாபிஷேக தினத்தன்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அருளுரையாற்றினார்கள். சிங்கப்பூரில் சத்சங்கங்கள் (பிப் 1-7) - பிப்ரவரி 1  அன்று சிங்கப்பூர் Yuvabharathi International ஸ்கூலில் டாக்டர் பாக்யநாதன்ஜி  Timeless wisdom of scriptures   என்ற தலைப்பில் பேசினார். இதில் சனாதன தர்மத்தின் கருத்துக்களையும் தற்கால அறிவியலையும் ஒப்பிடும்  படங்களை கொண்டு மாணவர்கள் முன்னிலையில் அவர்களுக்கு விளங்கும்படி எடுத்து பேசினார். பிப் 2 அன்று  தொழில் மற்றும் வர்த்தக சபை - Singapore Indian Chamber of Commerce and Industry முன்னிலையில் டாக்டர் பாக்யநாதன்ஜி தன்னுள் இருக்கும் ஆன்மாவை அடையாமல் ஒருவன் வெளியில் காரியங்களை செய்வதற்காக மட்டும் முயலுவது வாழ்க்கையை வீணடிப்பதாகும் என்று பேசினார். இதில் சுவையான சிறுகதைகளை கொண்டு அனுபவமும், அறிவின் மூலம் உணருவதும் வெவ்வேறு என்று பேசினார். இதில் யாரொருவர் ஏற்கனவே தன்னுள் இருக்கும் ஆனந்தத்தை பெற்றுள்ளாரோ, அவரே அத்தகைய அனுபவத்தை பிறருக்கு தர இயலும் என்றும் அது குருவாகவே இருக்க முடியும் என்றும் அவர் பேசினார். பிப்ரவரி 3ஆம் தேதி மற்றும் 6ஆம் தேதி சிங்கப்பூர் Geylang சிவன் மற்றும் சிங்கப்பூர் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் மகாமந்திர கூட்டு பிரார்த்தனை டாக்டர் பாக்யநாதன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் டாக்டர் பாக்யநாதன் இறைவனை அடைய பல வழிகள் என்றும் அதில் இறை நாம கீர்த்தனமே மிகவும் உகந்தது என்றும், அதிலும் தற்காலத்திற்கு மஹாமந்திர கீர்த்தனமே மிக அவசியம் என்றும் பேசினார். பிப்ரவரி 3,5 தேதிகளில்  மதுரமரணம் -  My Guru as I See HIM - ஸ்ரீஸ்வாமிஜி அவர்களின் திவ்யசரித்திரம் குறித்து ஸ்ரீஜெயச்சந்திரன், ஸ்ரீமதி ஹரிலக்ஷ்மி ஜெயச்சந்திரன் மற்றும் ஸ்ரீபாலசுப்ரமணியன், ஸ்ரீமதி உமா பாலசுப்ரமணியன் ஆகியோர் இல்லங்களில் பேசினார். பிப்ரவரி 3,4 தேதிகளில் ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் இயற்றியுள்ள கலிதர்ம உந்தியார் குறித்து பல இடங்களில் சத்சங்கங்கள் நிகழ்த்தினார். ஜனவரி 29 அன்று நெரூலில் (மும்பை) இந்திய தொழில் நிறுவனங்களின் செயலர்களுக்கான இன்ஸ்டிடியூட்டில் ஒரு ஆய்வரங்கு நடைபெற்றது.   இதில் கலந்து கொண்டு பேசிய ஸ்ரீராமானுஜம்ஜி வேலை செய்யுமிடத்தில் மனமகிழ்ச்சியை எப்படி வளர்ப்பது (Happiness at work) மற்றும் தொழில் தர்மம் (Professional ethics) குறித்து பேசினார். தார்மீக தர்மங்களின்படி நடப்பதே மகிழ்ச்சிக்கும் சுய அங்கீகாரத்திற்கும் வழிகோலும் என அவர் பேசினார். இந்நிகழ்ச்சி GOD Mumbai Satsang சார்ந்த ஸ்ரீநடராஜன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அன்றே மும்பை அருகே அம்பர்நாத் வெங்கடேஸ்வரா கோவிலில், ஸ்ரீமதி சுதாகிருஷ்ணமூர்த்தி அவர்களால் ஒரு மஹாமந்திர சத்சங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், ஸ்ரீராமனுஜம்ஜி கலந்து கொண்டு ஸ்ரீஸ்வாமிஜி அவர்களது உபதேசங்களையும் மஹாமந்திரத்தின் பெருமையையும் விளக்கி பேசினார். ஸ்ரீமதிசரஸ்வதி அவர்கள் மும்பை நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கேற்று இருந்தார். பிப்ரவரி 20 அன்று ஸ்ரீராமனுஜம்ஜி பெங்களூரில்Dell international services, SLK software, Plan Visage corporation, Spearhead corporation, DNS Consultants  போன்ற பல நிறுவனங்களில் Timeless wisdom for modern times   என்ற தலைப்பில் ஒரு பயிலரங்கை (workshop) நடத்தினார்.  

சந்திரகுப்தர் - Balakar Story - March 2011

சாணக்கியன் என்ற சொல் நம்மிடம் மிக பிரபலம். ஒருவர் புத்திசாலியாக இருந்தாலோ, ராஜாங்க அலுவல்களில் வல்லவராய் இருந்தாலோ, சமயோசிதம் மிக்கவராய் இருந்தாலோ சாணக்கியர் என்கிறோம். இது பொருத்தம்தான்!  சாணக்கியர் நவநந்தர்களை வீழ்த்தி சந்திரகுப்த மௌரியரை அரசாள வைத்தார் என்பது நமக்கு தெரியும். ஆனால் அதை எப்படி செய்தார் என்று தெரியுமா? அதை சற்று பார்ப்போம்.
    ஒருமுறை சாணக்கியர் இமயமலை பக்கம் பிப்பலவனமருகே (இன்றைய கோரக்பூர் அருகே) சென்று கொண்டிருந்தார். வெகு தூரம் நடந்து வந்ததால் அவர் களைத்திருந்தார். களைப்பினால் அப்படியே ஒரு மரத்தடியில் அமர்ந்து விட்டார். அருகில் பல சிறுவர்கள் மாடு மேய்த்து கொண்டிருந்தார்கள். மாடுகள் ஒரு பக்கம் மேய்ந்து கொண்டிருக்க, சிறுவர்களோ விளையாடிக்கொண்டு இருந்தார்கள். அப்பக்கம் பார்வையை திருப்பிய சாணக்கியரின் கவனம் ஒரு சிறுவன் பால் சென்றது. அவருக்கு சாமுத்திரிகா லட்சணம் தெரியும். அப்பையனிடம் ராஜகளை இருப்பதை பார்த்தார். 32லட்சணங்கள் அவனிடம் இருந்தது. அதிசயமாக அச்சிறுவர்கள் அப்பொழுது விளையாடி கொண்டிருந்ததே ராஜா விளையாட்டுதான். அஃதாவது ஒருவர் ராஜாவாக இருக்க, மற்றவர்களில் சிலர் மந்திரி, சேனாதிபதி, படை வீரர் என்று ஒரு அரசவை அங்கு நாடகமாக அரங்கேறியது. சாணக்கியருக்குத்தான் இதில் ஈடுபாடு உண்டே! மேலும், குழந்தைகள் மும்முரமாக விளையாடினால் அதில் கவனம் செல்வது இயல்புதானே! அவர் சுவாரயத்துடன் அதில் கவனம் செலுத்தினார். அந்த விளையாட்டில்  சாணக்கியர் கவனத்தை ஈர்த்த பையனே ராஜாவாக இருந்தான். வெறும் தலையில் ஒரு முண்டாசுதான் அவனுக்கு கிரீடம். அரையில் சிறு துணிதான் பட்டாடை. மாடு ஓட்டும் கோல்தான் உடைவாள். மந்திரிகள் வாய்பொத்தி நிற்க அவன் முகத்தில் ராஜகம்பீரம் நிரம்பி வழிந்தது. சிறுவன் உரத்த கணீர் குரலில் கட்டளைகள் பிறப்பித்தான். "யாரங்கே! என் முன் வாருங்கள். என்ன புது செய்தி. சொல்லுங்கள்" என்றான். நாடகம் என்றாலும் சாணக்கியர் அதில் பங்கேற்க விரும்பினார். அவர் ஒரு வயதான அந்தணராக தன்னை காட்டிக்கொண்டு அந்த ராஜாப்பையன் முன்பு சென்று "பிரபு! நான் ஒரு ஏழை அந்தணன். எனக்கு ஜீவனத்திற்கு ஏதாவது சன்மானம் தாருங்கள்" என்றார். தமது விளையாட்டினூடே ஒரு பெரியவர் புகுந்தார் என்பதினால், சிறுவர்கள் வியப்பும் சிரிப்புமாக ஒதுங்கி நின்றனர். ஆனால் இதில் அந்த ராஜா வேஷமிட்டவன் மட்டும் அம்மாதிரி விலகவில்லை. ராஜாவாக வேஷமிட்டிருந்தவன் சட்டென தன் மிடுக்கு களையாமல், தூரத்தில் தெரிந்த சில மாடுகளை காட்டி "அவற்றை ஓட்டி செல்லுங்கள். உமக்குத்தான் அவை" என்றான். அவன் காட்டிய மாடுகள் அந்த சிறுவர்களை சேர்ந்தது கூட அல்ல. சிறுவர்களே கூட இதை சிரிப்புடன் முணுமுணுத்தனர். சாணக்கியர் அதை கவனித்து, சற்றே உரத்த குரலுடன் "அம்மாடுகள் உங்களுடையது கூட இல்லை. பின் எப்படி நான் ஓட்டி செல்ல முடியும்" என கேள்வி எழுப்பினார்.
    அதற்கு அப்பையன் புருவத்தை உயர்த்தி "ஓய்! அந்தணரே! கேளும். வீரமுள்ளவனுக்கு எதுவும் சொந்தம். அது என்னிடம் குறைச்சலில்லை. மேலும் நான் இப்பொழுது மாடு மேய்க்கும் சிறுவனாக சொல்லவில்லை. ராஜாவாக சொல்கிறேன். என் ஆணை இது. மாடுகளை ஓட்டி செல்லும்" என்றான்.  "என்னவொரு பதில்! அதில்தான் எவ்வளவு உணர்ச்சி!" என அதைக்கேட்ட சாணக்கியர் தம் மனதுள் அசந்து போனார். அவன் இருக்கவேண்டிய இடம் வேறு என உணர்ந்தார். அந்த பையன் ஒரு வேடர் சமூஹத்தில் வாழ்ந்து வந்திருந்தான். அவனை சாணக்கியர் அங்கிருந்து மீட்டு தம்முடன் அழைத்து சென்றார். தமது சொந்த செலவிலேயே ஏழு ஆண்டுகள் ராஜாவிற்கான சகல வித்தைகளையும் வித்யையும் கற்பித்தார். யார் இதைப்பற்றி கேட்டாலும் "ராஜாவாக போகிறவனுக்கு இவை தெரிய வேண்டுமல்லவா" என்பார். அந்த பையனே பின்னாளில் உலகம் போற்றும் விதமாக அரசாண்ட சந்திரகுப்த மௌரியர். சாணக்கியர்தான் அவனை ராஜாவாக்கினார்!

வேடல் கிராமத்தில் ஒரு அழகான புராண கண்காட்சி - பாலகிருஷ்ணன்

காஞ்சிபுரம் ஏகாம்ரநாதர் மற்றும், திருப்புட்குழி விஜயராகவ பெருமாளை தரிசித்து வர ஒருநாள் நண்பருடன் கிளம்பினேன். ஸ்ரீபெரும்புதூர் தாண்டி காரில் வேடல் கிராமம் என்ற போர்டை தாண்டி செல்கையில் சாலையை ஒட்டி இடதுபுறம் ஒரு மிகப் பெரிய சிவனார் சிலை  கவனத்தை ஈர்த்தது. என்னவென நின்று பார்த்தால் அழகான வாலுடன் பெரிய நந்தி முன்னர் பரமசிவனார் கீழ் அஷ்ட திக்பாலர்கள் அழகாக அமைந்து இருந்தது. போர்டு ஒன்று கண்காட்சி இருப்பதாக தெரிவித்தது. விசாரித்தால் சற்று உள்ளே செல்ல சொன்னார்கள். உள்ளே சிறு மைதானம். ஒட்டினாற்போல் கட்டிடங்கள். அங்கு சென்று விசாரித்தோம். ஓரிடத்தில் காஞ்சி மஹாவாமிகளின்  புகைப்படங்கள் (சுமார் 20000)  அழகாக வைக்கப்பட்டு இருந்தது. மற்றொரு இடத்தில் பாகவதம், மஹாபாரதம், இராமாயண காட்சிகள் எல்லாம் பொம்மையாக செய்து வைக்கப்பட்டு இருந்தது. மின்சாரத்தை துவக்கினால்.  ஒவ்வொரு காட்சியில் இருந்த பொம்மையும் அந்தந்த லீலைக்கு தகுந்தாற்போல் இயங்கியது. கண்ணன் பிறப்பு, காத்யாயனி கம்சனை மிரட்டுவது, வெண்ணை திருடுவது, பல அசுர வதங்கள்,  என ஒன்று கூட விடாமல் அனைத்தும் இருந்தது. இப்படியே  ராமாயணமும், பாரதமும் இருந்தது. விஸ்வாமித்திரருடன் ராம, லக்குவர்கள், அனுமன் தசக்ரீவனை அடிப்பது, பாரதத்தில் அர்ஜீனன் வெல்வது, பாகவத அம்ருதமதன காட்சி எல்லாம் மிக அருமை. கோடை விடுமுறையில் எங்கெல்லாமோ குழந்தைகளை அழைத்து செல்கிறோம். இங்கு அழைத்து சென்றால் குழந்தைகளும் மிக சந்தோஷப்படும். மிக்க பயனும் உண்டு. பலரும் பயன் பெற வேண்டி, மிக அழகாக,  காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்கள் இதை நிர்மாணித்திருக்கிறார்கள். சென்று பயன் பெறலாமே!

ராமாயணத்தில் வரும் கால அளவுகள்

சீதாராம விவாஹம் நடக்கையில் ஸ்ரீராமனுக்கு  பதினைந்து வயது, சீதா தேவிக்கு ஆறு வயது. விவாஹமானபின் பன்னிரண்டு ஆண்டுகள் அயோத்யா ராஜ்யத்தில் இருந்தார்கள். இருபத்தேழாம் ஆண்டில் யுவராஜ பட்டாபிஷேகம் செய்ய தசரதர் முயற்சித்தார். கைகேயியின் வரத்தின்படி கானகஞ் சென்றபோது முதல் மூன்று நாள் ஜலத்தையே ஆஹாரமாகக் கொண்டார்கள். நாலாவது நாள் பழங்களைப் புஜித்தார்கள். ஐந்தாவது நாள் சித்திரக்கூடத்தில் வஸித்தனர். பன்னிரண்டரை ஆண்டுகள் சென்றபின் காட்டில் சூர்ப்பனகை வந்தாள்.
    மாக(மாசி) மாசம் கிருஷ்ணாஷ்டமியில் ப்ருந்த(விந்த) முகூர்த்தத்தில் ராவணன் ஸீதையைத் தூக்கிச் சென்றான். (வெகுநாள் கழித்து) துவாதசியன்று அனுமான் ஸீதையைத் தரிசித்தார். த்ரயோதசி அன்று ஆஞ்சநேயர் ப்ரும்மாஸ்த்ரத்தால் கட்டுப்பட்டு ராவணனிடம் சென்றார். பௌர்ணமியன்று திரும்பி வந்தார். மார்கழி ப்ரதமை முதல் ஐந்து நாட்கள் வழி நடந்து, ஸப்தமியன்று சூடாமணியை அனுமார் ஸ்ரீராமனிடம் அளித்தார். அஷ்டமியில் உத்தரபல்குநீ நக்ஷத்திரத்தில் விஜய(அபிஜித்) முகூர்த்தத்தில் யுத்தத்திற்குக் கிளம்பினார். ஏழு நாட்களில் வானர ஸேனை கடற்கரைக்குச் சென்றது. தைமாச சுக்ல ப்ரதமை முதல் த்ருதீயை வரை ஸ்ரீராமர் ப்ராயோபவேசமிருந்தார். தசமியிலிருந்து சதுர்தசீ வரை மூன்று நாட்களில் அணை கட்டப்பட்டது. பௌர்ணமி, ப்ரதமை, த்விதீயை இந்த மூன்று நாட்களில் ஸேதுவை ஸேனை கடந்தது. சதுர்தசியில் ஸேனைகள் ஸூவேல மலையில் கூட்டப்பட்டன.
    த்ரிதீயை முதல் தசமி வரை ஸேனைகளின் அமைப்பு. ஏகாதசியன்று சுகஸாரணர் வந்தனர். மாக(மாசி) சுக்ல ப்ரதமையில் அங்கதன் தூது சென்றான். மாகசுக்ல த்விதீயை முதல் வானர ராக்ஷஸ ஸேனை யுத்தம். மாகசுக்ல நவமி ராத்திரியில் இந்திரஜித் ராமலக்ஷ்மணர்களை நாகபாசத்தால் கட்டினான். வாயுவினது தூண்டுதலால் ஸ்ரீராமர் கருடனை நினைத்தார். தசமியன்று நாகபாசத்திலிருந்து விடுபட்டார். த்வாதசியன்று ஆஞ்சநேயர் தூம்ராக்ஷனைக் கொன்றார். த்ரயோதசியில் அகம்பகனைக் கொன்றார். மாக கிருஷ்ண த்விதீயையிலிருந்து மூன்று நாள் ராம-ராவண யுத்தம் நடந்தது. த்வாதசியன்று கும்பகர்ண வதம்; அடுத்த பக்ஷம் ஏகாதசியன்று அனுமார் ஓஷதி (சஞ்சீவினி) பர்வதம் கொண்டுவந்தார். த்ரயோதசியன்று இந்தரஜித் வதம். சித்திரை சுக்ல நவமியில் லக்ஷ்மணன் சக்தியால் மூர்ச்சித்தது. ஏகாதசியன்று மாதலி ராமனுக்கு இந்த்ர ரதம் கொண்டுவந்தது. க்ருஷ்ண சதுர்த்தசியன்று ராவண வதம் ஆனது. சீதை மொத்தம் ஒரு வருஷம் எழுபது நாள்  ராமனை விட்டுப் பிரிந்திருந்தாள். நாற்பத்திரண்டாவது வயதில் ஸ்ரீராமனும் முப்பத்திமூன்றாம் வயதில் ஸீதையும் ராஜசிம்மாசனத்தில் அமர்ந்தார்கள்.  மாசிமாச சுக்ல த்விதீயையன்று ஆரம்பித்த யுத்தம் சைத்ர(சித்திரை) க்ருஷ்ண சதுர்த்தசி வரை எண்பத்தேழு நாட்கள் நடந்தது. இடையில் பதினைந்து நாட்கள் இருசாராரும் ஓய்வெடுத்துக் கொண்டனர். க்ரமமாக எழுபத்தேழு நாள் யுத்தம் நடந்தது. வைஸாக(வைகாசி) சுத்த த்விதீயையில் விபீஷண பட்டாபிஷேகம் நடந்தது. த்ருதீயையில் ஸீதாதேவி அக்னி ப்ரவேஸம் செய்தாள். நந்திக்ராமத்தில் சஷ்டியன்று புஷ்பக விமானத்தில் ராமன் ஸீதையுடன் வந்திறங்கினார். ஸப்தமியில் ஸ்ரீராம பட்டாபிஷேகம் நடைபெற்றது.

பாகவத பழம் இரண்டாம் பாகம் - ஸ்ரீஸ்வாமிஜி - 12

சௌனகாதி மஹரிஷிகளால் கேள்விகள் கேட்கப்பட்ட ஸூதர் பரம ஸந்தோஷத்தை அடைந்தார். இவரின் பெயர் உக்ரச்ரவஸ், தன் தந்தையான ரோமஹர்ஷணரிடத்திலிருந்து, ஆசை ஆசையாக கிருஷ்ண கதைகள் கேட்பாராம். மஹரிஷிகளால் கேட்கப்பட்ட கேள்விகள், இவருடைய ஹ்ருதயத்தில் மேலும் மேலும் பக்தி பாவங்களைத் தூண்டியது. அதனால், அவருடைய மேனி சிலிர்த்தது. இவருக்கு ரௌமஹர்ஷணி என்ற பெயரும் உண்டு. ரோமஹர்ஷணருடைய பையன் என்று இதற்கு பொருள்.

"இதி ஸம்ப்ருSன ஸம்ஹ்ருஷ்டோ விப்ராணாம் ரௌமஹர்ஷிணி:'' (1.2.1)
    "நினைத்த மாத்திரத்திலேயே ஸர்வ ஜனங்களின் பாவங்களைப் போக்கும் கங்கைக் கரையிலே தனக்கு ஸ்ரீமத் பாகவதம் சொல்லும் பாக்கியம் கிடைத்ததே!'' என்று நினைத்து ஆனந்தப்பட்டார். காயத்ரீ, கங்கா, கோபீசந்தனம் ஆகிய மூன்றும் பக்தியை வளர்க்கும். அத்தகைய கங்கைக் கரையில் அல்லவோ நமக்கு பாகவதம் சொல்லும் பாக்கியம்!'' என்று ஆனந்தப் பட்டார். "யமுனைக் கரையில் விளையாடிய பாலகனின் கதையை கங்கைக் கரையில் சொல்லும் பாக்கியம் நமக்கு கிடைத்ததே!'' என்று நினைத்து ஆனந்தப்பட்டார். "இதிஹாஸ புராணங்கள் எல்லாம் எந்த நைமிசாரண்ய க்ஷேத்திரத்தில் அரங்கேற்றப்பட்டதோ, அந்த க்ஷேத்திரத்தில் தனக்கு பகவத்குணம் சொல்லும் பாக்கியம் கிடைத்ததே'' என்று நினைத்து ஆனந்தப்பட்டார். ஆஹிதாக்னிகளும், யாஜிகளுமான ரிஷிகள் தன்னையும் ஒரு பொருட்டாக மதித்து பகவத்குணம் சொல்லச் சொன்னார்களே என்று நினைத்து ஆனந்தப்பட்டார். பகவத்குணம் சொல்வதே பகவானுடைய கிருபையால்தான் கிடைக்கும். அப்படி பகவத்குணம் சொல்பவர்கள், இத்தகைய பாக்கியம் குருகிருபையாலும், ஹரிகிருபையாலும்தான் கிடைத்தது என்பதை உணர்வதுதான் உண்மையான கிருபை. பிரும்ம நிஷ்டரான சுகப்ரும்மமே பகவத்குணம் சொல்ல ஆசைப்பட்டார் என்பதிலிருந்து, நமக்கு பகவத்குணம் சொல்வதின் பெருமை புரியவரும். எப்படியாவது இந்த சபையில் பாகவதம் சொல்லி விட வேண்டும் என்று மிகவும் ஆவல் கொண்டிருந்தார் சூதர். சௌனகாதிகளும் அதையே கேட்டதனால், மிகவும் ஆனந்தமடைந்தார். பகவத்குணம் இரண்டு மணிநேரம்தான் நடக்கும். ஆனால் அதைப்பற்றிய சிந்தனை ஹ்ருதயத்தில் ஓடிக் கொண்டிருந்தால்தான் பகவத்குணம் சொல்லமுடியும். சொல்லிமுடித்த பிறகும் தூக்கமே வராது. அதே சிந்தனை அலைமோதும். வேதவியாசரால் புத்திர வாஞ்சையால் அழைக்கப்பட்டும், எந்த சுகபகவான் தன் போக்கில் சென்று கொண்டிருந்தாரோ, அவர் பொருட்டு ஸகல தாவரஜங்கமங்களும் "ஏன்? ஏன்?'' என்று பிரதி த்வனி கொடுத்ததோ அந்த சுகபகவானை ஸூதர் தியானித்தார்.
"ய: ஸ்வானுபாவம் அகில ருதிஸாரம் ஏகம்
அத்யாத்ம தீபம் அதிதிதீர்ஷதாம் தமோந்தம்
ஸம்ஸாரிணாம் கருணயாஹ புராணகுஹ்யம்
தம் வ்யாஸ ஸூனும் உபயாமி குரும் முனீனாம்'' (1.2.3)
    சாஸ்திரங்கள் அநேகம். உலகத்தில் உள்ள ஸர்வ ஜனங்களின் குணங்களையும், ரஸிகத்தன்மையையும் அனுசரித்து அவைகள் சொல்லப்பட்டுள்ளன. ஆனால், அவை அனைத்தும் சாதனம்தான். அந்த சாஸ்திரங்களில் சொல்லியுள்ள விஷயங்களை அதில் சொல்லியுள்ளபடி, சிறிதும் ஊடிஅயீசடிஅளைந செய்யாமல் அனுஷ்டானம் செய்தால், நேரடியாகவோ, அதன் பலனாகவோ (சாதனம்) ஸாத்யமாகும். ஆனால், ஸ்ரீமத்பாகவதமோ அப்படியில்லை. இதில் சொல்லியிருக்கின்ற எதையும் அனுஷ்டிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பாகவத படனம், அல்லது ச்ரவணம் ஒன்றே ஜீவன்முக்தியைக் கொடுத்துவிடும். ஸ்ரீமத்பாகவதம் எல்லா ச்ருதிகளின் ஸாரமாக உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் மஹான்களின் பிரத்யக்ஷ அனுபவமாகவும் உள்ளது. இதற்கு சமமாக வேறு ஒரு சாதிரத்தை சொல்லலாம் என்றால், ஈரேழு லோகத்தில் தேடினாலும் கிடைக்காதாம். அதனாலேயே ஏகம்' என்று தனிப்பெருமையுடன் விளங்குகின்றது. ஸம்ஸாரம் என்ற அக்ஞான இருளில் உழன்று கொண்டிருக்கும் ஜனங்களுக்கு, கரையேற்றும் ஞான தீபமாக உள்ளது ஸ்ரீமத்பாகவதம். இவ்வாறு மீண்டும் இந்த ஸ்லோகத்தில் சுகரை தியானிக்கின்றார். பிறகு நாராயணர், நரநாராயணர்கள், ஸரஸ்வதி, வியாஸர், மற்றும் ஜயம் என்ற பெயரும் உடைய பாகவதத்தை நமஸ்கரிக்கின்றார். "மஹான்கள் எப்பொழுதும் அற்பமான விஷயங்களைப்பற்றி பேச மாட்டார்கள். கம்பீரமான விஷயங்களைத்தான் பேசுவார்கள். அப்படி பேசும் விஷயங்களே பகவத் விஷயமாகத்தான் இருக்கும். அதோடு மட்டுமல்லாமல், அவை, உலகத்திற்கு எக்காலத்திற்கும் க்ஷேமத்தைக் கொடுக்கும். அப்படிப்பட்ட கேள்விதான் சௌனகாதி ரிஷிகளால் கேட்கப்பட்டது'' என்று கூறி சூதர் சௌனகாதி மஹரிஷிகளின் கேள்வியைக் கொண்டாடுகிறார்.

பக்தர்களின் கேள்விகளுக்கு ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்களின் பதில்கள்

கேள்வி: நான் ஏதோ அறியாமல் சில தவறுகள் செய்து விட்டேன். அதை நினைத்து நினைத்து என் மனது என்னை உறுத்திக்கொண்டே இருக்கின்றது. நான் என்ன செய்யலாம்?
பதில்: கருணையே வடிவான மஹரிஷிகள் எந்த எந்த தவறு செய்தாயோ, அதற்கு தகுந்தாற்போல் பிராயச்சித்தங்கள் நிறைய சொல்லி இருக்கின்றார்கள். தாங்கள் நல்ல சாதிரம் படித்தவரை அணுகி, அதற்கான பிராயச்சித்தங்கள் செய்து கொள்ளலாம்.

கேள்வி: ஒரு தவறு நடந்திருக்குமோ அல்லது நடந்திருக்காதோ என்று சரியாக தெரியவில்லை. அப்படி இருக்கும்பொழுது நடந்து விட்டதாக நினைத்து பிராயச்சித்தம் செய்து கொள்ளலாமா?
பதில்: செய்து கொள்ளலாம். தவறு இல்லை. பிராயச்சித்தங்கள் தவறு நடந்திருந்தால் அதை போக்கி விடும். அப்படி எதுவும் தவறு நடக்கவில்லை என்றால் நாம் செய்யும் பிராயச்சித்தங்கள் புண்யபலனாக மாறி விடும்.

கேள்வி: இதிஹாஸங்கள் இரண்டா மூன்றா?
பதில்: இதிஹாஸங்கள் மூன்று.

கேள்வி: மூன்றாவது என்ன?
பதில்: சிவ ரஹயம்.

கேள்வி: ஏன் அதை பெரும்பாலும் பாராயணமோ அல்லது பிரவசனமோ செய்வதில்லை?
பதில்: அதில் சொல்லப்பட்டிருக்கின்ற பல விஷயங்களை, பரிபக்குவமில்லாதவர்கள் விபரீதமாக புரிந்துகொள்ள நேரிடும் என்பதாலேயே, பெரியவர்கள் இன்று வரையிலும் அதை பிரகாசப்படுத்தவில்லை.

மதுரமான மஹனீயர் - 180 - Dr.A.Bhagyanathan - March 2011

பிப்ரவரி 13ஆம் தேதி நாமமுத்து நகரான தூத்துக்குடியில் புதிய நாமத்வார் ஸ்ரீஸ்வாமிஜி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அன்று திரளான மக்கள் வந்திருந்து குருவருளும் திருவருளும் பெற்று சென்றனர். அன்று, ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் வழங்கிய அருளுரையிலிருந்து சில விஷயங்களை இங்கு பார்ப்போம்.
    "வருவாய் வருவாய் குருநாதா! வந்தருள் புரிவாய் குருநாதா!" என்று ஒரு அழகான நாமாவளி. அதில் ஒரு வரி "கனவு பலித்தது குருநாதா! மனமும் குளிர்ந்தது குருநாதா!" என்று வரும். அதுபோல் எனக்கு ஒரு நீண்ட நாள் கனவு உண்டு. நான் தனிமையில் அமர்ந்திருக்கும்பொழுதும், ஏன் எப்பொழுதுமே மனதில் ஒரு விஷயத்தை கற்பனை செய்து ஆனந்தப்படுவேன். ஒரு பெரிய ஹால் இருக்க வேண்டும்; அந்த ஹாலின் ஆரம்பத்தில் ஒரு மேடை இருக்க வேண்டும்; அதில் ஒரு அழகான ராதாகிருஷ்ணரை பிரதிஷ்டை செய்ய வேண்டும்; அந்த திவ்ய மூர்த்திகளுக்கு பிரேமிகவரதன் மாதுரிஸகீ என்று பெயர்; இந்த அமைப்பிற்கு நாமத்வார் என்று பெயர். இதற்குள் ஜாதி, மத, இன, மொழி, பொருள் போன்ற எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லோரும் வரலாம்; இதற்குள் எந்த ஸம்பிரதாய சடங்குகளும் கிடையாது; வருபவர்கள் எல்லோரும் வந்து மஹாமந்திரகீர்த்தனம் செய்ய வேண்டும்; இந்த இடங்களில் வேறு நாமங்களும் ஜபிக்கப்படமாட்டாது; வேறு பாடல்களும் பாடப்பட மாட்டாது. Focussedஆக மஹாமந்திர கீர்த்தனம் மட்டுமே இருக்கும். இந்த கீர்த்தனம் ஒன்றுதான் கலியின் கொட்டத்தை அடக்கக் கூடியது. பிரார்த்தனைகளை நிறைவேற்றித் தரக்கூடியது. இங்கு காலை மாலை இரண்டு வேளைகளிலும் மாதுரிஸகியுடன் கூடிய பிரேமிக வரதனுக்கு லகுவான (simple) ஒரு பூஜை நடக்கும். இந்த நாமத்வாருக்கு வரும் பக்தர்கள் விருப்பப்பட்டால் நாமம் சொல்லி பிறந்தநாள், நாமம் சொல்லி கல்யாணம், நாமம் சொல்லியே எல்லாம் நடத்தி வைக்கப்படும். இந்த நாமத்வாருக்கு வருபவர்களை ஏமாற்றத்துடன் பகவான் வெளியில் அனுப்பவே மாட்டான். இப்படி உலகம் முழுவதும், என்னுடைய ஜீவித காலத்திற்குள்ளேயே பல நாமத்வார்கள் உருவாக வேண்டும். என்னுடைய காலத்திற்கு பிறகும் இது மாதிரியான நாமத்வார்கள் தோன்றிக்கொண்டே இருக்க வேண்டும். மக்கள்தொகை (Population) நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. Resources (இயற்கை வளங்கள்) குறைந்துகொண்டே இருக்கின்றது. இந்த முக்கியமான இரண்டு காரணங்களால் மக்களின் வாழ்க்கை தரம், முறை எல்லாவற்றிலும் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றது. இன்னும் காலம் போகப்போக இது (நாமகீர்த்தனம்) ஒன்றுதான் கதி என்பதை, உலகம் நன்றாக உணரும். அதற்கு இப்பொழுதே நாம் விதை விதைத்து விட வேண்டும். ஏன் என்றால், எதையும் செய்வதற்கு தகுதியை இழந்து வரும்பொழுதே, அப்பொழுதும் ஒரு வழி இருக்கின்றது என்பதை இப்பொழுதே கூறி விட வேண்டும். இல்லாவிட்டால் ஒரு வெற்றிடமும் வெறுமையும் தோன்றி விடும். இன்று தமிழ்நாட்டில் மஹாமந்திரம் தெரியாதவர்களே கிடையாது. நான் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஊருக்கு செல்லும்பொழுதும், பத்தாயிரக்கணக்கில் பக்தர்கள் கூடி கீர்த்தனம் செய்கின்றனர். ஆங்காங்கே பல கோவில்களில், பல பேட்டைகளில் கீர்த்தனம் செய்கின்றார்கள். இவர்களை ஒரு அருட்சக்தி நடத்தி வருகின்றது. இந்த மஹாமந்திரகீர்த்தனம் அகண்டமாக தமிழ்நாட்டில் அம்பாசமுத்திரம், ஆம்பூர், அணைக்கட்டு, சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அம்பத்தூர், ஆவடி, சேரன்மகாதேவி, செய்யார், கோயம்புத்தூர், கடலூர், தாராபுரம், வத்தலகுண்டு, ஈரோடு, கோவிந்தபுரம், குடியாத்தம், கூடுவாஞ்சேரி, கல்பாக்கம், காஞ்சிபுரம், காரைக்கால், காரைக்குடி, கரூர், கொட்டையூர், கோவில்பட்டி, கிருஷ்ணகிரி, மதுரை, மாம்பாக்கம், கோவூர், மறைமலைநகர், மயிலாடுதுறை,  ஊட்டி, படப்பை, பழனி, பண்ருட்டி, பரமக்குடி, பெரியகுளம், பொள்ளாச்சி, பாண்டிச்சேரி, நாகப்பட்டினம், ரவணசமுத்திரம், சேலம், சாந்தவாசல், சோளிங்கர், தென்மேல்பாக்கம், சிவகாசி, தஞ்சாவூர், தேனீ, திருநாங்கூர், திருச்சிராப்பள்ளி, திருநின்றவூர், திருப்பூர், திருத்தணி, திருத்துறைப்பூண்டி, திருவள்ளூர், திருவண்ணாமலை, திண்டிவனம், திருவாரூர், தூத்துக்குடி, உடுமலைப்பேட்டை, வேலூர், விருதுநகர், தருமபுரி, பல்லடம், விக்ரமசிங்கபுரம், வீரவநல்லூர், கெங்குவார்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு(விருதுநகர் மாவட்டம்), கம்பம், கரியாபட்டி, அருப்புகோட்டை, மங்களூர்(கடலூர் மாவட்டம்), வாலாஜா, காவேரிப்பாக்கம், சேவூர்(ஆரணி), பேர்ணாம்பட்டு, பெருமாள்பட்டு, பிள்ளைப்பாக்கம், வெள்ளரை, மணிமங்கலம், குண்டுபெரும்பேடு, வல்லியூர் இப்படி பல ஊர்களிலும் ஹைதராபாத்,  தானே (பாம்பே), நாசிக், பெங்களூர், பாம்பே, பாலக்காடு, கொச்சின் ஆகிய  நகரங்களிலும் மற்றும் அமெரிக்கா, நியூசிலாந்து, பஹ்ரைன்,  இந்தோனேஷியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கத்தார், மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகள்,  நைஜீரியா, பின்லாந்து, மஸ்கட்,  ஜெர்மனி, ஹாங்காங், பிஜி தீவுகள் ஆகிய நாடுகளிலும் நடந்து வருகின்றது. இது தவிர, பிரத்யேகமாக நாமத்வார் கேந்திரங்கள் மதுரபுரி கல்யாண ஸ்ரீனிவாசபெருமாள் கோவில், அண்ணாநகர், பம்மல், திருமதுரா களத்துப்பட்டு,  ஸ்ரீபெரும்புதூர்,  அம்பாசமுத்திரம், வத்தலகுண்டு, சேலம், சிவகாசி, பெரியகுளம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, கடலூர், நாசிக், எர்ணாகுளம் ஆகிய இடங்களில் இந்தியாவிலும், சிட்னி (ஆதிரேலியா), கோலாலம்பூர் (மலேசியா), டெக்சா (அமெரிக்கா) ஆகிய வெளிநாடுகளிலும் இயங்கி வருகிறது. அதன் ஒரு முயற்சியாக ஸ்ரீஸ்வாமிஜியின் முரட்டு பக்தர் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் திரு.கதிரேசன் அவர்கள் பிறரிடமிருந்து ஒரு பைசா கூட வசூல் செய்யாமல் தன்னுடைய சொந்த முயற்சியினாலும், பொருளினாலும் அழகான இந்த நாமத்வாரை அமைத்து உள்ளார். அதுவும் தூத்துக்குடியின் நடு மையத்தில் அழகாக அமைந்துள்ளது. இந்த நாமத்வார், நான் எப்படியெல்லாம் நினைத்து வந்தேனோ அப்படியே அமைந்து உள்ளது. நான் வரும்பொழுது இங்கு கூடியிருந்த பக்தர்கள் எல்லாம் "கனவு பலித்தது குருநாதா" என்று பாடினார்கள். ஆனால் உண்மையில் என் கனவு இன்றுதான் பலித்தது என்று நான்தான் பாடவேண்டும். தூத்துக்குடி நாமத்வாருக்குள் யார் எல்லாம் வருகின்றார்களோ அவர்களை எல்லாம் பகவான் ஏமாற்றவே மாட்டான். ஏன் என்றால் கண்ணன் அருளே வடிவானாவன்" என்று ஸ்ரீஸ்வாமிஜி அருளுரையில் குறிப்பிட்டார்கள்.

ஸ்ரீஸ்வாமிஜியின் மீது இயற்றப்பட்ட கீர்த்தனம்

 புரிந்துகொண்டேன் சிறிதே உன்னை புரிந்து கொண்டேன் முரளீதரா
சட்டம் படித்த எனக்கு அதை சட்டநாதர் புரியவைத்தார் முரளீதரா
பள்ளியில் பெருமாளை எங்கோ கண்டு ஏங்கினாய் முரளீதரா
ஆனால் வெங்கடேசனோ திருப்பதியில் நினை காண ஏங்கினான் முரளீதரா

நின் பெற்றோர்கள் என்ன தவம் செய்தனரோ அறியேன் முரளீதரா
கருவினிலே உன்னை இறை பக்தியும் ஏக்கமும் ஆட்கொள முரளீதரா
தளிரிலிருந்து ராதே கூவினாள் உன் செவியில் ராதே ராதே என அல்லவா முரளீதரா
அந்த கள்ளன் கண்ணனோ உன்னுடன் கண்ணாமூச்சி ஆடினானோ முரளீதரா

பரமஹம்ஸர் நரேனுக்கு காளிமாதாவை காட்டினாள் முரளீதரா
உனக்கோ ராதேயும் கிருஷ்ணனும் வலிய வந்து காட்சியளிக்கின்றனர் முரளீதரா
ஆயினும் உனக்கு ஏன் இன்னும் தீரா ஏக்கம் முரளீதரா
நாங்கள் அவ்வனுபவத்தில் லயிக்க வேண்டும் என்ற ஏக்கம்தானே முரளீதரா

குமரி வேண்டாம் மஹாரண்யமே சிவன் தலம் என்று ஹனுமனே                  முன்னரேயே உணர்த்தி எழுந்தருளினான் அல்லவா முரளீதரா
உன் மஹாமந்திரத்தை திரமாக மூலதானத்தில் கேட்கவேண்டும்                                              என்றுதானே அவன் வந்தான் முரளீதரா
ஹனுமனுக்கு ராமன் என்றால் அருணாசலத்திற்கோ       யோகி ராம்சுரத்குமார்தானே முரளீதரா
அவனுக்கு ராமன் பித்து எனக்கோ ராம்சுரத்குமார் பித்து முரளீதரா

பாரதியோ சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா என பாடினான் முரளீதரா
நீயோ தளிரிலிருந்து ராதே ராதே ராதே என்று கூவுகிறான்                                                                  என பாடுகிறாய் முரளீதரா
உண்மையை சொல்லிவிடு உன் மனம் கல்லா முரளீதரா
எங்கள் கல்மனங்களை கரைக்கும் உன் மனம் எப்படி கல்லாகும் முரளீதரா

உன் உள்ளே இருக்கும் ராதேகிருஷ்ணனை நீ கண்டுகொண்டே                                இருக்கிறாய் என்பதுதானே உண்மை முரளீதரா
உனக்கு வெளியே தோன்றும் காட்சிகளிலும் அதே                                                  ராதேகிருஷ்ணன்தானே முரளீதரா
நீ வேறில்லை ராதேகிருஷ்ணன் வேறில்லையே இனியும் ஏன் ஏக்கம் முரளீதரா
அம்மாதிரியே ராம்சுரத்குமாரனை என் உள்ளும் வெளியும்                                                                      இருத்திடுவாய் முரளீதரா

என்ன என்ன லீலைகளை யோகிஜி புரிந்திடுவார் என நான் அறியேன்                                                    ஆனாலும் நீ அறிவாய் முரளீதரா
தொழில் போதும் எந்தையின் பணிக்கே என்றவர் கூற சரியென                                                                            வந்தேன் முரளீதரா
மற்றவர்களோ எனை பித்தன் என கூற அப்பித்தே எனக்கு பிடித்தமானது                                                                            என்றேன் முரளீதரா
உன் மீதும் எனக்கு பித்து பிடிக்க யோகிஜியின் திருவிளையாடல்                                                   என்னவென சொல்வேன் முரளீதரா

குறிப்பு: நீதியரசர் ஸ்ரீஅருணாசலம் அவர்களால் 26.12.2010 அன்று இயற்றப்பட்ட கீர்த்தனம் (Justice Sri T.S.Arunachalam, LifeTime Trustee, YogiRamSuratKumar Ashram, Thiruvannamalai)


மகாபாரதத்திலிருந்து - March 2011

இந்த உலக வாழ்க்கையே மிகவும் துன்பகரமானது. இதில் சுதந்திரத்திற்கு இடமில்லை. தர்மத்தைச் செய்வது, பொருளை நாடுவது, இன்பத்தை தேடுவது என்று மூன்றும் சேர்ந்தே செய்ய வேண்டி உள்ளது. அப்படி செய்யும்போது முரண்பாடுகள் தோன்றுகின்றன. இதை தவிர்ப்பதற்காக சிலர் "மோக்ஷத்தை நாடுவது உயர்ந்தது" என்கின்றார்கள். ஆனால், அதுவோ எல்லோராலும் அடையக்கூடிய தன்மையுடையது அல்ல. அந்த பக்குவம் எல்லோருக்கும் கிட்டக்கூடியது அல்ல. இன்பத்தை அனுபவிப்பதோ என்றுமே தாற்காலிகமானது. பொருளை நாடினாலும் துன்பமே வருகிறது. பொருளை சம்பாதிப்பதும் கடினம். செலவு செய்யும் பொழுதும் மனக்கஷ்டம். அதை காப்பாற்றுவதிலும் கவலை. இழந்தாலோ பெரும் கவலை. ஆகையால் எந்த வழியில் பார்த்தாலும் இந்த உலக வாழ்க்கையில் நிம்மதிக்கு இடமில்லை.  - மகாபாரதம்