Sunday, April 3, 2011

பக்தர்களின் கேள்விகளுக்கு ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்களின் பதில்கள்


 கேள்வி: எனக்கு சிறு வயது இருக்கையில், என் பாட்டி எனக்கு விளக்கேற்றும் பழக்கம் கற்று தந்தார். அதை நான் இன்று வரை கடைப்பிடித்து வருகிறேன். மின்சார வசதி இல்லாததால்தான், அக்காலத்தில்  விளக்கேற்றும் வழக்கம் இருந்தது என்பது என் எண்ணம். இது சரியா? அல்லது என் பாட்டி சொன்னதில் ஏதாவது விசேஷம் இருக்கிறதா?
பதில்: விளக்கேற்றுவதால் நமது பாபங்கள் அழிகின்றன. ஷீரடி  பாபாவின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் இதை நன்கு விளக்கும். முதலில் ஷீரடிக்கு அவர் வந்தபொழுது, வீடுவீடாகவும் கடைகளுக்கும் சென்று, ஒரு பாத்திரத்தில் எண்ணெயை யாஸித்து வந்தார். அந்த எண்ணெயை கொண்டு அவர் அருகிலுள்ள ஒரு மசூதியில் பல விளக்குகளை ஏற்றி வந்தார். சிலருக்கு இது ஏற்புடையதாக இல்லை; அவர்கள் தொல்லை தரவே, பலரும் எண்ணெய் தர மறுத்தனர். அதனால் ஷீரடி பாபாவிற்கு, எண்ணெய் கிடைக்காமல் போய் விட்டது. அதனால் அவர் தனது வாயிலிருந்தே நீரை உமிழ்ந்து அதைக் கொண்டு விளக்குகளை ஏற்றினார். இந்த அதிசயத்தை பார்க்க கூட்டம் கூடி விட்டது. அவர்களை பார்த்து அந்த ஷீரடி மஹாத்மா "நான் விளக்குகளை ஏற்றி உங்கள் பாவங்களைத்தான் போக்குகின்றேன். உங்களால் அதை புரிந்து கொள்ள முடியவில்லையே!" என்றார். ஆதலால் விளக்கேற்றுவதை நிறுத்த வேண்டாம்.
கேள்வி: வேதவியாஸர் கிருஷ்ணனின் காலத்தில் வாழ்ந்தவர். ஆதலால் அந்த காலத்தில்தான் வேதம் நான்காக பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ராமாயணத்தில் கூட வேதங்களை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றனவே? எப்படி இது சாத்தியம்?  பதில்: பகவத்கீதையில் 18அத்தியாயங்கள் இருக்கின்றதென்று நமக்கு தெரியும். இப்பொழுது ஒருவர் அந்த பதினெட்டு அத்தியாயங்களை பிரித்து, பதினெட்டு தனித்தனி புத்தகங்களாக போடுகின்றார் என வைத்து கொள்வோம். அப்படி பதினெட்டாக பிரித்தபிறகு, அவை அனைத்தும் சேர்ந்த பகவத்கீதை எனும் மூலம் இல்லாமல் போய் விடுகிறது என்றா அர்த்தம்? அதுபோலவே நான்கு வேதங்களும் அனாதி காலமாக இருக்கின்றன. ரிக்வேதம், தேவர்களை யக்ஞங்களுக்கு அழைப்பதற்கான மந்திரங்களையும் பிரார்த்தனைகளையும் கொண்டது. ஸாம வேதம் என்பது, ரிக்வேதத்திற்கு ஒரு ராகம் அமைந்தது போன்றே ஆகும். யஜூர் வேதம் யக்ஞம் செய்வதற்கான வழிமுறை குறித்து விரிவாக பேசுகிறது. கலியில் வரும் ஜனங்களால் வேதம் முழுவதையும் கற்க இயலாது என்பதால், அதை நான்காக பிரித்து ஒவ்வொருவருக்கும் ஒரு பாகத்தை காப்பாற்றும் பொறுப்பை அளித்தார் வேதவியாசர். இப்படி செய்ததினால் நான்கும் சேர்ந்த வேதம் முன்னரே  இல்லை என்று சொல்வது தவறு அல்லவா?
கேள்வி: எளிமையான பிரார்த்தனையின் மூலம் கடவுளை அடைய முடியும் என்று சொல்கின்றனர். அதே சமயம், சாதிரங்களும் உபாஸனா முறைகளும் கடவுள் சாதாரண மனிதனுக்கு மிக தூரத்தில் உள்ளார் என்கின்றனர்? இந்த முரண்பாடு ஏன்?
பதில்: பிரார்த்தனையை நம்பாதவர்களுக்காக அவை சொல்லப்பட்டு உள்ளன.

No comments:

Post a Comment