Wednesday, February 2, 2011
பாகவத பழம் - 11 - இரண்டாம் பாகம்
நைமிசாரண்யம் என்றொரு அற்புதமான புனித க்ஷேத்திரம். வியாஸர் அங்கே அமர்ந்து புராணங்களை அனுக்ரஹித்த இடம் இன்றும் உள்ளது. ஒருசமயம், தேவர்கள் பிரஹ்மாவிடம் சென்று பூலோகத்தில் தாங்கள் தவம் செய்ய விரும்புவதாகவும், அதற்குத் தகுந்த இடத்தை தெரிவிக்கும்படியும் பிரார்த்தித்துக் கொண்டார்கள். பிரஹ்மா ஒரு சக்கரத்தை எடுத்து உருட்டிவிட, அது, உருண்டு உருண்டு, ஒரு இடத்தில் போய் நின்றது. அதுதான் நைமிசாரண்யம்.
அந்த நைமிசாரண்ய க்ஷேத்திரத்தில் ஒருசமயம் ஸௌனகாதி ரிஷிகள், தங்கள் அக்னிஹோத்ரத்துடன் வந்து சேர்ந்தார்கள். ஸத்ரம் என்ற ஆயிரம் வருடங்கள் செய்யக்கூடிய யாகத்தை சங்கல்பித்து செய்ய ஆரம்பித்தார்கள். ஆயிரம் வருடங்கள் அவர்கள் உயிர் வாழ்வார்கள் என்பது என்ன நிச்சயம் என்ற கேள்வி எழும். யாகம் ஆரம்பிக்கும்பொழுதே, ம்ருத்யுவை யாகசாலையின் ஓரத்தில் ஒரு தூணில் தங்கள் மந்திர பலத்தால் பிடித்து கட்டிப்போட்டுவிடுவார்கள். யாகம் முடிந்தபிறகுதான் அவிழ்த்துவிடுவார்கள். யாகத்தில் ஓய்வு நேரம் இருக்கும். அப்பொழுது வீண்பொழுது போக்காமல், புராணங்களைக் கேட்க வேண்டும். பொதுவாக இவ்வாறு இருந்தாலும், பாகவதத்தை கேட்கும் சௌனகாதிகளுக்கு பாகவதத்தில் உள்ள ருசியைப் பார்த்தால், கதையின் விராமத்தில்தான் அவர்கள் யாகத்தை செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பல புராணங்கள் யாகசாலையில்தான் அரங்கேற்றப்பட்டுள்ளன.
வேதவியாஸர் கலியுகத்தின் போக்கை நினைத்து வேதத்தை நான்காகப் பிரித்து, ஒவ்வொரு மஹரிஷியிடமும் கொடுத்து, அவர்களைக் கொண்டு அது ஒன்றையாவது ரக்ஷித்து வரும்படி கூறினார். இதிஹாச புராணங்களை ரக்ஷிக்கும் பொறுப்பை ரோமஹர்ஷணர் என்பவரிடம் கொடுத்தார். ரோமஹர்ஷணர் என்பது காரணப் பெயர். புராணங்களைச் சொல்லும்பொழுது ஒவ்வொரு சொல்லுக்கும் அவருக்கு மேனி சிலிர்க்குமாம். அதுவே, அவருக்குக் காரணப் பெயராகிவிட்டது. அவருடைய புத்திரனின் பெயர் உக்ரச்ரவஸ்; இவர்தான் பாகவதம் சொல்லும் ஸூதர். அவர் தினமும் அந்த யாகசாலைக்கு வந்து புராணம், இதிஹாசங்கள் எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கின்றார். அவரைப் பார்த்து சௌனகாதி மஹரிஷிகள், "கலியில் பிறக்கும் ஜனங்கள் அல்ப ஆயுள் உடையவர்களாகவும், மந்தபுத்தி உடையவர்களாகவும், மந்த பாக்கியம் உடையவர்களாகவும் இருப்பார்களே. அவர்களுக்கு பலவிதமான காரியங்களை விதித்தால் செய்ய முடியாதே. அவர்களுக்கு என்ன கதி? என்று ஏதாவது புராணத்தில் சொல்லப்பட்டிருக்கின்றதா?'' என்று வினவுகின்றனர்.
மற்ற யுகங்களில் ஸர்வ சாதாரணமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்தார்கள். தசரதர் 60,000 வருடங்கள் வாழ்ந்தாராம். அதைப் பார்க்கும்பொழுது நம்முடைய 60ம் 80ம் அல்ப ஆயுள்தானே. சந்திரனையும், செவ்வாயையும் தெரிந்துகொள்ளும் அவர்கள்(தற்காலத்தவர்) தனக்குள்ளேயே இருக்கும் ஆத்மாவை தெரிந்து கொள்ளமாட்டார்கள். அதனாலேயே "மந்தமதய:'' அறிவிலிகள்? இந்த யுகத்தில் எல்லா பாக்யமும் உடைய ஒருவரைப் பார்க்க முடியாததால் மந்தபாக்கியம் உடையவர்கள். சோம்பேறிகள்; உடல் ரீதியிலும் நோஞ்சான்கள்; உள்ளரீதியிலும் குதர்க்கிகள்; வீட்டிற்கு ஒரு பைத்தியமாவது இருக்கும். இதெல்லாம் கலியின் வைபவங்கள். சௌனகாதி மஹரிஷிகள், சூதரை பார்த்து "புராணங்கள் இதிஹாசங்களெல்லாம் தாங்கள் நன்கு கற்றறிந்தவர். வியாசருடைய அபிப்ராயத்தையும், தங்களாலேயே சரியாக எடுத்துரைக்க முடியும். ஏனெனில், மிகப்ரியமான சிஷ்யரான உங்களிடம் ஒளிவு மறைவின்றி வியாச பகவான் எல்லாவற்றையும் உபதேசித்துள்ளார்.
மேலும் அவர்கள் , "எவருடைய பெயரை அழைப்பதனால் ஒருவன் உடனே மோக்ஷம் அடைகின்றானோ, எந்த பெயரை கேட்டால் எமனே பயப்படுகின்றானோ, யாரை சென்று சேவிப்பதனாலேயே ஒருவரை புனிதப்படுத்துமோ, கங்கையை காட்டிலும் எவரது சரணத்தை தியானம் செய்து மனசாந்தி பெற்ற முனிவர்கள் மற்றவர்களை உடனே பாவனமாக்குகின்றார்களோ, அவரது கதையை சித்த சுத்தி பெற விரும்பும் எவர்தான் கேட்க மாட்டார்!!" என்று கேட்கின்றார்கள்.
இங்கே அவர்கள் கேட்கும்பொழுது, எந்த கிருஷ்ண நாமம் "யஸ: கலிமலாபஹம்" என்ற புகழுடையதோ என்று கேட்கிறார்கள். பிரத்யேகமாக கிருஷ்ண நாமத்திற்கு கலியின் தோஷங்களை போக்கடிக்கும் புகழ் உள்ளது என்று இங்கே கூறப்பட்டு உள்ளது. மற்ற எந்த நாமத்தை காட்டிலும் கிருஷ்ணநாமத்திற்கே இந்த புகழ் உண்டு. சௌனகாதி ரிஷிகள் கேட்ட விஷயங்களை ஆறு கேள்விகளில் அடக்கலாம்.
1. ஸகல ஜனங்களும் ச்ரேயஸ்ஸை அடைய சுலபமான நிச்சயமான வழி என்ன?
2. வஸுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாகப் பிறந்த பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் அவதார நோக்கம் என்ன?
3. உலகத்தின் ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களை எங்களுக்கு விரிவாகக் கூறுங்கள்.
4. பகவானின் மற்ற அவதாரங்களைப் பற்றிக் கூறுங்கள்.
5. ஸ்ரீ கிருஷ்ணாவதார சரிதம் விரிவாகக் கூறுங்கள்.
6. கலியுகத்தில் தர்மம் யாரை சரணம் அடைந்தது? "தர்ம: கம் சரணம் கத:'' என்பதுடன் முதல் அத்யாயம் முடிகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment