Wednesday, February 2, 2011

மாலே மணிவண்ணா - 92 -மகாவித்துவான் மயிலம். வே. சிவசுப்பிரமணியன்

சர்வ ஜகத்காரணனாய் உள்ள எம்பெருமானே எல்லாவற்றுக்கும் மூலகாரணமாக, எல்லாமாக இருப்பவன் என்பதைப் பரிபாடல் இந்தப்பகுதியில் விளக்க வருகிறது.
பொருளின் தோற்றத்திற்கு மூன்று காரணங்கள் வேண்டும். ஒரு காரியம் நிகழுமானால், அதற்கு முதல்-துணை-நிமித்தம் என்ற மூன்று காரணங்கள் வேண்டும்.
குடம் உண்டாக வேண்டும் என்றால் குடத்துக்கு முதற்காரணம் மண், அது குடமாகிய காரியத்தோடு ஒற்றுமை உடையது. அது இல்லாமல் குடம் தோன்ற முடியாது. மண்ணே- குடமாய் விடாது - மண்ணைக் குடமாகக் காரியப்படுத்துவதற்கு துணைக்காரணமாய தடியும் சக்கரமும் வேண்டும். சக்கரத்திடையில், மண்ணைவைத்துத் தடியால் சுழற்றினால் மண்குடமாகிறது. மண்குடமானதும் தடியும் சக்கரமும் நீங்கி விடுகின்றன. எனவே இவற்றை துணைக்காரணம் என்கிறோம். மண், தடி, சக்கரம் இவை எல்லாம் சடப்பொருள்கள் அதாவது அறிவற்றவை; ஆகையால் மண்ணைத்திரட்டவும் சக்கரத்தில் வைக்கவும் தடியால் சுழற்றவும் அறிவுள்ள குயவன் தேவை. அவனே நிமித்த காரணம் ஆகிறான். மண், தடி, சக்கரம் இருந்தாலும் குயவன் இல்லாமல், அவை தாமே குடமாய் விட மாட்டா. எனவே ஒரு முதற்காரணத்திலிருந்து, சில துணைக்காரணங்களைக்கொண்டு ஒரு காரியத்தை நிகழ்த்துகிறவனே நிமித்த காரணமாகிறான். இவ்வாறு முதல் துணை நிமித்த காரணங்களைக்கொண்டு, ஒரு காரியத்தை செய்வதையே "சற்காரிய வாதம்" என்று தத்துவவாதிகள் சொல்லுவர்.
வைணவ சமய தத்துவப்படி, உலகத்தோற்றத்திற்கு அதாவது தனு-கரண-புவன லோகங்களுக்கு அடிப்படையான மூன்று காரணங்களாகவும் இருப்பவன் எம்பெருமானே என்பது அடிப்படைக் கொள்கைகளுள் ஒன்றாகும்.
"நினைந்த எல்லாப்பொருள்களுக்கும் வித்தாய் முதலில் இதையாமே
மனஞ்செய் ஞானத்து உன் பெருமை"
"தான் ஓர் உருவே தனிவித்தாய் தன்னில் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரரும் மற்றும் முற்றுமாய்"
(திருவாய் 1.5.3,4)
தன்னுளே திரைத்தெழும் தரங்கவெண்தடங்கடல்
தன்னுளே திரைத்தெழுந்து அடங்குகின்ற தன்மைபோல்
நின்னுளே பிறந்திறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே (திருச்சந்த விருத்தம் 10)
என்கின்ற பாசுரங்கள் இக்கருத்தை விளக்கும். கடலிலிருந்து அலைகள் தோன்றி கடலிலேயே அடங்கிவிடுகின்றன.

No comments:

Post a Comment