Sunday, April 3, 2011

பாகவத பழம் - 13 - ஸ்ரீ ஸ்வாமிஜி


  ஸ்ரீமத்பாகவதத்தில் சொல்லியிருக்கின்ற எதையும் அனுஷ்டிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பாகவத படனம், அல்லது சிரவணம் ஒன்றே ஜீவன்முக்தியைக் கொடுத்துவிடும். மஹான்கள் பேசும் விஷயங்கள் பகவத் விஷயமாகவும் உலகத்திற்கு எக்காலத்திற்கும் க்ஷேமத்தைக் கொடுப்பதாக இருக்கும் என்று சௌனகாதி ரிஷிகளின் கேள்வியை  ஸூதர் கொண்டாடுகிறார். ( - சென்ற இதழ் தொடர்ச்சி)
      எந்த ஒரு தர்மத்தை அனுஷ்டித்தால் பகவானின் திருச்சரணங்களில் காரணமில்லாத பிரேமை உண்டாகுமோ, எந்த ஒரு தர்மத்தை அனுஷ்டிப்பதால், பகவானுடைய தர்சனம் உண்டாகுமோ அதுவே தர்மங்களில் சிறந்தது என்று கூறுகிறார் ஸூதர். ஒருவன் அனுஷ்டித்த தர்மத்தினால் அவனுக்கு கிருஷ்ண பக்தி ஏற்படவில்லையானால், அந்த தர்மத்தை அனுஷ்டித்த சிரமம் மட்டுமே மிஞ்சும். வேறு ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆக உண்மையாக ஒருவன் தர்மத்தை அனுஷ்டித்தானானால், அவனுக்கு நிச்சயமாக வாசுதேவனிடத்தில் பக்தி ஏற்பட வேண்டும். அப்படி ஒருவனுக்கு கிருஷ்ண பக்தி ஏற்படவில்லை என்றால், அவன் அனுஷ்டித்தது தர்மமே இல்லை என்று அறிந்து கொள்ளலாம்.
      இரண்டு தர்மங்கள் உள்ளன. மோக்ஷதர்மம் மற்றும் லௌகீக தர்மம். ஒருவன் மோக்ஷ தர்மத்தை, அது மோக்ஷத்தை தரக்கூடியது என்று அறியாமல் செய்தாலும் அவன் மோக்ஷத்தை அடைவான். அதுவே லௌகீக தர்மத்தை இது தர்மம் என்ற புத்தியோடு செய்தாலும், அது அவனை மோக்ஷத்தில் சேர்க்காது. இந்த லௌகீக தர்மங்களை ஒருவர் பகவானை ப்ரீதி செய்ய பண்ணுவதாக எண்ணலாம். ஆனால் இவைகளால் ஒருவர் ஒருக்காலும் மோக்ஷம் அடைய முடியாது.
      ஹ்ருதயத்தில் பக்தி பெருகுமானால், அன்னையைத் தொடரும் குழந்தைகளைப் போல் ஞானம், வைராக்கியம் என்ற குழந்தைகளும் தானே பின்தொடர்ந்து வந்து குடிகொள்ளுமாம். இதனால், ஹ்ருதயத்தில் உள்ள முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு சந்தேகங்கள் அனைத்தும் நீங்கிவிடும். பரம கருணையினாலேயே பகவான் பல க்ஷேத்திரங்களில் கோவில் கொண்டுள்ளான். தற்செயலாக இங்கு வரும் ஒருவன் தன்யனாகி கொஞ்சம் கொஞ்சமாக மேலே கொண்டு வரப்படுகின்றான். கடைசியாக, அவனுக்கு கிருஷ்ண கதைகள் கேட்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுகின்றது. அதனால் ஹ்ருதயத்தில் உள்ள மலங்கள் நீங்கி, பக்தி ஸித்திக்கின்றது. நம் ஸாதிரங்கள் ஒரு மனிதனுக்கு  பஞ்ச கோஸங்கள் இருப்பதாக கூறுகின்றன. இவைகள் ஒன்றுக்கு ஒன்று கிரந்தியால் (முடிச்சினால்) தொடர்பு உள்ளவை. கிருஷ்ண பக்தி செய்யும்பொழுது அந்த பக்தியே ஒரு கத்தியாக மாறி இம்முடிச்சுகளை அறுத்து விடுவதாக பாகவதம் இங்கே கூறுகிறது.
      மற்ற தெய்வங்கள் அவரவர்களை உபாஸிப்பதினால், என்ன அருள் புரிவார்களோ தெரியாது. ஆனால், நமது கிருஷ்ண பரமாத்மாவின் இயல்பு என்ன தெரியுமா? தன்னை ஆரயிப்பவர்களை பரம யோக்கியனாகவும், ஞானியாகவும், தன் போலவே செய்து விடுவதுதான் அவன் வபாவம்! அதனால் நித்யம் பாகவதத்தை ஸேவிப்பதினால் ஒருவன் சிறிது சிறிதாக ரஜ, தம போன்ற வபாவங்களிலிருந்து வெளி வந்து சத்வ குணத்திலேயே நிலை பெறுகிறான். மேலும் இதனாலேயே அவனுக்கு பிரேம பக்தியும் உண்டாகின்றது.
      ஆகையால், எல்லா தர்மங்களைக் காட்டிலும் வாஸுதேவனின் லீலைகளை ஸ்மரிப்பதுதான் உயர்ந்த தர்மம் ஆகும். யாகமும் அந்த யக்ஞ நாராயணன் பொருட்டே செய்யப்படுகின்றது. தவம், தர்மம், கர்மம், யோகம் எல்லாம் வாஸுதேவனின் பொருட்டே செய்யப்படுகின்றன. இந்த வாஸுதேவனைத்தான் தத்துவம் தெரிந்த மஹான்கள் 'பிரும்மம்' என்றும், யோகிகள் 'பரமாத்மா' என்றும், பக்தர்கள் 'பகவான்' என்றும் அழைக்கிறார்கள். இந்த வாஸுதேவன், சிருஷ்டி செய்ய ஆசைப்பட்டு பல லோகங்களை சிருஷ்டித்து, அதன் அனைத்துள்ளும் அந்தர்யாமியாக இருந்து கொண்டு நடத்திச் செல்கின்றான்.
                  அத்யாயம் 3
மூன்றாவது அத்யாயத்தில் ஸூதர் பகவான் வாஸுதேவனின் அவதாரங்களைப் பற்றி வர்ணிக்க ஆரம்பிக்கின்றார். உலக ஸ்ருஷ்டிக்காக பகவான் விராட் ஸ்வரூபமாக ஆனான். இதே பகவான்தான் பல்வேறு அவதாரங்களைச் செய்து உலகத்தையும் தர்மத்தையும் ரக்ஷிக்கின்றான்.  

No comments:

Post a Comment