Thursday, March 3, 2011

மதுரமான மஹனீயர் - 180 - Dr.A.Bhagyanathan - March 2011

பிப்ரவரி 13ஆம் தேதி நாமமுத்து நகரான தூத்துக்குடியில் புதிய நாமத்வார் ஸ்ரீஸ்வாமிஜி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அன்று திரளான மக்கள் வந்திருந்து குருவருளும் திருவருளும் பெற்று சென்றனர். அன்று, ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் வழங்கிய அருளுரையிலிருந்து சில விஷயங்களை இங்கு பார்ப்போம்.
    "வருவாய் வருவாய் குருநாதா! வந்தருள் புரிவாய் குருநாதா!" என்று ஒரு அழகான நாமாவளி. அதில் ஒரு வரி "கனவு பலித்தது குருநாதா! மனமும் குளிர்ந்தது குருநாதா!" என்று வரும். அதுபோல் எனக்கு ஒரு நீண்ட நாள் கனவு உண்டு. நான் தனிமையில் அமர்ந்திருக்கும்பொழுதும், ஏன் எப்பொழுதுமே மனதில் ஒரு விஷயத்தை கற்பனை செய்து ஆனந்தப்படுவேன். ஒரு பெரிய ஹால் இருக்க வேண்டும்; அந்த ஹாலின் ஆரம்பத்தில் ஒரு மேடை இருக்க வேண்டும்; அதில் ஒரு அழகான ராதாகிருஷ்ணரை பிரதிஷ்டை செய்ய வேண்டும்; அந்த திவ்ய மூர்த்திகளுக்கு பிரேமிகவரதன் மாதுரிஸகீ என்று பெயர்; இந்த அமைப்பிற்கு நாமத்வார் என்று பெயர். இதற்குள் ஜாதி, மத, இன, மொழி, பொருள் போன்ற எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லோரும் வரலாம்; இதற்குள் எந்த ஸம்பிரதாய சடங்குகளும் கிடையாது; வருபவர்கள் எல்லோரும் வந்து மஹாமந்திரகீர்த்தனம் செய்ய வேண்டும்; இந்த இடங்களில் வேறு நாமங்களும் ஜபிக்கப்படமாட்டாது; வேறு பாடல்களும் பாடப்பட மாட்டாது. Focussedஆக மஹாமந்திர கீர்த்தனம் மட்டுமே இருக்கும். இந்த கீர்த்தனம் ஒன்றுதான் கலியின் கொட்டத்தை அடக்கக் கூடியது. பிரார்த்தனைகளை நிறைவேற்றித் தரக்கூடியது. இங்கு காலை மாலை இரண்டு வேளைகளிலும் மாதுரிஸகியுடன் கூடிய பிரேமிக வரதனுக்கு லகுவான (simple) ஒரு பூஜை நடக்கும். இந்த நாமத்வாருக்கு வரும் பக்தர்கள் விருப்பப்பட்டால் நாமம் சொல்லி பிறந்தநாள், நாமம் சொல்லி கல்யாணம், நாமம் சொல்லியே எல்லாம் நடத்தி வைக்கப்படும். இந்த நாமத்வாருக்கு வருபவர்களை ஏமாற்றத்துடன் பகவான் வெளியில் அனுப்பவே மாட்டான். இப்படி உலகம் முழுவதும், என்னுடைய ஜீவித காலத்திற்குள்ளேயே பல நாமத்வார்கள் உருவாக வேண்டும். என்னுடைய காலத்திற்கு பிறகும் இது மாதிரியான நாமத்வார்கள் தோன்றிக்கொண்டே இருக்க வேண்டும். மக்கள்தொகை (Population) நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. Resources (இயற்கை வளங்கள்) குறைந்துகொண்டே இருக்கின்றது. இந்த முக்கியமான இரண்டு காரணங்களால் மக்களின் வாழ்க்கை தரம், முறை எல்லாவற்றிலும் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றது. இன்னும் காலம் போகப்போக இது (நாமகீர்த்தனம்) ஒன்றுதான் கதி என்பதை, உலகம் நன்றாக உணரும். அதற்கு இப்பொழுதே நாம் விதை விதைத்து விட வேண்டும். ஏன் என்றால், எதையும் செய்வதற்கு தகுதியை இழந்து வரும்பொழுதே, அப்பொழுதும் ஒரு வழி இருக்கின்றது என்பதை இப்பொழுதே கூறி விட வேண்டும். இல்லாவிட்டால் ஒரு வெற்றிடமும் வெறுமையும் தோன்றி விடும். இன்று தமிழ்நாட்டில் மஹாமந்திரம் தெரியாதவர்களே கிடையாது. நான் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஊருக்கு செல்லும்பொழுதும், பத்தாயிரக்கணக்கில் பக்தர்கள் கூடி கீர்த்தனம் செய்கின்றனர். ஆங்காங்கே பல கோவில்களில், பல பேட்டைகளில் கீர்த்தனம் செய்கின்றார்கள். இவர்களை ஒரு அருட்சக்தி நடத்தி வருகின்றது. இந்த மஹாமந்திரகீர்த்தனம் அகண்டமாக தமிழ்நாட்டில் அம்பாசமுத்திரம், ஆம்பூர், அணைக்கட்டு, சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அம்பத்தூர், ஆவடி, சேரன்மகாதேவி, செய்யார், கோயம்புத்தூர், கடலூர், தாராபுரம், வத்தலகுண்டு, ஈரோடு, கோவிந்தபுரம், குடியாத்தம், கூடுவாஞ்சேரி, கல்பாக்கம், காஞ்சிபுரம், காரைக்கால், காரைக்குடி, கரூர், கொட்டையூர், கோவில்பட்டி, கிருஷ்ணகிரி, மதுரை, மாம்பாக்கம், கோவூர், மறைமலைநகர், மயிலாடுதுறை,  ஊட்டி, படப்பை, பழனி, பண்ருட்டி, பரமக்குடி, பெரியகுளம், பொள்ளாச்சி, பாண்டிச்சேரி, நாகப்பட்டினம், ரவணசமுத்திரம், சேலம், சாந்தவாசல், சோளிங்கர், தென்மேல்பாக்கம், சிவகாசி, தஞ்சாவூர், தேனீ, திருநாங்கூர், திருச்சிராப்பள்ளி, திருநின்றவூர், திருப்பூர், திருத்தணி, திருத்துறைப்பூண்டி, திருவள்ளூர், திருவண்ணாமலை, திண்டிவனம், திருவாரூர், தூத்துக்குடி, உடுமலைப்பேட்டை, வேலூர், விருதுநகர், தருமபுரி, பல்லடம், விக்ரமசிங்கபுரம், வீரவநல்லூர், கெங்குவார்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு(விருதுநகர் மாவட்டம்), கம்பம், கரியாபட்டி, அருப்புகோட்டை, மங்களூர்(கடலூர் மாவட்டம்), வாலாஜா, காவேரிப்பாக்கம், சேவூர்(ஆரணி), பேர்ணாம்பட்டு, பெருமாள்பட்டு, பிள்ளைப்பாக்கம், வெள்ளரை, மணிமங்கலம், குண்டுபெரும்பேடு, வல்லியூர் இப்படி பல ஊர்களிலும் ஹைதராபாத்,  தானே (பாம்பே), நாசிக், பெங்களூர், பாம்பே, பாலக்காடு, கொச்சின் ஆகிய  நகரங்களிலும் மற்றும் அமெரிக்கா, நியூசிலாந்து, பஹ்ரைன்,  இந்தோனேஷியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கத்தார், மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகள்,  நைஜீரியா, பின்லாந்து, மஸ்கட்,  ஜெர்மனி, ஹாங்காங், பிஜி தீவுகள் ஆகிய நாடுகளிலும் நடந்து வருகின்றது. இது தவிர, பிரத்யேகமாக நாமத்வார் கேந்திரங்கள் மதுரபுரி கல்யாண ஸ்ரீனிவாசபெருமாள் கோவில், அண்ணாநகர், பம்மல், திருமதுரா களத்துப்பட்டு,  ஸ்ரீபெரும்புதூர்,  அம்பாசமுத்திரம், வத்தலகுண்டு, சேலம், சிவகாசி, பெரியகுளம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, கடலூர், நாசிக், எர்ணாகுளம் ஆகிய இடங்களில் இந்தியாவிலும், சிட்னி (ஆதிரேலியா), கோலாலம்பூர் (மலேசியா), டெக்சா (அமெரிக்கா) ஆகிய வெளிநாடுகளிலும் இயங்கி வருகிறது. அதன் ஒரு முயற்சியாக ஸ்ரீஸ்வாமிஜியின் முரட்டு பக்தர் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் திரு.கதிரேசன் அவர்கள் பிறரிடமிருந்து ஒரு பைசா கூட வசூல் செய்யாமல் தன்னுடைய சொந்த முயற்சியினாலும், பொருளினாலும் அழகான இந்த நாமத்வாரை அமைத்து உள்ளார். அதுவும் தூத்துக்குடியின் நடு மையத்தில் அழகாக அமைந்துள்ளது. இந்த நாமத்வார், நான் எப்படியெல்லாம் நினைத்து வந்தேனோ அப்படியே அமைந்து உள்ளது. நான் வரும்பொழுது இங்கு கூடியிருந்த பக்தர்கள் எல்லாம் "கனவு பலித்தது குருநாதா" என்று பாடினார்கள். ஆனால் உண்மையில் என் கனவு இன்றுதான் பலித்தது என்று நான்தான் பாடவேண்டும். தூத்துக்குடி நாமத்வாருக்குள் யார் எல்லாம் வருகின்றார்களோ அவர்களை எல்லாம் பகவான் ஏமாற்றவே மாட்டான். ஏன் என்றால் கண்ணன் அருளே வடிவானாவன்" என்று ஸ்ரீஸ்வாமிஜி அருளுரையில் குறிப்பிட்டார்கள்.

No comments:

Post a Comment