Thursday, March 3, 2011

ராமாயணத்தில் வரும் கால அளவுகள்

சீதாராம விவாஹம் நடக்கையில் ஸ்ரீராமனுக்கு  பதினைந்து வயது, சீதா தேவிக்கு ஆறு வயது. விவாஹமானபின் பன்னிரண்டு ஆண்டுகள் அயோத்யா ராஜ்யத்தில் இருந்தார்கள். இருபத்தேழாம் ஆண்டில் யுவராஜ பட்டாபிஷேகம் செய்ய தசரதர் முயற்சித்தார். கைகேயியின் வரத்தின்படி கானகஞ் சென்றபோது முதல் மூன்று நாள் ஜலத்தையே ஆஹாரமாகக் கொண்டார்கள். நாலாவது நாள் பழங்களைப் புஜித்தார்கள். ஐந்தாவது நாள் சித்திரக்கூடத்தில் வஸித்தனர். பன்னிரண்டரை ஆண்டுகள் சென்றபின் காட்டில் சூர்ப்பனகை வந்தாள்.
    மாக(மாசி) மாசம் கிருஷ்ணாஷ்டமியில் ப்ருந்த(விந்த) முகூர்த்தத்தில் ராவணன் ஸீதையைத் தூக்கிச் சென்றான். (வெகுநாள் கழித்து) துவாதசியன்று அனுமான் ஸீதையைத் தரிசித்தார். த்ரயோதசி அன்று ஆஞ்சநேயர் ப்ரும்மாஸ்த்ரத்தால் கட்டுப்பட்டு ராவணனிடம் சென்றார். பௌர்ணமியன்று திரும்பி வந்தார். மார்கழி ப்ரதமை முதல் ஐந்து நாட்கள் வழி நடந்து, ஸப்தமியன்று சூடாமணியை அனுமார் ஸ்ரீராமனிடம் அளித்தார். அஷ்டமியில் உத்தரபல்குநீ நக்ஷத்திரத்தில் விஜய(அபிஜித்) முகூர்த்தத்தில் யுத்தத்திற்குக் கிளம்பினார். ஏழு நாட்களில் வானர ஸேனை கடற்கரைக்குச் சென்றது. தைமாச சுக்ல ப்ரதமை முதல் த்ருதீயை வரை ஸ்ரீராமர் ப்ராயோபவேசமிருந்தார். தசமியிலிருந்து சதுர்தசீ வரை மூன்று நாட்களில் அணை கட்டப்பட்டது. பௌர்ணமி, ப்ரதமை, த்விதீயை இந்த மூன்று நாட்களில் ஸேதுவை ஸேனை கடந்தது. சதுர்தசியில் ஸேனைகள் ஸூவேல மலையில் கூட்டப்பட்டன.
    த்ரிதீயை முதல் தசமி வரை ஸேனைகளின் அமைப்பு. ஏகாதசியன்று சுகஸாரணர் வந்தனர். மாக(மாசி) சுக்ல ப்ரதமையில் அங்கதன் தூது சென்றான். மாகசுக்ல த்விதீயை முதல் வானர ராக்ஷஸ ஸேனை யுத்தம். மாகசுக்ல நவமி ராத்திரியில் இந்திரஜித் ராமலக்ஷ்மணர்களை நாகபாசத்தால் கட்டினான். வாயுவினது தூண்டுதலால் ஸ்ரீராமர் கருடனை நினைத்தார். தசமியன்று நாகபாசத்திலிருந்து விடுபட்டார். த்வாதசியன்று ஆஞ்சநேயர் தூம்ராக்ஷனைக் கொன்றார். த்ரயோதசியில் அகம்பகனைக் கொன்றார். மாக கிருஷ்ண த்விதீயையிலிருந்து மூன்று நாள் ராம-ராவண யுத்தம் நடந்தது. த்வாதசியன்று கும்பகர்ண வதம்; அடுத்த பக்ஷம் ஏகாதசியன்று அனுமார் ஓஷதி (சஞ்சீவினி) பர்வதம் கொண்டுவந்தார். த்ரயோதசியன்று இந்தரஜித் வதம். சித்திரை சுக்ல நவமியில் லக்ஷ்மணன் சக்தியால் மூர்ச்சித்தது. ஏகாதசியன்று மாதலி ராமனுக்கு இந்த்ர ரதம் கொண்டுவந்தது. க்ருஷ்ண சதுர்த்தசியன்று ராவண வதம் ஆனது. சீதை மொத்தம் ஒரு வருஷம் எழுபது நாள்  ராமனை விட்டுப் பிரிந்திருந்தாள். நாற்பத்திரண்டாவது வயதில் ஸ்ரீராமனும் முப்பத்திமூன்றாம் வயதில் ஸீதையும் ராஜசிம்மாசனத்தில் அமர்ந்தார்கள்.  மாசிமாச சுக்ல த்விதீயையன்று ஆரம்பித்த யுத்தம் சைத்ர(சித்திரை) க்ருஷ்ண சதுர்த்தசி வரை எண்பத்தேழு நாட்கள் நடந்தது. இடையில் பதினைந்து நாட்கள் இருசாராரும் ஓய்வெடுத்துக் கொண்டனர். க்ரமமாக எழுபத்தேழு நாள் யுத்தம் நடந்தது. வைஸாக(வைகாசி) சுத்த த்விதீயையில் விபீஷண பட்டாபிஷேகம் நடந்தது. த்ருதீயையில் ஸீதாதேவி அக்னி ப்ரவேஸம் செய்தாள். நந்திக்ராமத்தில் சஷ்டியன்று புஷ்பக விமானத்தில் ராமன் ஸீதையுடன் வந்திறங்கினார். ஸப்தமியில் ஸ்ரீராம பட்டாபிஷேகம் நடைபெற்றது.

No comments:

Post a Comment