உலகில் உள்ள உயிரினங்களில் ஒரு மணி நேரம் மட்டுமே ஆயுள் உடையவைகள் உண்டு. ஓரிரு நாட்கள் மட்டுமே ஆயுள் உடையவைகள் உண்டு. ஒரு பத்து நாட்கள் மட்டுமே ஆயுள் உடையவைகள் உண்டு. எறும்புகள் ஒன்றரை வருடங்கள் உயிர் வாழ்கின்றன. முயல்கள் ஐந்திலிருந்து பதினைந்து ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. ஆடு சுமார் 12ஆண்டுகள் உயிர் வாழ்கிறது. கோழிகளும் அப்படியே 12ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன. மாடுகள் பத்திலிருந்து இருபது ஆண்டுகள் வரை கூட உயிர் வாழ்கின்றன. சிங்கம் முப்பத்தைந்து வருடங்கள் கூட உயிர் வாழும். அதிகபட்சமாய் யானை எழுபத்தைந்து வருடங்களும், ஆமைகள் நூற்றி ஐம்பது வருடங்களும் கூட உயிர் வாழ்கின்றன. மரங்களோ பல ஆயிரம் வருடங்கள் கூட உயிருடன் இருக்கின்றன. இப்படியாக சொல்லிக்கொண்டே போகலாம். அப்படி பார்த்துக்கொண்டே பொகும்பொழுது ஒரு (Logic) லாஜிக்காக பார்த்தால், உலகத்தில் எப்பொழுதுமே, அதாவது (Infinite Years) எண்ணற்ற வருடங்கள் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய ஒன்று இருக்கலாம். ஒருபொருள் உலகத்தில் ஒரு சிறிய இடத்தை (Occupy) எடுத்து கொள்கின்றது. அதை விட ஒரு சிறிய இடத்தை, வேறு ஒரு பொருள் எடுத்து கொள்கின்றது. நிலம்(பூமி) அதிகமாக இருந்தாலும், அதுவும் இல்லாத இடம் ஒன்று உண்டு. சரி - அக்னி என்று பார்த்தால், அதுவும் இல்லாத இடம் என்று ஒன்று உண்டு. அது போல் நீர், காற்று போன்றவைகளும் இல்லாத இடம் என்று ஒன்று உண்டு. ஆனால் ஆகாயம் என்று சொல்லக்கூடிய வெற்றிடம் இல்லாத இடமே இல்லை.
சில உயிரினங்களுக்கு ஒரு அறிவு உண்டு. மற்றவைகளுக்கு இரண்டு அறிவுகள் உண்டு. இப்படியாக பார்த்துக்கொண்டே போனால், உலகத்தில் எவ்வளவு அறிவு உண்டோ அவ்வளவு அறிவும் ஒருவரிடமே இருக்கலாம். எப்பொழுதும் ஒரு பொருள் இருந்துகொண்டே இருக்கும். ஒரு பொருள் எல்லாவிடத்திலும் வியாபித்திருக்கும். ஒரு பொருளுக்கு எல்லா அறிவும் இருக்கும். ஒரு பொருள் என்றைக்குமே இருக்கும் என்று சொல்லிவிட்ட பிறகு, அந்த பொருள் எப்போது தோன்றிற்று என்ற கேள்வியே பொருந்தாது. அவரை யார் படைத்தார் என்ற கேள்வியும் பொருந்தாது. எப்பொழுதும் இருக்கும் ஒரு பொருள்தான் எல்லா இடத்திலும் இருக்கக்கூடியது. அதுவே எல்லாம் அறிந்தது என்பதில் ஆட்சேபணை இருக்க முடியாது. அந்த ஒரு பொருள்தான் கடவுள்.
உலகத்தில் உயிரில்லாத பொருளே கிடையாது. பூமி, அக்னி, வாயு, நீர், ஆகாயம் எல்லாவற்றிற்கும் உயிர் உண்டு. ஒரு மனிதன் கோமாவில் இருக்கின்றான். அவனுக்கு தன்னைச் சுற்றி நடப்பது எதுவும் தெரியாது. அவன் ஒரு ஜடம் போல் இருப்பான். அவன் உடலையே அறுத்து கிழித்தாலும், அவனுக்கு தெரியப் போவதில்லை. அதனால், அவனுக்கு உயிர் இல்லை என்று சொல்ல முடியாது. எருமை மாடு, ஆமை போன்றவைகளுக்கு உணர்வு தன்மை மிகவும் குறைந்தது. அதுபோல்தான் ஆகாயம், காற்று, அக்னி, நீர், பூமி போன்ற எல்லாவற்றிற்கும் உயிர் இருந்தாலும், அந்த உணர்வை அவைகள் வெளிக்காட்டி கொள்வதில்லை. அப்படி அவைகள் இருப்பதால்தான், உலகத்தில் அந்த பஞ்சபூதத்தை நமக்கு தகுந்தாற்போல் வளைத்து கொள்கின்றோம். எல்லா இடத்திலும் ஒரு பொருள் இருக்கின்றது. எப்பொழுதும் இருக்கின்றது. பூரணமான அறிவுடன் இருக்கின்றது என்றாலே அதை தவிர வேறு இரண்டாவது பொருள் இருக்க முடியாது. அப்படி ஒரு இரண்டாவது பொருள் இருந்தாலும் நிரந்தரமாக இருக்கக்கூடிய ஒரு பொருள் என்று சொன்னேனே, அதன் மேலே ஏற்படும் ஒரு தோற்றமாகத்தான் அது இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment