Thursday, March 3, 2011

சந்திரகுப்தர் - Balakar Story - March 2011

சாணக்கியன் என்ற சொல் நம்மிடம் மிக பிரபலம். ஒருவர் புத்திசாலியாக இருந்தாலோ, ராஜாங்க அலுவல்களில் வல்லவராய் இருந்தாலோ, சமயோசிதம் மிக்கவராய் இருந்தாலோ சாணக்கியர் என்கிறோம். இது பொருத்தம்தான்!  சாணக்கியர் நவநந்தர்களை வீழ்த்தி சந்திரகுப்த மௌரியரை அரசாள வைத்தார் என்பது நமக்கு தெரியும். ஆனால் அதை எப்படி செய்தார் என்று தெரியுமா? அதை சற்று பார்ப்போம்.
    ஒருமுறை சாணக்கியர் இமயமலை பக்கம் பிப்பலவனமருகே (இன்றைய கோரக்பூர் அருகே) சென்று கொண்டிருந்தார். வெகு தூரம் நடந்து வந்ததால் அவர் களைத்திருந்தார். களைப்பினால் அப்படியே ஒரு மரத்தடியில் அமர்ந்து விட்டார். அருகில் பல சிறுவர்கள் மாடு மேய்த்து கொண்டிருந்தார்கள். மாடுகள் ஒரு பக்கம் மேய்ந்து கொண்டிருக்க, சிறுவர்களோ விளையாடிக்கொண்டு இருந்தார்கள். அப்பக்கம் பார்வையை திருப்பிய சாணக்கியரின் கவனம் ஒரு சிறுவன் பால் சென்றது. அவருக்கு சாமுத்திரிகா லட்சணம் தெரியும். அப்பையனிடம் ராஜகளை இருப்பதை பார்த்தார். 32லட்சணங்கள் அவனிடம் இருந்தது. அதிசயமாக அச்சிறுவர்கள் அப்பொழுது விளையாடி கொண்டிருந்ததே ராஜா விளையாட்டுதான். அஃதாவது ஒருவர் ராஜாவாக இருக்க, மற்றவர்களில் சிலர் மந்திரி, சேனாதிபதி, படை வீரர் என்று ஒரு அரசவை அங்கு நாடகமாக அரங்கேறியது. சாணக்கியருக்குத்தான் இதில் ஈடுபாடு உண்டே! மேலும், குழந்தைகள் மும்முரமாக விளையாடினால் அதில் கவனம் செல்வது இயல்புதானே! அவர் சுவாரயத்துடன் அதில் கவனம் செலுத்தினார். அந்த விளையாட்டில்  சாணக்கியர் கவனத்தை ஈர்த்த பையனே ராஜாவாக இருந்தான். வெறும் தலையில் ஒரு முண்டாசுதான் அவனுக்கு கிரீடம். அரையில் சிறு துணிதான் பட்டாடை. மாடு ஓட்டும் கோல்தான் உடைவாள். மந்திரிகள் வாய்பொத்தி நிற்க அவன் முகத்தில் ராஜகம்பீரம் நிரம்பி வழிந்தது. சிறுவன் உரத்த கணீர் குரலில் கட்டளைகள் பிறப்பித்தான். "யாரங்கே! என் முன் வாருங்கள். என்ன புது செய்தி. சொல்லுங்கள்" என்றான். நாடகம் என்றாலும் சாணக்கியர் அதில் பங்கேற்க விரும்பினார். அவர் ஒரு வயதான அந்தணராக தன்னை காட்டிக்கொண்டு அந்த ராஜாப்பையன் முன்பு சென்று "பிரபு! நான் ஒரு ஏழை அந்தணன். எனக்கு ஜீவனத்திற்கு ஏதாவது சன்மானம் தாருங்கள்" என்றார். தமது விளையாட்டினூடே ஒரு பெரியவர் புகுந்தார் என்பதினால், சிறுவர்கள் வியப்பும் சிரிப்புமாக ஒதுங்கி நின்றனர். ஆனால் இதில் அந்த ராஜா வேஷமிட்டவன் மட்டும் அம்மாதிரி விலகவில்லை. ராஜாவாக வேஷமிட்டிருந்தவன் சட்டென தன் மிடுக்கு களையாமல், தூரத்தில் தெரிந்த சில மாடுகளை காட்டி "அவற்றை ஓட்டி செல்லுங்கள். உமக்குத்தான் அவை" என்றான். அவன் காட்டிய மாடுகள் அந்த சிறுவர்களை சேர்ந்தது கூட அல்ல. சிறுவர்களே கூட இதை சிரிப்புடன் முணுமுணுத்தனர். சாணக்கியர் அதை கவனித்து, சற்றே உரத்த குரலுடன் "அம்மாடுகள் உங்களுடையது கூட இல்லை. பின் எப்படி நான் ஓட்டி செல்ல முடியும்" என கேள்வி எழுப்பினார்.
    அதற்கு அப்பையன் புருவத்தை உயர்த்தி "ஓய்! அந்தணரே! கேளும். வீரமுள்ளவனுக்கு எதுவும் சொந்தம். அது என்னிடம் குறைச்சலில்லை. மேலும் நான் இப்பொழுது மாடு மேய்க்கும் சிறுவனாக சொல்லவில்லை. ராஜாவாக சொல்கிறேன். என் ஆணை இது. மாடுகளை ஓட்டி செல்லும்" என்றான்.  "என்னவொரு பதில்! அதில்தான் எவ்வளவு உணர்ச்சி!" என அதைக்கேட்ட சாணக்கியர் தம் மனதுள் அசந்து போனார். அவன் இருக்கவேண்டிய இடம் வேறு என உணர்ந்தார். அந்த பையன் ஒரு வேடர் சமூஹத்தில் வாழ்ந்து வந்திருந்தான். அவனை சாணக்கியர் அங்கிருந்து மீட்டு தம்முடன் அழைத்து சென்றார். தமது சொந்த செலவிலேயே ஏழு ஆண்டுகள் ராஜாவிற்கான சகல வித்தைகளையும் வித்யையும் கற்பித்தார். யார் இதைப்பற்றி கேட்டாலும் "ராஜாவாக போகிறவனுக்கு இவை தெரிய வேண்டுமல்லவா" என்பார். அந்த பையனே பின்னாளில் உலகம் போற்றும் விதமாக அரசாண்ட சந்திரகுப்த மௌரியர். சாணக்கியர்தான் அவனை ராஜாவாக்கினார்!

No comments:

Post a Comment