Sunday, April 3, 2011

மாலே மணிவண்ணா - 94 - மகா வித்துவான் மயிலம் வே.சிவசுப்பிரமணியன்


முதல், துணை, நிமித்த காரணன் ஆக ஜகத்துக்கு எம்பெருமானே விளங்குகிறான் என்ற கருத்தை விஷ்ணு ஸஹஸ்ர நாமம் தன் தொடக்கத் திருநாமத்திலேயே சொல்லிவிடுகிறது.
      1.விவம் - எல்லாமாக இருப்பவர் - உலகில் உள்ள எல்லாமும், உலகமும் அவரே; இறைவனைச் சொல்லால் குறிப்பிடுவது ப்ரணவம். பரம்பொருளும் அதன் விரிவான உலகமும் ஓங்காரமே. பரம்பொருள் உலகமாகக் காரியப்படும் நிலையில் முதலில் தோன்றியது ஆகாசத்தின் தன்மாத்திரையான ஒலிதான். அந்த ஒலியின் முதல் விளக்கம் "ஓம்" எனும் ப்ரணவம். அதனால் பரம்பொருளுக்கு விளக்கம் தரும் வேதத்தை ஓதத் தொடங்குகையில் முதலில் ஓங்காரம் இடம்பெறுகிறது. பிரணவத்தில் தொடங்கி பிரணவத்தில் முடிவதால், வேதமும் பரம்பொருளாகிறது. பிரணவம் உலகத்தில் எல்லா சப்தத்திலும் விரவி நிற்கிறது. உலகமாக விரிய இருக்கும் பரம்பொருளின் முதல் தோற்றம் ஒலி; அதிலிருந்து எல்லாமும். ஆகவே பிரணவமும் விவம். ஆகவே எல்லாமாய் இருப்பவர் இறைவனே. எல்லையற்ற பரிசுத்தமான மங்கள குணங்கள், பெருமை, இவை எம்பெருமானிடம் எல்லையற்ற  கருணையோடு கூடியுள்ளன. அவர் ஸ்வயம் பரிபூரணர். அதனால் விஷ்ணு விவம் ஆகிறார்.
2. விஷ்ணு - எங்கும் நிறைந்திருப்பவர். உள்ளும் வெளியும் பரவி இருப்பவர். தேசம், காலம், பொருள் இவற்றால் அடங்காமல் பரவி இருக்கும் தன்மையே விஷ்ணு. தன்னால் படைக்கப் பெற்ற எல்லாவற்றிலும் தான் நுழைந்திருப்பவர். அவற்றின் இருப்பை நிலைப்படுத்தவே அவர் அவ்வாறிருக்கிறார்.
5. பூதக்ருத்  - எல்லாவற்றையும் தோற்றியவர்.
6. பூதப்ருத்  - எல்லாவற்றையும் தாங்குபவர்.
7. பாவ: - எல்லாவற்றின் இருப்பாகவும், இருக்கும் பொருளாகவும் இருப்பவர். பகவானது இருப்பு உலக வடிவில் உணரப்படுகிறது. உலகை ஒதுக்கித் தனித்தும் அவருக்கு இருப்பு உண்டு. எல்லாவற்றிலும் கலந்து எல்லாவற்றையும் நிலைப்படுத்துகிறார்.
8. பூதாத்மா  எல்லாவற்றிற்கும் ஆத்மாவாக இருப்பவர். இந்தத் திருநாமங்களின்  மூலம் எம்பெருமானே உலகம் - சர்வமும் அவரே என்கிற செய்தி தெளிவாகிறது.
இந்த வகையில் எம்பெருமான் "உலகைப் படைத்து உலகில் நுழைந்து உலகாய் நிற்கிறான்" என்பதை வைத்தே அவன் தனிமாயை ஒருவரால் அறிதற்கரியது என்று ஆழ்வார்கள் கூறி ஆராதித்தார்கள்.
தூயக்கறு மதியில் நல் ஞானத்துல் அமரரைத் துயக்கும்
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்
என்பார் நம்மாழ்வார் திருவாய்மொழியில் (1-3-10). "எதுவரை உள்ளது எங்கு சென்று முடிவது என்று அளவிடமுடியாத, அவனால் தோன்றி அவனுள் அடங்கும் இந்த ஆகாயத்தினும் "மயக்குடை மாயைகள் பெரியன வல்லன்" என்று ஆழ்வார் வியக்கிறார்.
உலகப் படைப்பு நிகழுமாற்றைத் தத்துவங்களின் மூலமாகச் சொல்வது சமயங்களின் வழிமுறையாகும்.
சைவசமயம் 36 தத்துவங்கள் என்று சொல்லும். சிவதத்துவம் 5. வித்தியாதத்துவம் 7. ஆன்மதத்துவம் 24 என்பது அதன் விரிவாகும். உலகம் 24 தத்துவங்களால் ஆகியது என்பது வைஷ்ணவ நெறி. இருபத்தைந்தாவது தத்துவம் உயிர். இருபத்தாறாவது தத்துவம் இறைவன் என்பது வைஷ்ணவ நெறி.

No comments:

Post a Comment