Wednesday, February 2, 2011
பக்தர்களின் கேள்விகளுக்கு ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்களின் பதில்கள்
கேள்வி: பகவான் எங்கே இருக்கின்றான்?
பதில்: எங்கே ஒருவருடைய தலை பணிகின்றதோ, அங்குதான் இறைவன் உள்ளான்.
கேள்வி: பக்தி கதைகளை தத்துவத்துடன் கேட்பது எதைப்போன்றது?
பதில்: ஒரு குழந்தையும், அந்த குழந்தையின் தந்தையும் சேர்ந்து நெய், முந்திரி பருப்பு, சர்க்கரை, பாதாம்பருப்பு இவற்றினால் கலந்து செய்யப்பட்ட பாதாம் அல்வாவை சுவைக்கின்றார்கள். அப்பொழுது இருவர் கைகளிலிருந்தும் சிறிது கீழே சிந்துகின்றது. தந்தையும் அதை பொறுக்கி எடுத்து வாயில் போட்டுக்கொள்கின்றார். இவ்வளவு உயர்ந்த பொருள் வீணாகக்கூடாது என்ற காரணமும் அதில் அடங்கும். (நெய், முந்திரி, பாதாம் கலந்த அல்வா அல்லவா!) கீழே சிந்திய பாதாம் அல்வாவை, குழந்தையும் எடுத்து வாயில் போட்டுக் கொள்கின்றது. நல்ல இனிப்பாயிருக்கின்றது என்ற ஒன்று மட்டும்தான் இதற்கு காரணம். அதுபோல், பகவானுடைய மஹிமை தெரிந்து பக்தி செய்பவர்களுக்கும், மஹிமை தெரியாமல் பக்தி செய்பவர்களுக்கும் அனுபவம் ஒன்றுதான். தத்துவம் தெரிந்தால் மஹிமை புரியும். மஹிமை தெரிந்தால் கௌரவம் அதிகரிக்கும். மஹிமை தெரியாமல் பக்தி செய்தால் ரஸம் அதிகரிக்கும்.
கேள்வி: உலகத்தில் எது பாக்யம்?
பதில்: பணத்தை அடைவதோ, புகழை அடைவதோ, பெரிய பதவியை அடைவதோ, வித்வத்தை அடைவதோ, பல பட்டங்களை பெறுவதோ, அழகை அடைவதோ, நீண்ட நாட்கள் வாழ்வதோ இவைகளில் எதை அடைந்தாலும் அவன் பாக்யவான் அல்ல. எவன் ஒருவன் தான் திரும்பி பிறக்காததற்கான வழியை தேடிக்கொள்கிறானோ அவனே பாக்கியவான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment