Thursday, March 3, 2011

ஸ்வாமி க்ருஷ்ணானந்தஜி-6 - ப்ருந்தாவனமும் நந்தகுமாரனும் - Janani

பாவ லோகத்தில் நடக்கும் லீலைகள் ஸாதாரண மனிதர்களுக்கு புரியவே புரியாது. அவர்கள் மஹான்களின் இந்த லீலைகளை நாடகம் என்று கூட எண்ணலாம். ஆனால், "இவை எவ்வளவு உத்தமமானவை, லோக கந்தமே இல்லாதவை". ராமக்ருஷ்ண பரமஹம்ஸரிடம் கோபாலேர்மா என்றொரு வயதான பெண்மணி வருவாள். அவள் வாத்ஸல்ய பாவத்தில் பகவானிடம் பக்தி செய்வாள். அவளை பார்த்த மாத்திரத்தில் ராமக்ருஷ்ணர் தன் நிலை மறந்துவிடுவார். அவளிடம் விதவிதமான தின்பண்டங்கள் வேண்டும் என்று கேட்பார்.
    ப்ராண கோபால் கோஸ்வாமி, க்ருஷ்ணாநந்ததாஸ் பாபாஜி போன்ற மிகவும் உத்தமமான சிஷ்யரால், பக்தி ப்ரசாரம் நன்கு ஏற்பட்டு, நாஸ்திகமும் அதர்மமும் அழியும் என்று மிகவும் எதிர்பார்த்தார். ஆனால் பாபாவோ இரவும் பகலும் பாவத்தில் முழுகி க்வாரியா பாபாவுடன் பாவ லோகத்திலேயே தன்னை மறந்திருப்பதைக் கண்டு, ப்ராணகோபால ஸ்வாமி சிந்தனைக்குள்ளானார். ஒருநாள் அவர் பாபாஜியை அழைத்து அவரிடம் உமக்கு பகவானின் க்ருபையால் என்ன கிடைத்திருக்கிறதோ அதை எல்லாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும். உலகில் க்ருஷ்ணபக்தி மற்றும் கீர்த்தனத்தை ப்ரசாரம் செய் என்று ஆக்ஞாபித்தார்.
    பாபா குருவின் ஆக்ஞையை பாலனம் செய்ய முடிவு செய்தார். ஆனால், ஸ்வதந்திரமாக ப்ரசாரம் செய்ய அவர் முன் ஒரு பெரிய தடையிருந்தது. முடிந்தவரையிலும் எந்த ஒரு ஸ்த்ரீயின் முகத்தையும் பார்ப்பதில்லை என்று அவர் ஸங்கல்பம் செய்திருந்தார். பல வருடங்களாக அந்த ஸங்கல்பத்தை கடைப்பிடித்தும் வந்தார். அவரது குடிலுக்கு ஸ்த்ரீகள் வருகை தடை செய்யப்பட்டிருந்தது. மதுகரிக்கு செல்லும்போது கூட தலையில் துணியணிந்து பார்வையை கீழே வைத்தபடியே தான் செல்வார்.
    ஒரு ஸம்பவத்தின் காரணமாக அவரது ஸங்கல்பத்தை அவர் கைவிட நேர்ந்தது. ஹின்டௌல் க்ராமத்தின் அருகில் நகலா லக்ஷ்மண்புர் எனுமிடத்தில், ஸ்ரீலாலாராம்ஜி என்பவரின் புதல்வியான ஸ்ரீமதி தேவா என்ற பெண் பதினோரு வயதிலேயே பால்ய விதவையாகிவிட்டாள். அவள் மனதினாலேயே க்ருஷ்ணானந்த பாபாஜியை தனது குருவாக ஏற்று, மனதாலும் உடலாலும் டாகுர்ஜியின் ஸேவையிலேயே தன்னை ஈடுபடுத்திக்கொண்டாள். ஆனால் குருதேவரின் தரிசனம் பெறாமல் அவள் மிகவும் வருந்தினாள். பல பேர் அவளைப் பற்றி பாபாஜியிடம் கூறிய பொழுது, பாபாஜி ஒரு காகிதத்தில் மஹாமந்திரத்தை எழுதி அதை ஜபிக்குமாறும், ஸக்ய பாவத்தில் பக்தி செய்யுமாறும் அவளுக்கு சொல்லியனுப்பினார். அவள் அப்படியே ஜபமும் சிந்தனையும் செய்யலானாள். ஆனால் அவளும் ஒரு ப்ரதிக்ஞை செய்து கொண்டாள். குருதேவரை காணாதவரை சூரியனையே பார்ப்பதில்லை என்று விரதம் எடுத்துக் கொண்டுவிட்டாள். காலை நான்கு மணியிலிருந்து தனது பஜன குடீரத்திலமர்ந்து ஸூர்யாஸ்தமனம் வரை ஜபம் செய்வாள். இவ்வாறே மூன்று வருடங்கள் கழிந்தன. ஆனால் குருதேவரின் தரிசனம் இன்னும் கிடைக்கவில்லை. அதனால் அவள் அன்ன-பானங்களையும் த்யாகம் செய்தாள். அன்ன-பானம் இல்லாமல் ஒன்பது நாட்கள் கழிந்து விட்டன. அப்பொழுது க்ருஷ்ணானந்த பாபாவிற்கு, பலராமரின் ஆக்ஞையால், தனது ஸங்கல்பத்தை கைவிடும்படியாயிற்று. பலராமர், அவரிடம் அப்பெண்ணிற்கு தரிசனம் தருமாறு கூறிவிட்டார். அதனால், தனது ஸங்கல்பத்தை விட்டு பாபாஜி அந்த பெண்ணிற்கு தரிசனம் தந்தார்.
    சில நாட்களிலேயே அந்த பெண்ணிற்கு ஸக்ய பாவம் ஸித்தியாகிவிட்டது. அவளுடைய நடை-உடை-பாவனை எல்லாமே ஸ்ரீக்ருஷ்ணனின் நண்பனைப் போல் ஆகிவிட்டன. மக்கள் அவளை பையா (भैया) "அதாவது தம்பி" என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டனர். பகவானும் பையாவுடன் பல விதமாக லீலைகள் செய்தான்.
ஆனால் ஸ்ரீ க்ருஷ்ணருடைய திவ்ய ஸாந்நித்யத்தை பையாவின் ப்ராக்ருத சரீரத்தால் வெகு நாட்கள் தாங்க முடியவில்லை. அவருடைய தேஹம் மிகவும் க்ஷீணமாகிவிட்டது. ஒருநாள் மயக்க நிலையிலேயே குருதேவரின் தோளில் சாய்ந்தபடி அவர் ராம-க்ருஷ்ணர் என்னை அழைக்க வந்திருக்கிறார்கள் பையா! என்றார். (அவர்கள் ஒருவரையொருவர் தம்பி என்றே அழைத்துக் கொள்வார்கள்.) குருதேவர் கண்ணீருடன், "பையா, நீ செல்! நான் பின்னாலேயே வருகிறேன்" என்று கூறினார். குருதேவருடைய ஆக்ஞை கிடைத்தவுடன் அவர் உடம்பை விட்டு திவ்ய தாமத்தை எய்தினார்.
    க்ருஷ்ணாநந்தரும் தனது குருவின் ஆக்ஞையை சிரமேற்கொண்டு தீவிரமாக பக்தி ப்ரசாரம் செய்தார். அவர் பல க்ரந்தங்களையும் இயற்றினார். அவரது காரியம் முடிந்தவுடன்  1941ஆம் ஆண்டு க்ருஷ்ண ஸப்தமி அன்று இரவு 12 மணிக்கு "ஹரே க்ருஷ்ண" என்று உச்சரித்தவாரே பாபாஜியும் திவ்ய தாமத்தையடைந்தார். 

No comments:

Post a Comment