Sunday, April 3, 2011

அப்பாலுக்கு அப்பால் - அல்லமபிரபு -1


அல்லமபிரபுவின்  பிறப்பு குறித்து இருவேறு கருத்துக்கள் உள்ளன. இரு செய்திக்குறிப்புகளுமே இவர் ஒரு மிக சிறந்த யோகீச்வரரை அதிசயமாக சந்தித்ததன் பின்  உலகம் போற்றும் மிக சிறந்த குரு ஆனார் என்கிறது. கன்னட மொழியில் பிரபுலிங்கலீலை என்று எழுதப்பட்ட காவியம்தான் இவரது சரித்திரத்திற்கு முக்கிய ஆதாரம். அல்லமபிரபுவின் கவிதைகள் மிக பிரசித்தி. ரமணமஹரிஷிகளும் இவரது ஒரு வசனத்தை அடிப்படையாக கொண்டே தமது கிரந்தமான உள்ளது நாற்பதில் ஒரு பாடலை அமைத்தார் என்பர். வீரசைவ மதத்தின் நடுநாயகம் இவர்.  நாயன்மார்களில் முதன்மையானவரான சுந்தரர் பிறப்பெடுக்க காரணமாக கைலாயத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. அதுபோலவேதான் அல்லமபிரபுவின் பிறப்பிற்கும் ஒரு சுவையான சம்பவம் காரணம் எனப்படுகிறது. சண்டேவரரேயே பிருங்கீசர் என்பர். அவர் கைலாயத்தில்  சிவபெருமானின் அருகில்  இருந்து  கைங்கரியம்  செய்பவர் . அவர் ஒருமுறை சிவபெருமானை மிகவும் புகழ்ந்து போற்றினார். அருகிருந்த பார்வதி தேவியை அவர் துதிக்கவில்லை. பார்வதி மிகவும் வருத்தப்பட்டு, "அப்படி செய்தது தவறு" என கூறுகையில் சண்டேஸ்வரர் "தாங்களும் சிவபெருமானுக்குள் அடக்கம். மேலும் முத்து நீரில் கிடைத்தாலும் நீரை விட அது வேறல்லவா? தங்கம் பூமியில் இருந்தாலும் அது பூமியில் இருந்து வேறு அன்றோ? அது போல் உலகமனைத்திலும் அவர் இருந்தாலும், உலகமனைத்திற்கும் தாயான தாங்கள் அவருடனே இருந்தாலும் அவர் தங்களிடமிருந்து தனித்தவரே" என்றார். இது குறித்து தேவ தேவியருள் வாதம் உண்டாயிற்று.  ப்ருங்கீசரை அல்லமபிரபுவாக பரமசிவன் பிறக்க வைத்தார். மேலும் தேவியை பார்த்து "அல்லமபிரபு மாயையில் மயங்காதவர். நீ வேண்டுமானால் பரீக்ஷை செய்து பார்" என்றார். பார்வதியின் தமோகுண அம்சமாக மாயை என்று ஒரு பெண் பிறந்தாள். இவள் மமகாரராயன்  எனும்  பணவாசி(இது கர்நாடகத்தில் உள்ளது)  மன்னனுக்கு மோகினி தேவி என்பவளிடம் பிறந்தாள். பணவாசி அக்காலத்தில் இருந்த மிக சிறந்த நகரமாக சொல்லப்படுகிறது. தேவர்களும் இந்நகரின் பெருமையை குறித்து பேசி வந்தனர். அந்நகரத்தில் இல்லாத வளங்களே இல்லை. உயர்ந்த கட்டிடங்களும் அழகிய கோட்டையும் நல்ல பலமுள்ள சேனையும் நல்ல சமுதாயமும் இயற்கை வளங்களும் அநேகம்  பொருந்திய இப்படிப்பட்ட பணவாசியில் பிறந்த மாயை மிக அழகாக இருந்தாள். மிக அழகாக பேசுவாள். இவள் அனைவருக்கும் ஹிதத்தை செய்து வந்தாள். மாயையின் சாதுரியமும் அழகும் அவளுடைய பெற்றோருக்கு மிகுந்த ஆனந்தத்தை கொடுத்தது. புத்திசாலியான இவள் தான் மனதில் நினைப்பதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் எப்பொழுதும் புன்சிரிப்பாலும் தனது அழகாலும் அனைவரையும் கவர்ந்தாள். அவளைக்கண்டு மோகிக்காத ஆடவரே இல்லை.  இதே சமயத்தில் அல்லமபிரபுவும் அயோனிஜராய் ஓரிடத்தில் அவதரித்தார்.  நிரஹங்காரர்,  சுஞான தேவி எனும் உத்தம தம்பதிகள் உண்மையை எடுத்துரைக்கும் ஒரு சிறந்த பக்தனே தங்களுக்கு புத்திரனாக பிறக்க வேண்டும் என்று பரமசிவனை நோக்கி தவம் இருந்தனர். அவர்களால்  கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார் அல்லமபிரபு. அல்லம பிரபு  பெரியவராக வளர்ந்த பின் தம் தாய், தந்தையருக்கு முக்தி அடையும் வழியை உபதேசித்து  விட்டு பணவாசி சென்றார். அங்குதான் மாயை சங்கீத வித்வான்களிடம் நாட்டியமும் சங்கீதமும் பயின்று வந்தாள். அல்லமபிரபுவிற்கும் மாயைக்கும் அங்கு பரிச்சயம்  ஏற்பட்டது. மாயை கோவிலில் பாடிக்கொண்டே ஆடுவாள். அப்பொழுது அல்லமபிரபு அங்கு வந்து வாத்தியம் வாசிப்பார். ஒன்றை ஒன்று விஞ்சும் விதமாக இருக்கும். வாத்திய இசையில் மயங்கிய மாயை தன் மனதை அல்லமரிடம் பறிகொடுத்தாள். அல்லமரும் அவளிடம் அன்பு பாராட்டி வந்தார். மோகவசத்தால் ஒருமுறை மாயை தனிமையில் அல்லமரை கட்டி கொண்டாள். அதிசயமாக, அவளால் அல்லமரை கட்டிக்கொள்ள முடியவில்லை.

No comments:

Post a Comment