Sunday, April 3, 2011

மதுரமான மகனீயர் - 181 by Dr.A.Bhakyanathan


 நாம் எவ்வளவுக்கெவ்வளவு பின்னால் உலகத்தில் பிறக்கின்றோமோ, அவ்வளவுக்கவ்வளவு பாக்கியவான்கள். ஸ்ரீமத்பாகவதத்தில், பிரஹ்லாதன் வாக்கியத்தை சத்யம் செய்வதற்காக பகவான் நரஹரியாக அவதரித்தான். அந்த நரஹரியை துதி செய்ய பிரஹ்லாதனுக்கு விஷயமே கிடைக்கவில்லை. ஏன் என்றால், பூரணமான அவதாரங்களான ராம, கிருஷ்ண அவதாரங்கள் அதற்கு பிறகு ஏற்பட்ட அவதாரங்கள். இந்த அவதாரங்களின் சரித்திரம், குணங்கள், ரூபம், லீலைகள், சௌலப்யம், சௌசீல்யம் இவைகளை பிற்காலத்தில் வந்த பக்தர்கள் பாடி தள்ளியுள்ளார்கள். இப்படி பாடப்பட்டவைகளில் இரண்டு விதங்கள். ஒன்று கவிகளால் பாடப்பட்டவை. மற்றொன்று பகவானை பார்த்தவர்களால் அருளப்பட்டவை. பகவானை நேருக்கு நேர் பார்த்த ஜயதேவரால் அருளப்பட்டதுதான் அஷ்டபதி. பூரி க்ஷேத்திரத்தின் மூர்த்தியான ஜகன்னாதர், அஷ்டபதியை தன்னுடைய தலையில் வைத்து அதன் தெய்வத்தன்மையை நிரூபித்தார். ஸ்ரீதரர் செய்த ஸ்ரீமத்பாகவத பாஷ்யத்தை வேணி மாதவன், அலஹாபாத் க்ஷேத்திரத்தில் தன் தலையில் வைத்து, அதற்கு தன்னுடைய அங்கீகாரத்தை தெரிவித்தான். ஸந்த் துக்காராம் எழுதிய அபங்கங்களை, பண்டரீபுரத்தில் பாண்டுரங்கன் தன் தலையில் வைத்து அதன் தெய்வத்தன்மையை தாபித்தான். சங்கரர் பாஷ்யத்தை வியாஸ பகவான் பிரத்யக்ஷமாகி அங்கீகரித்தார். அந்த காலத்தில் தெய்வத்தின் அருளால் ஒன்று எழுதப்பட்டதா? அல்லது மனிதனின் திறமையால் எழுதப்பட்டதா? என்பதை பரீக்ஷை செய்து பார்ப்பார்கள். அதன்படி, ஒரு கிரந்தத்தை ஆற்றில் போட்டால் அது நீரின் ஓட்டத்தோடு போகாமல் எதிர்த்து வர வேண்டும். இதற்கு புனல் எரி என்று பெயர். அல்லது அந்த கிரந்தங்களை நெருப்பில் போட வேண்டும். அது பொசுங்காமல் இருக்க வேண்டும். இதற்கு தணல் எரி என்று பெயர். இப்படியெல்லாம்  பரீக்ஷை செய்வார்கள். அந்த ரீதியில் "நம்முடைய ஸத்குருநாதரான ஸ்ரீஸ்ரீஅண்ணாவின் கிரந்தங்கள் திவ்ய வாணி. சிவபக்தர்கள் தேவாரத்தையே தெய்வமாக வழிபடுகின்றனர். அதுபோல் ஸ்ரீவைஷ்ணவர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தத்தையே தெய்வமாக வழிபடுகின்றனர். ஸ்ரீமத்பாகவதத்தையே நாம் சாக்ஷாத் கிருஷ்ணன் என்கின்றோம். "சாஹிப்" என்றால் மஹாராஜா என்று பொருள். சீக்கியர்கள் கிரந்தத்தை மட்டுமே தங்களுடைய தெய்வமாக நினைக்கின்றார்கள். அந்த "கிரந்தசாஹிப்"பிற்குத்தான் அமிர்தசரஸில் பொற்கோயிலை கட்டியுள்ளார்கள். அதுபோல் ஸ்ரீஸ்ரீஅண்ணா அனுக்ரஹித்துள்ள கிரந்தங்களுக்கு தனியாக ஒரு கோவில் கட்ட வேண்டும்" என்று நம் ஸ்ரீஸ்வாமிஜி ஆசைப்பட்டார்கள். அதன்படி உருவானதுதான் "ப்ரேமிக வித்யா கேந்திரா"; குர்கான் - டில்லியில் இது கட்டப்பட்டுள்ளது. இங்கு ஸ்ரீஸ்ரீஅண்ணாவின் கிரந்தங்கள் சமஷ்டியாக வைக்கப்பட்டுள்ளது. அதற்கு "கிரந்த பகவான்" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த கிரந்தங்கள், ஆதிசேஷன் மேல் எழுந்தருள செய்யப்பட்டுள்ளது.
                இந்த கிரந்த பகவான் மேல், அஷ்டோத்திரம், ஆரத்தி இரண்டும் இயற்றப்பட்டுள்ளது. காலையும், மாலையும் கிரந்த பகவானுக்கு அஷ்டோத்திரத்தால் அர்ச்சனை செய்யப்பட்டு, ஆரத்தி செய்யப்படுகின்றது. மேலும் ஸ்ரீஸ்ரீஅண்ணாவின் கிரந்தங்கள் எல்லாம் தனித்தனியாகவும் எழுந்தருளப்பட்டுள்ளது. நடுவில், சிம்மாசனத்தில் சத்ர, சாமர உபசாரத்துடன் ஸ்ரீஸ்ரீஅண்ணாவின் பரம சித்தாந்தமான ஆசார்ய ஹ்ருதயம் எழுந்தருளப்பட்டது. இந்த பிரேமிக வித்யா கேந்திராவின் முதலாம் ஆண்டு விழா, இந்த மார்ச் மாதம் 8,9.10 தேதிகளில் நடைபெற்றது. சென்றமுறை இந்த கேந்திராவின் மூலமாக ஸ்ரீஸ்ரீஅண்ணாவின் "பிருந்தாவன மஹாத்மியம்" ஹிந்தி மொழியில் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு "வைஷ்ணவ ஸம்ஹிதை" ஹிந்தியில் வெளியிடப்பட்டது. தினமும் ஸ்ரீஸ்ரீஅண்ணாவின் பிரவசனமும் (முன் அட்டைப்படம்), திவ்யநாம சங்கீர்த்தனமும் நடைபெற்றது. இந்த "பிரேமிக வித்யா கேந்திரா" பக்தர்களின் தரிசனத்திற்காக தினமும் காலை 10மணி முதல் மாலை 5மணி வரை திறந்து வைக்கப்பட்டுள்ளது. பாக்கியமுள்ள பக்தர்கள் சென்று தரிசனம் செய்யலாம்.

No comments:

Post a Comment