Sunday, April 3, 2011

பாலகர்களுக்கு ஒரு கதை - பிரார்த்தனை


அது ஒரு அற்புதமான படகுத்துறை. இருபுறமும் உயர்ந்த மரங்கள். தெளிந்த நீர் சல சலவென ஓடும். தூரத்தில் பரந்த கடல் நன்கு தெரியும். சில்லென வீசும் காற்று. அவ்வப்பொழுது பறக்கும் பறவைகள் வினோதமாக ஒலி எழுப்பும். கண்ணுக்கெட்டியவரை நிர்மலமான ஆகாயம். படகுகள் நீரைக்கிழித்து செல்லும். சிறு பரிசல்களும் செல்லும். இந்த படகுகளிலும் பரிசல்களிலும் செல்பவர்கள் மற்றும் குழந்தைகளின் ஆரவாரம்தான் அங்கு ஏற்படும் ஒரே சப்தம். எல்லோர் முகத்திலும், ஒரு பரபரப்பும் பரவசமும் தென்படும். வெளிநாட்டவர் பலர் இருப்பர். அவர்களில் பலர் கைகளில் தொலைநோக்கு பைனாகுலரோ அல்லது சிறிய வீடியோ காமெராவோ இருக்கும். படகுகள் சிறு தூரம் வரை சுற்றுலா பயணிகளை கூட்டி செல்லும். படகோட்டிகள் துடுப்புகளை முன்னும் பின்னும் வலித்து படகுகளை செலுத்துவர். சில சமயம் படகுப்போட்டிகளும் நடைபெறும். தினமும் யாத்திரீகர்கள் வந்து படகுப்பயணத்தில் சவாரி செய்து செல்வர். அங்கு முனுசாமி என்பவன் படகோட்டியாக தன் வாழ்க்கையை வாழ்ந்து வந்தான். அவனுக்கு அதுதான் ஜீவாதாரம். வலிமையான புஜங்கள் கொண்ட அவன் யாத்திரீகர்களிடம் மிக நயமாக பேசி அவர்களை சவாரிக்கு அழைத்து சென்று வருவான். அவன் படகு சற்றே பெரியது. அதில் ஒரு பத்து பதினைந்து நபர்கள் உட்காரலாம். கோடைக்காலம் முடிந்து கார்காலம் ஆரம்பமான தருணம் அது. மிக தெளிவாக அழகாக வானம் இருந்தது அன்று. பகல் 3மணி இருக்கும். வெய்யிலின் இளஞ்சூடு உடலுக்கு இதத்தை கொடுத்தது. பலமான காற்று இல்லை. மெலிதான காற்றுதான் வீசியது. அப்பொழுது ஒரு ப அங்கு வந்து இறங்கியது. படகுக்காரர்கள் போட்டி போட்டுக்கொண்டு பயணிகளை தம்தம் பக்கம் இழுத்தனர். முனுசாமி படகிலும்  பலர் ஏறினர். அதில் இருவர் கல்லூரி மாணவர்கள். ஒரு இளம் தம்பதிகள் தம் கைக்குழந்தையுடன் ஏறி இருந்தனர். ஒரு வயதான தாத்தா பாட்டி தமது இளவயது பேரனுடன் சுற்றுலாவாக வந்திருந்தனர். இது தவிர ஒரு முழு குடும்பம் ஏறி இருந்தது. எல்லோரையும் படகில் அமர்த்திய பின், முனுசாமி கண்களை மூடியபடி கடவுளிடம் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தான். வழக்கமாக அவன் செய்வதுதான் இது. அவசரமே இல்லாமல் ஒரு ஐந்து நிமிடம்  செய்தான். அதற்குள் கல்லூரி மாணவர்கள் "வாய்யா! போகலாம். இப்பொழுது போய் பிரார்த்தனையா?" என முணுமுணுத்தனர். தாத்தா உடன் "ஆமாம்! அதெல்லாம் காலையில் செய்ய வேண்டிய சமாசாரம்" என்றார். பாட்டி சிரித்தாள். இளம் தம்பதிகளோ இவர்கள் சொல்வதை ஆமோதிப்பது போல் முகபாவம் கொண்டிருந்தனர். அந்த குடும்ப தலைவரோ பொறுமையை இழந்து "என்னய்யா பணம் வாங்கி கொண்டு தாமசம் செய்கிறாய். கிளம்பு" என்று அதிகாரமாக பேசினார். எதையும் கேட்காதது போலிருந்த முனுசாமி பிரார்த்தனையை முடித்து கிளம்பினான். படகு ஒரு கி.மீ. உள்ளே சென்றது. எல்லோரும் ரசிக்க ஆரம்பித்தனர்.
      திடீரென எங்கிருந்தோ காற்று வீச ஆரம்பித்தது. கார்மேகம் சூழ்ந்தது. எல்லாம் கண நேரத்திற்குள் நிகழ்ந்து விட்டது. யாத்திரிகர்கள் திரும்பி விடலாமா என யோசித்தனர். முனுசாமி எதையும் மனதில் வாங்காமல் அவர்களிடம் சிரித்தவாறு பதட்டமின்றி பேசி வந்தான். மேலும் சில நொடிகளில் மழை "சோ"வென பெய்ய ஆரம்பித்தது. காற்றும் மிக பலமாக வீசியது. படகு அசைய ஆரம்பித்தது.  கீழே தண்ணீரின் ஆழம் மிக அதிகம் என்பது அனைவருக்கும் தெரியும். காற்றில் அசைகையில் படகு கவிழ்ந்துவிடும் போலிருந்தது. "திக் திக்" என யாத்திரிகர்களுக்கு இருந்தது. முனுசாமி இப்பொழுது துடுப்பை போடுவதை மேலும் பலப்படுத்தி கரையை நோக்கி செலுத்தினான். யாத்திரிகர்களுக்கு பயம் வந்து விட்டது. கல்லூரி மாணவன் சொன்னான் "கடவுளே! என்னை காப்பாற்று" என்று. தாத்தா சொன்னார் "படகோட்டி! என்னை சீக்கிரம் கொண்டு சேர்த்து விடு. தெரியாத்தனமாக ஆசைப்பட்டு இப்படி மாட்டிக்கொண்டேன்" என்று. அந்த இளம் தம்பதிகள் அவசரம் அவசரமாக தங்கள் பையிலிருந்து ஒரு வாமியின் புகைப்படத்தை எடுத்து அதன் முன் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தனர். அந்த குடும்ப தலைவருக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது. அவர் அழ ஆரம்பித்து விட்டார். "அடடா! என் நிலைமை இப்படி ஆயிற்றே" என்று. இத்தனைக்கும் நடுவில் முனுசாமி சற்றேனும் பதறவில்லை. அவன் கைகள் சலியாமல் துடுப்புகளை சரியாக இயக்கின. சுமார் அரைமணி நேர போராட்டத்திற்கு பின், படகு கரை வந்து சேர்ந்தது. அப்பொழுது எல்லோரும் முனுசாமியை பாராட்டினர். தாத்தாவின் கண்களில் பயம் நீங்கி கண்ணீரே வந்து விட்டது.
      அப்பொழுது முனுசாமி பேசினான் "எல்லோரும் என்னை ஆரம்பத்தில் பிரார்த்தனை செய்ததற்கு கேலி செய்தீர்களே! நான் என்ன பிரார்த்தனை செய்தேன் தெரியுமா? கடவுளே! இப்பொழுது வானம் நன்றாக இருக்கிறது. ஒருக்கால் வானிலை மோசமாகி வரும்பொழுது என் மனம் பதறாது நான் என்ன செய்ய வேண்டுமோ, அதை என்னை செய்ய வைத்து விடு" என்று பிரார்த்தித்தேன். நானும் உங்களுடன் சேர்ந்து துடுப்பு போடாமல் கடவுளை அப்பொழுது பிரார்த்தித்து வந்திருந்தேன் எனில் இப்பொழுது கரை சேர்ந்திருப்போமா? என்றான். அவன் சொன்னது அனைவருக்கும் சொரேலேன உரைத்தது.
      காலம் நன்றாக இருக்கும்பொழுதே கடவுளிடம் மனதை செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment