Sunday, April 3, 2011

ப்ருந்தாவனமும் நந்தகுமாரனும் - தன்வந்தி பாயி - 1


டாக்டர் நாராயணதாஸ் பரவால் , ஜெய்புர் தர்பாரின் குடும்ப வைத்தியர். ஜெய்புர் நகரத்தில் அவர் மிகவும் மதிக்கப்பட்டார். அவருக்கு இரண்டு புதல்வர்களும் மூன்று பெண்களும் இருந்தனர். அதில் நடு பெண்ணிற்கு தன்வந்தீ பாயி என்று பெயர். டாக்டர் நாராயணதாஸ் தீவிரமான ஆர்ய ஸமாஜ தொண்டராக இருந்தார். அவரது வீட்டிலேயே ஆர்ய ஸமாஜின் வழக்கப்படி ஹோமாதிகள் நடைப்பெற்றன. தனது குடும்பத்தினரையும் ஆர்ய ஸமாஜத்தின் கொள்கைகளையே பின்பற்றச் செய்தார். குடும்பத்தினர் யாரும் கோயில்களுக்குச் செல்வதோ ஸ்ரீமத் பாகவதம் போன்ற புராண ப்ரவசனங்களுக்குச் செல்வதோ  தடையிடப்பட்டிருந்தது. தன்வந்தீ பாயியும் இச்சூழலிலேயே வளர்ந்தாள். ஆர்ய ஸமாஜத்தின் பள்ளியிலேயே அவள் கல்வியும் பெற்றாள். அதனால் ஆர்ய ஸமாஜத்தின் பாதிப்பு அவளிடம் ஆழமாக இருந்தது.
      சிறு வயதிலேயே தன்வந்தீ பாயிக்கு திருமணம் முடிந்துவிட்டது. அவள் பதினான்கு வயது இருக்கும் பொழுது, அவரது கணவர் காலகதி அடைந்துவிட்டார். இதன்பின், தன்வந்தீ பாயி தன் பிறந்தகத்திற்கே வந்து விட்டாள். அவளது வாழ்க்கையே சூன்யமாகி விட்டது. எப்பொழுதும் சோகம் பீடித்தது.
      ஒரு நாள் தன்வந்தீ பாயி, வீட்டின் மாடியில் உலாவிக் கொண்டிருந்தாள். அப்பொழுது, எதிரில் இருந்த மனையில், ப்ருந்தாவனத்திலிருந்து வந்திருந்த, ஒரு ராஸ மண்டலி குழுவினர், கிருஷ்ண-ஸுதாமா லீலையை நாடகமாக போட்டுக் கொண்டிருந்தார்கள். மாடியிலிருந்து நன்றாக அதை பார்க்க முடிந்தது.
      தன்வந்தீ பாயி, அந்த மண்டலியின் க்ருஷ்ணரின் அழகு மற்றும் மாதுர்யத்தில் தன்னையே மறந்தாள். ஸூதாமாவின் மீது க்ருஷ்ணன் பொழிந்த க்ருபை மற்றும் மாதுர்யத்தில் தன்னையே மறந்தாள். ஸூதாமாவின் மீது க்ருஷ்ணன் பொழிந்த க்ருபை மற்றும் அவனது பக்த வாத்ஸல்யத்தைக் கண்டு, தன் வாழ்வில் இழந்த நம்பிக்கையை அவள் சிறிது பெற்றாள்.  இறந்து விட்ட தன் மனதில் மீண்டும் ப்ராணன் ஸஞ்சரிப்பதை உணர்ந்தாள் தன்வந்தீ பாயி. சோகத்தின் கருமேகங்கள் விலகி அவளது மனதில் நம்பிக்கையின் புதிய கிரணங்கள் உதித்தன.
      அவள், "பகவானை சிருஷ்டி கர்த்தாவாகவும், இப்பிரபஞ்சத்தை இயக்குபவனாகவும் மட்டுமே எண்ணியிருந்தேன். ஆனால் அவரோ பக்தர்களின் நண்பராகவும் பந்துவாகவும் இருக்கிறாரே! அவர் ஆப்தகாமர் (எல்லா ஆசைகளும் பூர்த்தியானவர்), தன்னிலேயே ரமிக்கும் ஆத்மா ராமர், மோஹமற்றவர் என்று மட்டுமே நான் எண்ணியிருந்தேன். ஆனால் அவரோ லீலாமயமாகவும், கருணையே வடிவாகவும், பக்த வத்ஸலனாகவும் மட்டுமில்லாமல், பக்தர்களுக்கு அடிமையாகவும் அன்றோ இருக்கிறார்! ஸூதாமா எண்ணியதைப் போல பகவானை நண்பனாகவோ உறவினனாகவோ பாவனை செய்தால், பகவானும் நம்மிடம் அந்த பாவனையிலேயே பழகுகின்றானே! இப்படிப்பட்ட பரம கருணாமூர்த்தியான பகவான் கிருஷ்ணன் இருக்கும் பொழுது, துக்கத்திற்கோ சோகத்திற்கோ என்ன காரணம் இருக்க முடியும்? நானும் பகவானிடம் ப்ரேமையெனும் ஸம்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு, அவனை ஏன் என்னுடையவனாக ஆக்கிக் கொள்ளக் கூடாது? அவரிடம் ஏன் நான் என்னையே ஆத்மஸமர்ப்பணம் செய்து, எனது வாழ்க்கையை பலனுள்ளதாக ஆக்கிக் கொள்ளக் கூடாது? " என்று எண்ணினாள்.
      ஸூதாமாவை ஆலிங்கனம் செய்து கொண்ட ஸ்ரீக்ருஷ்ணனின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியதைக் கண்டாள் தன்வந்தீ பாய். அவள்  துக்கத்தின் காரணமாக ஸூதாமாவுடன் ஒன்றி விட்டாள். கிருஷ்ணன் தன்னையே ஆலிங்கனம் செய்து ஆச்வாஸப்படுத்துவதாக எண்ணி, பரம சாந்தியை அளிப்பதாக உணர்ந்தாள்.

No comments:

Post a Comment