சௌனகாதி மஹரிஷிகளால் கேள்விகள் கேட்கப்பட்ட ஸூதர் பரம ஸந்தோஷத்தை அடைந்தார். இவரின் பெயர் உக்ரச்ரவஸ், தன் தந்தையான ரோமஹர்ஷணரிடத்திலிருந்து, ஆசை ஆசையாக கிருஷ்ண கதைகள் கேட்பாராம். மஹரிஷிகளால் கேட்கப்பட்ட கேள்விகள், இவருடைய ஹ்ருதயத்தில் மேலும் மேலும் பக்தி பாவங்களைத் தூண்டியது. அதனால், அவருடைய மேனி சிலிர்த்தது. இவருக்கு ரௌமஹர்ஷணி என்ற பெயரும் உண்டு. ரோமஹர்ஷணருடைய பையன் என்று இதற்கு பொருள்.
"நினைத்த மாத்திரத்திலேயே ஸர்வ ஜனங்களின் பாவங்களைப் போக்கும் கங்கைக் கரையிலே தனக்கு ஸ்ரீமத் பாகவதம் சொல்லும் பாக்கியம் கிடைத்ததே!'' என்று நினைத்து ஆனந்தப்பட்டார். காயத்ரீ, கங்கா, கோபீசந்தனம் ஆகிய மூன்றும் பக்தியை வளர்க்கும். அத்தகைய கங்கைக் கரையில் அல்லவோ நமக்கு பாகவதம் சொல்லும் பாக்கியம்!'' என்று ஆனந்தப் பட்டார். "யமுனைக் கரையில் விளையாடிய பாலகனின் கதையை கங்கைக் கரையில் சொல்லும் பாக்கியம் நமக்கு கிடைத்ததே!'' என்று நினைத்து ஆனந்தப்பட்டார். "இதிஹாஸ புராணங்கள் எல்லாம் எந்த நைமிசாரண்ய க்ஷேத்திரத்தில் அரங்கேற்றப்பட்டதோ, அந்த க்ஷேத்திரத்தில் தனக்கு பகவத்குணம் சொல்லும் பாக்கியம் கிடைத்ததே'' என்று நினைத்து ஆனந்தப்பட்டார். ஆஹிதாக்னிகளும், யாஜிகளுமான ரிஷிகள் தன்னையும் ஒரு பொருட்டாக மதித்து பகவத்குணம் சொல்லச் சொன்னார்களே என்று நினைத்து ஆனந்தப்பட்டார். பகவத்குணம் சொல்வதே பகவானுடைய கிருபையால்தான் கிடைக்கும். அப்படி பகவத்குணம் சொல்பவர்கள், இத்தகைய பாக்கியம் குருகிருபையாலும், ஹரிகிருபையாலும்தான் கிடைத்தது என்பதை உணர்வதுதான் உண்மையான கிருபை. பிரும்ம நிஷ்டரான சுகப்ரும்மமே பகவத்குணம் சொல்ல ஆசைப்பட்டார் என்பதிலிருந்து, நமக்கு பகவத்குணம் சொல்வதின் பெருமை புரியவரும். எப்படியாவது இந்த சபையில் பாகவதம் சொல்லி விட வேண்டும் என்று மிகவும் ஆவல் கொண்டிருந்தார் சூதர். சௌனகாதிகளும் அதையே கேட்டதனால், மிகவும் ஆனந்தமடைந்தார். பகவத்குணம் இரண்டு மணிநேரம்தான் நடக்கும். ஆனால் அதைப்பற்றிய சிந்தனை ஹ்ருதயத்தில் ஓடிக் கொண்டிருந்தால்தான் பகவத்குணம் சொல்லமுடியும். சொல்லிமுடித்த பிறகும் தூக்கமே வராது. அதே சிந்தனை அலைமோதும். வேதவியாசரால் புத்திர வாஞ்சையால் அழைக்கப்பட்டும், எந்த சுகபகவான் தன் போக்கில் சென்று கொண்டிருந்தாரோ, அவர் பொருட்டு ஸகல தாவரஜங்கமங்களும் "ஏன்? ஏன்?'' என்று பிரதி த்வனி கொடுத்ததோ அந்த சுகபகவானை ஸூதர் தியானித்தார்.
"ய: ஸ்வானுபாவம் அகில ருதிஸாரம் ஏகம்
அத்யாத்ம தீபம் அதிதிதீர்ஷதாம் தமோந்தம்
ஸம்ஸாரிணாம் கருணயாஹ புராணகுஹ்யம்
தம் வ்யாஸ ஸூனும் உபயாமி குரும் முனீனாம்'' (1.2.3)
சாஸ்திரங்கள் அநேகம். உலகத்தில் உள்ள ஸர்வ ஜனங்களின் குணங்களையும், ரஸிகத்தன்மையையும் அனுசரித்து அவைகள் சொல்லப்பட்டுள்ளன. ஆனால், அவை அனைத்தும் சாதனம்தான். அந்த சாஸ்திரங்களில் சொல்லியுள்ள விஷயங்களை அதில் சொல்லியுள்ளபடி, சிறிதும் ஊடிஅயீசடிஅளைந செய்யாமல் அனுஷ்டானம் செய்தால், நேரடியாகவோ, அதன் பலனாகவோ (சாதனம்) ஸாத்யமாகும். ஆனால், ஸ்ரீமத்பாகவதமோ அப்படியில்லை. இதில் சொல்லியிருக்கின்ற எதையும் அனுஷ்டிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பாகவத படனம், அல்லது ச்ரவணம் ஒன்றே ஜீவன்முக்தியைக் கொடுத்துவிடும். ஸ்ரீமத்பாகவதம் எல்லா ச்ருதிகளின் ஸாரமாக உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் மஹான்களின் பிரத்யக்ஷ அனுபவமாகவும் உள்ளது. இதற்கு சமமாக வேறு ஒரு சாதிரத்தை சொல்லலாம் என்றால், ஈரேழு லோகத்தில் தேடினாலும் கிடைக்காதாம். அதனாலேயே ஏகம்' என்று தனிப்பெருமையுடன் விளங்குகின்றது. ஸம்ஸாரம் என்ற அக்ஞான இருளில் உழன்று கொண்டிருக்கும் ஜனங்களுக்கு, கரையேற்றும் ஞான தீபமாக உள்ளது ஸ்ரீமத்பாகவதம். இவ்வாறு மீண்டும் இந்த ஸ்லோகத்தில் சுகரை தியானிக்கின்றார். பிறகு நாராயணர், நரநாராயணர்கள், ஸரஸ்வதி, வியாஸர், மற்றும் ஜயம் என்ற பெயரும் உடைய பாகவதத்தை நமஸ்கரிக்கின்றார். "மஹான்கள் எப்பொழுதும் அற்பமான விஷயங்களைப்பற்றி பேச மாட்டார்கள். கம்பீரமான விஷயங்களைத்தான் பேசுவார்கள். அப்படி பேசும் விஷயங்களே பகவத் விஷயமாகத்தான் இருக்கும். அதோடு மட்டுமல்லாமல், அவை, உலகத்திற்கு எக்காலத்திற்கும் க்ஷேமத்தைக் கொடுக்கும். அப்படிப்பட்ட கேள்விதான் சௌனகாதி ரிஷிகளால் கேட்கப்பட்டது'' என்று கூறி சூதர் சௌனகாதி மஹரிஷிகளின் கேள்வியைக் கொண்டாடுகிறார்.
No comments:
Post a Comment