Wednesday, February 2, 2011

பாலகர்களுக்கு ஒரு கதை - கடைசி பாடம் இது!


ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் குருவினுடைய உபதேசம் பற்றி விவரிக்கும்பொழுது, பண்டைய நாட்களில் சீடர்கள் குருவினுடைய அருகாமையிலேயே வாழ்ந்து அவரிடமிருந்து கற்றுக்கொண்டார்கள் என்று சொல்வதுண்டு. குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் சொற்பொழிவுகள் நிகழ்த்தி, குரு சீடர்களுக்கு உபதேசிப்பதில்லை. அவர் சொல்லும் ஒவ்வொரு சொல்லிலும், ஆற்றும் செயல்களிலும், ஒவ்வொரு அசைவிலும், வாழ்விற்கு எல்லாவிதத்திலும் வழிகாட்டும் உபதேசங்கள் இருக்கும். கவனமுள்ள சீடன் அதைப்பார்த்து பார்த்தே கற்றுக்கொள்வான்.
வட இந்தியாவில் முன்பொரு காலத்தில் பல சீடர்கள் குருகுலவாசம் செய்து தங்கள் குருவிடம் பயிற்சி பெற்று வந்தனர். அவர் ஒவ்வொரு சீடனுக்கும் கற்றுக்கொடுக்கும் விதமே தனியாக இருக்கும். ஒருபுறம் அவர்களுக்கு புராணங்கள், பக்தியூட்டும் கதைகள், சாதிரங்கள். மஹாத்மாக்களுடைய வாழ்க்கை வரலாறு போன்றவற்றை பயிற்றுவித்தார். மறுபுறம் அன்றாட வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள், சந்திக்கும் மனிதர்கள் என்று எல்லாவற்றிலிருந்தும் அழகான விஷயங்களை சுட்டிக்காட்டி பயிற்றுவித்தார். இப்படி பல வருடங்கள் குருகுல வாசம் சென்றது. சீடர்களும் பல சாதிரங்களையும் கற்று தேர்ச்சி பெற்று, குருகுல பயிற்சியை பூர்த்தி செய்யும் நிலையை அடைந்தனர். இறுதி தினத்தன்று குருநாதர் அவர்கள் அனைவரையும் அழைத்து ஒரு இடத்தில் அமரச்செய்து, "இன்றுடன் நீங்கள் உங்களது குருகுலவாசத்தை முடித்துக்கொண்டு, உலகிற்குள் செல்ல போகிறீர்கள். கற்கவேண்டியதை எல்லாம் கற்றாகிவிட்டது. இன்று கடைசி பாடம். மிக முக்கியமானது. அதைக்கற்றுக் கொள்ள உங்களை நான் ஒருவரிடம் அழைத்துச் செல்ல போகிறேன்" என்று கூறிக் கிளம்பினார்.
சீடர்களிடையே பரபரப்பு. "நம்மை ஒரு மிகப்பெரிய வித்வானிடம் அழைத்து செல்ல போகிறார்" என்றெல்லாம் அவர்களுக்குள் ஒரு பேச்சு. குருநாதர் அவர்களை கடைத்தெருவிற்கு அழைத்து சென்று ஒரு பென்சில் செய்யும் கடையில் கொண்டு நிறுத்தினார். சீடர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. உள்ளே சென்று ஒரு பெரியவர் பென்சில் தயார் செய்து கொண்டிருப்பார். அமைதியாக சென்று அவர் என்ன செய்கிறார் என்று கவனித்து விட்டு வாருங்கள்! இதுவே உங்களது இறுதி பாடம்! என்று கூறி அனுப்பினார்.
சீடர்களும் உள்ளே சென்று அமைதியாக அமர்ந்தனர். அப்பொழுது அவர் ஒரு பென்சிலை கையில் எடுத்துக்கொண்டு அதனிடம் பேசினார். "நீ உலகிற்குச் செல்லும் முன் ஐந்து விஷயங்களை எப்பொழுதும் நினைவில் கொள்ளவேண்டும்; அதை நீ கடைப்பிடிக்க வேண்டும்"
1. நீ உன்னை ஒரு கருவியாக நல்லவர்கள் கையில் ஒப்படைத்து வாழ்ந்தால் நீ அரிய சாதனைகள் புரிய முடியும்.
2. அவர்கள் உன்னை சரி செய்ய அவ்வப்பொழுது கூர்மைப் படுத்துவார்கள். உனக்கு அது வலியைத் தரலாம். ஆனால், அது உன் நலனைக் கருதியே என்று நினைவில் கொள்.
3. நீ செய்யும் தவறுகளை அழித்து சரி செய்யக்கூடிய வாய்ப்பு உனக்கு எப்பொழுதும் உண்டு.
4. உன்னுள் இருப்பதே உனது மிகப்பெரிய அங்கம்.
5. நீ செல்லும் இடங்களிலெல்லாம் உன் முத்திரையைப் பதிப்பாய்.
இவ்வாறு அவர் பென்சிலிடம் சொன்னது உண்மையில் தங்களுக்கே என்று சீடர்கள் உணர்ந்து தங்கள் குருவை வணங்கினார்கள்.

No comments:

Post a Comment