Tuesday, February 15, 2011

madhuramana mahaneeyar SEP 2010 - 175- Dr.A.Bhakyanathan

மனித பிறவி எடுத்தலும், உத்தமமான ஸத்குருநாதரின் சங்கம் கிட்டுவதும் மிக அரிது. அப்பேர்ப்பட்ட குருநாதரின் அருளினால் முக்தி கிடைக்க பெறுவதே மனிதபிறவியின் இலட்சியம்.  முக்தி அடைவதே மனித பிறவியின் இலட்சியம் என  ஸ்ரீமத்பாகவதமும்,  ஸகல ஸாதிரங்களும் போதிக்கின்றன என ஸ்ரீஸ்வாமிஜி பன்முறை கூறி உள்ளார் அல்லவா? இருப்பினும், ஒரு குருவானவர், தமது சீடனின் உலக வாழ்விற்கு தேவையானவற்றை, பூரணமாக தந்து அருளுவார்.
       ஸ்ரீஸ்வாமிஜி, தம்மை அண்டியோரின் மிக சிறிய தேவைகளை கூட, எப்படி பூர்த்தி செய்கிறார் என்பதை சத்சங்கத்தினர் அறிவர். அப்படி ஒரு நிகழ்ச்சியை, இங்கு பகிர்ந்து கொள்ள நான் பிரியப்படுகிறேன். நமது சத்சங்கத்தை சேர்ந்த  திரு.வெங்கடேசன் குடும்பம், ஸ்ரீஸ்வாமிஜியிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டது.
         நங்கநல்லூரிலிருந்து வரும் இவரின் தந்தை, திரு.குருமூர்த்தி  பிரதிவருடம் ஹரித்வார் மற்றும் ரிஷிகேசம் யாத்திரை சென்று வருவார். இவ்வருடமும் அவருக்கு, அங்கு செல்ல, ஆசை இருந்து வந்தது. திரு.வெங்கடேசனின் தாய் திருமதி.நீலாயதாஷிக்கு காலில் வலி இருந்ததால், இதை தள்ளி போட்டு வந்தனர். இருப்பினும், குருமூர்த்தி அவர்கள்  எப்படியேனும் யாத்திரை செல்ல முடிவு செய்தார். செல்லும் முன், வந்து,  ஸ்ரீஸ்வாமிஜியின் ஆசிகளை பெற்று சென்றார்.
        அவரது துணைவியாருக்கு காலில் வலி இருந்ததால், பிரத்யேகமாக இதற்கென ஒரு ஸ்பெஷல் காலணியை புதிதாக  வாங்கி அணிந்து சென்றார். 76வயதானாலும் குருமூர்த்தி தன் துணைவியாருடன் தனித்தே சென்றார். ஹரித்வாரில் முதல் நாள் தரிசனம் முடிந்தது. அங்கு தங்கி விட்டு, அடுத்த நாள் ரிஷிகேசம் செல்வதாக ஏற்பாடு. புது காலணி வெங்கடேசனின் தாயின் காலை நன்கு கடித்து விட்டது. நல்ல வீக்கம் வந்து விட்டது. இருப்பினும், தம்பதிகளிருவரும் மறுநாள் ஒரு காரில் ரிஷிகேசம் புறப்பட்டு சென்றனர்.
         அங்கு இறங்கி நடக்கையில், வெங்கடேசனின் தாய்க்கு,  காலில் செருப்பு கடித்த இடத்தில், தோல் கிழிந்து ரத்தம் வர ஆரம்பித்து விட்டது.  துணியினால் அடைத்து பார்த்தும் அது நிற்கவில்லை. சர்க்கரை உபாதை வேறு இருந்ததால், ரத்தம் நிற்காததினால், அவருக்கு கடும் அசதியாகி விட்டது. ஒரு சமயத்தில் தன் கணவரிடம் "எங்கிருந்தாவது பிளாஸ்திரி வாங்கி வாருங்கள்.  மேற்கொண்டு நடக்க இயலாது" என்றபடி அப்படியே அமர்ந்து விட்டார். மேலும் நம் ஸ்ரீஸ்வாமிஜியை பன்முறை "குருஜி! என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள். நீங்களே துணை" என மனதாலும் வாய்விட்டும் பிரார்த்தித்தவாறு இருந்தார்.  
                 வெங்கடேசனின் தந்தை குருமூர்த்தியும் பல இடங்களில் விசாரித்தும், யாதொரு  மருந்து கடையும் கண்ணில் படவில்லை. அன்று ஏதொவொரு "பந்த்"தாம்; ஒரு கடையும் திறந்து இருக்கவில்லை. தட்டு தடுமாறி வேறு வழி இல்லாததால், இருவரும்,  உதவி தேடி நடந்து சென்றனர்.
                   சிறிது தூரம் சென்ற பின், ஒரு கடை தென்பட்டது. சிறு டப்பாக்கள் கொண்ட ஓமியோபதி கடை போல் தென்பட்டது அது. குருமூர்த்தி அக்கடையில் விசாரித்தார். கடைக்காரருக்கு இந்தி மட்டும்தான் தெரிந்து இருக்கிறது. குருமூர்த்தி அவர்களுக்கோ, இந்தி சுத்தமாக தெரியாது. வெங்கடேசனின் தாய், தனது காலை காண்பித்து, சைகையின் மூலம் "பிளாஸ்திரி" வேண்டும் என கடைக்காரருக்கு புரிய வைத்தார்.  காலில் ரத்தம் வடிவத்தை பார்த்தவுடன், என்ன கேட்கிறார்கள் என புரிந்து கொண்டார் கடைக்காரர். ஆனால் என்ன செய்வது! அது ஒரு ஊறுகாய் கடையாம்! அங்கு எப்படி பிளாஸ்திரி இருக்கும்! கடைக்காரர் கையை விரித்தார்.
                   வருத்தமுடன் அவர்கள் மேற்கொண்டு செல்ல எத்தனிக்க, கடைக்காரர் மறுபடி அழைத்தார். தனது கடை மேஜை டிராயர்களில் மூன்றை மாறி மாறி திறந்தவர் சற்று சந்தோஷத்துடன் ஒரே ஒரு பிளாஸ்திரியை எடுத்தார். என்றோ அவர் வைத்ததாம். அந்த பிளாஸ்திரியை  திரு.வெங்கடேசனின் தாயால் சுயமாக குனிந்து ஒட்டி கொள்ளக்கூட முடியவில்லை. கடைப்பையனே வந்து சரியாக ஒட்டி விட்டான். உதவிக்கு பணம் எதுவும்  கடைக்காரர்  வாங்க மறுத்துவிட்டார். (கஷ்டம் தீர்ந்தது மட்டுமல்ல. சென்னை வரும் வரையில் அதே பிளாஸ்திரியோடுதான் அவர் வந்தார்! )
           அப்பொழுதுதான் வெங்கடெசனின் பெற்றோர், கடையின் போர்டை பார்த்தனர். "முரளி ஸ்டோர்ஸ்" என்று அது தெளிவாக எழுதப்பட்டு இருந்தது. நம் ஸ்ரீஸ்வாமிஜியின் நாமம் அதுதானே! புல்லரித்தது தம்பதிகளிருவருக்கும். உடன் மானசீகமாய் ஸ்ரீஸ்வாமிஜியை வணங்கினர். ஸ்ரீமந்நாராயணனுக்கு ஆயிரக்கணக்கில் கைகள் என்று புருஷ சூக்தம் கூறுகிறது. அஃதாவது எல்லா கைகளும் அவனுடையதே. எப்படி வேண்டுமானாலும் அவன் உபயோகப்படுத்துவான். குருநாதருக்கும் இது சால பொருந்தும் அல்லவா? குரு என்பவர், ஆறடி சரீரம் கொண்டு இலகுபவர் மட்டுமல்லவே? அவர் சர்வ வியாபி அல்லவா? அதனால் நாமம் கொண்டு அழைத்தவுடன், உதவிக்கு வந்து விட்டார்.

No comments:

Post a Comment