Sunday, April 3, 2011

ராமனும் ஹனுமனும் சாட்சி


விருதுநகர் ராமர் கோவிலில் நமது சத்சங்க அன்பர் திரு.வெங்கடேசன் வெகு நாட்களாக மஹாமந்திர கீர்த்தனமும் கூட்டு பிரார்த்தனையும் செய்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த திருமதி.கோமதி என்பவரும் இந்த கீர்த்தனத்தில் நல்ல ஈடுபாட்டுடன் தவறாது கலந்து கொள்வார். அதுவும் தவிர பிரதி வாரம் தன் வீட்டில் பஜனையும் வைத்து கொள்வார். இந்த கோமதி அவர்களின் உறவினர் லக்ஷ்மணபிள்ளை. அவரது வீடு எதோ ஒரு காரணத்தினால், அரசாங்கத்தினால் ஜப்தி செய்யப்படும் நிலைக்கு வந்தது.  கோமதியின் வீட்டார் லக்ஷ்மணபிள்ளை மேல் இரக்கப்பட்டு சுமார் பத்து பவுன் நகையும் ஒன்றரை லக்ஷத்திற்கு ரொக்கமும் தந்து உதவினர். இதனால் அந்த வீடு ஜப்தியாகாமல் தப்பித்தது.  உறவினர் என்பதால், நம்பிக்கையாக திரும்பி தந்து விடுவார் என்று, பணத்தையும் தங்கத்தையும் தருகையில் எந்த ஒரு பத்திரமும் கோமதி வைத்து கொள்ளவில்லை. இப்படி கோமதி உதவியதற்கு ஒரே சாட்சி, இரு குடும்பங்களுக்கும் தொடர்புடைய குடும்ப நண்பர் ஒருவர்தான் . ஆனால் அவரும் இந்த சம்பவம் நடந்து, சிலகாலத்திற்குள் தன் மகனுடன் வெளிநாடு சென்று விட்டார்.
      சிறிது காலம் கழித்து, உறவினரிடம் சென்று பணத்தை திருப்பி கேட்டார் கோமதி. ஆனால் அவர்கள் அதை திருப்பி தராதது மட்டுமில்லை; தருவதற்கான எந்த ஒரு பிரயத்தனமும் காட்டவில்லை. இதன் நடுவில் அந்த வீட்டின் குடும்ப தலைவர் லக்ஷ்மணபிள்ளை இறந்து போனார்.  தந்தை இறந்த பின் தனயன்களோ, இந்த கடனை பற்றி அலட்டி கொள்ளவில்லை. மேலும் மிகவும் அதட்டலாக பேசினார்கள். "நீ யாரிடம் கடன் கொடுத்தாய்? அவரிடமே சென்று கேள்" என்றனர். "வாங்கியவர்தான் மரித்து விட்டாரே; அவரிடம் எப்படி கேட்பது" என்றால், "அது சரி , அப்படியானால் பணத்தை வாங்கினவர் ஏதாவது அத்தாட்சி தந்திருப்பார் அல்லவா, அதை கொண்டு வா" என்று சொல்லி தட்டி கழித்து வந்தனர். இப்படி சென்ற இடத்தில் கோமதிக்கு அவமானமும் அவப்பேச்சும்தான் மிஞ்சும். என்ன செய்வது? மனம் தளராமல், அவ்வப்பொழுது சென்று பணத்தை கேட்டவாறு இருந்தார் கோமதி. இப்படி ஓரிரு நாளல்ல!  பதினைந்து வருடங்கள் கழிந்தன. இதே சமயத்தில் தூத்துக்குடியில் இருந்து வந்த ஒரு அன்பர், கோமதியிடம், உங்கள் உறவினர் அந்த  வீட்டை விற்க முடிவு செய்து உள்ளனர் என்றார். உடனே தூத்துக்குடிக்கு விரைந்து சென்று தமது பணத்தை மறுபடியும் திரும்பி கேட்டார் கோமதி. இப்பொழுதோ உறவினர்கள், "உங்களிடமிருந்து நாங்கள் பணமோ பொருளோ எதுவும் வாங்கவில்லை. பின் ஏன் எங்களை தொந்திரவு செய்கிறீர்கள்?" என்றதோடு மட்டுமல்லாமல், கோமதி பொய் சொல்கிறாள் என்றனர். அக்கம்பக்கத்தவரும் கோமதிக்கு ஆதரவாக இல்லை. "நீ ஏன் அவர்களை வீணாக தொந்திரவு செய்கிறாய்? பத்திரம் ஏதாவது இருந்தால் கொண்டு வா" என்றனர். என்ன செய்வது? திக்கற்றவருக்கு தெய்வம்தான் துணை! அவர் வெகுநாட்களாக "ஹரே ராம" மஹாமந்திரத்தை சொல்லி வந்தவரல்லவா! ஒரு ஆவேசத்தில் அவர் "நாங்கள் பஜிக்கும் ராம நாமம் மிக சக்தி வாய்ந்தது. நாங்கள் கீர்த்தனம் செய்தது உண்மையெனில், அந்த ராமனும் ஹனுமனும் நாங்கள் பணமும் நகையும் கொடுத்ததற்கு சாட்சி" என்றார். இப்படி எல்லாம் சொன்னால் யார் இக்காலத்தில் நம்புவர்? சுற்றி இருந்தவர்களெல்லாம், "இந்த அம்மாளுக்கு ஏதோ பைத்தியம் பிடித்து விட்டது. ராமனாவது ஹனுமனாவது? சாட்சி வந்து அவர்களால் சொல்ல முடியுமா என்ன?" என்று சொன்னார்கள். "ராமனும் ஹனுமனும் விருதுநகரிலிருந்து ரயிலேறி தூத்துக்குடி வந்து சாட்சி சொல்ல போகிறார்களாம்" என்று எல்லோரும் கேலி பேசியதை, காதிலே போட்டுக்கொள்ளாமல் கோமதி "ராமனும் அனுமனும் வருவது சத்தியம்" என்று பேசிவிட்டு,  விருதுநகருக்கு திரும்பி வந்தார். வந்தபின் அவருக்கு பதட்டம் நீங்கவில்லை. அந்த பணம் வராது என்றே விரக்தியுடன் இருந்தார். ஆனால் இறைவன் விடுவதாக இல்லை!
      இதற்குப்பின் ஒரு புரட்டாசி மாதம் சனிக்கிழமையன்று விருதுநகர் ராமர் கோவிலில், நாமம் சொல்லியவாறே கோமதி வலம் வந்து கொண்டிருந்தார். அங்கு ஒரு வயதான மனிதர் அமர்ந்திருந்தார். அம்மனிதர் கோமதியின் அருகில் வந்து, "என்னை தெரிகிறதா? நீ தூத்துக்குடி அல்லவா?" என்றார். அவர் "நான்தான் ராமச்சந்திரன். உங்கள் வீட்டின் அருகில் இருந்தவன். நான் சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்று கொண்டிருந்தேன். தவறுதலாக விருதுநகரில் இறங்கி விட்டேன். இறங்கினதுதான் இறங்கினோம்; ராமரை தரிசனம் செய்து போகலாம் என்று வந்தேன்" என்றார். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, "ஆமாம் நீ கொடுத்த பணத்தையும் நகையையும் மீட்டாயா" என்றார் ராமச்சந்திரன். கோமதி வருத்தமுடன் "அதுதான் முடியவில்லை. அவர்கள் பணம் கொடுத்ததற்கு அத்தாட்சியாக பத்திரம் கேட்கிறார்கள். என்னை ஏமாற்றி விட்டனர்" என்றார். அதை கேட்ட அந்த ராமச்சந்திரன் தன்னிடமிருந்த பையிலிருந்து ஒரு கவரை எடுத்தார். அதில் ஒரு பத்திரம் இருந்தது. அதை கோமதியை படிக்க சொன்னார். அதில் இறந்து போன லக்ஷ்மணபிள்ளை, தாம் பணமும் நகையும் பெற்றதற்கு ஒப்பமிட்டிருந்தார். அவரே அதில், தமது மகன்கள் ஒருக்கால் பணம் தர தவறினால் அந்த வீடு கோமதிக்கே சொந்தமாகும் என்றும் எழுதி இருந்தார். அதில் கடன் வாங்குவதன் காரணமும் தேதியும் சரியாக குறிப்பிடப்பட்டு இருந்தது!! இத்துடன் இந்த அதிசயம் நிற்கவில்லை. அந்த பத்திரத்திற்கு சாட்சியாக ராமச்சந்திர மூர்த்தி என்பவரும் மாருதிராஜன் என்பவரும் கையொப்பமிட்டு இருந்தனர். எல்லாம் பார்த்த கோமதிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. சாட்சியாக ராமனும் ஹனுமானும் வருவார்கள் என்று இவர் ஒரு ஆவேசத்தில் சொன்னார் அல்லவா? இங்கு கையொப்பம் இட்டிருப்பதோ அவர்களிருவரின் பெயர் கொண்டவர்கள்தானே! இதென்ன இறைவனின் விளையாட்டு! அந்த ராமச்சந்திரன் என்னும் அன்பர்தான் அந்த இருவரில் ஒருவர். அவரே கோமதியை தூத்துக்குடிக்கு அழைத்து சென்று பணத்தையும் நகையையும் மீட்டு தந்தார். அந்த ராமச்சந்திரன் ஏன் வழி தவறி விருதுநகரில் இறங்கவேண்டும்? அப்படி இறங்க வைத்தது யார்? இத்துனை நாள் கழித்து அவர் கையில் அந்த பத்திரம் எப்படி பத்திரமாக இருந்தது? அவரே அல்லவா உடனிருந்து அனைத்தையும் மீட்டார்! தான் சொன்ன ஒரு வார்த்தையை(ராமனும் ஹனுமனும் சாட்சி) மெய்ப்பிக்க இறைவன் நடத்திய லீலையை நினைத்து கோமதியின் கண்களில் நீர் நிறைந்தது.

No comments:

Post a Comment