Wednesday, February 2, 2011

அப்பாலுக்கு அப்பால் -- நரஹரி சோனார் -1

"அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்" என்று சுந்தரமூர்த்திஸ்வாமிகள் திருத்தொண்டத்தொகையில் பாடி உள்ளார். அறுபத்திமூவரான நாயன்மார்களில் பலர் தமிழ்தேசத்தவர். அப்பாலும் அடிச்சார்ந்தார் என்பது வெளிதேசத்தில் சிவபக்தி செய்த பக்தர்களை குறிப்பது. இவர்கள் கணக்கற்றவர். அப்படிப்பட்ட அடியாரில் ஒருவர் நரஹரி சோனார். பிற்காலத்தில் ஞானதேவரின் சீடர்களில் ஒருவராய் இருந்தவராக கூறப்படுகிறது.
பரமசிவன் ஸ்ரீமத்பாகவத மஹாபுராண அம்ருதமதன கட்டத்தில் ஹரியிடம் பிரியமாக இருப்பவர்கள் தனக்கு பிரியமானவர்கள் என்று கூறுகிறார். மேலும் பாகவதமும், "வைஷ்ணவர்களில் சிரேஷ்டமானவர் சம்புவே" என்றும் கூறுகிறது. இந்த பாகவத மஹாபுராணத்தின் ஏகநாயகனான கண்ணபிரான் தானே ஒரு சிவபக்தருக்கு சிவபிரானாக காட்சி தந்து, அவருக்கு தானும் பரமசிவனும் வேறில்லை என்று கூறியதை பார்ப்போம்.
பரதம் என்றால் ஞானியர் வாழும் பூமி என்று பொருள். ராஷ்டிரம் என்றால் தேசம் என்று பொருள்படும். ஞானியர் வாழும் பூமியில் மஹத்தான தேசம் மஹாராஷ்டிரம். இந்த மஹாரஷ்டிரத்தில் கலிக்கு பின் தானே அர்ச்சாவதாரமாக கண்ணன் எழுந்தருளி இருக்கும் ஊர் பண்டரிபுரம். பண்டரிபுரத்தில் பொற்கொல்லர் வம்சத்தில் பிறந்தவர் இவர். பண்டரிபுரத்தில் ஹரியின் பரமபக்தர்களின் கூட்டம் எப்பொழுதும் உண்டு. அப்படிப்பட்ட இடத்தில் பிறந்தார் எனினும் இவருக்கு விட்டலனிடம் ஈடுபாடு வரவில்லை. இவருக்கு பரமசிவனிடம் மட்டுமே பிரியம் இருந்தது. பிற தெய்வங்களை பார்க்க மாட்டார். இவர் வீட்டருகேதான் விட்டல மந்திரும் இருந்தது. ஆனால், ஒருநாளும் அந்த விட்டல மந்திர் கோபுரத்தை கூட இவர் சேவிக்க மாட்டார். கணக்கற்றவர்கள் விட்டலனை பார்க்க சென்றாலும், இவர் அங்கு செல்ல மாட்டார். சேவார்த்திகள் குறைவான, அருகிலுள்ள மல்லிகார்ஜுனரின் கோவிலுக்குத்தான் செல்வார். சிவபக்தருக்கு உரிய சகல லட்சணங்களும் இவருக்கு இருந்தது. விடியற்காலையில் பீமாநதியில் நானம் செய்வார். திருநீறு இட்டு, பஞ்சாக்ஷர ஜபம் செய்வார்; நறுமலர்கள் கொய்து கொண்டு கோவிலில் சமர்ப்பிப்பார், இயன்ற வரை பரோபகாரம் செய்வார். உலக ஆசைகளை ஒதுக்கிய விரக்தராக இருந்தார். இதுவே நரஹரிசோனார். ஆனால், வேலையில் இவர் படு சுட்டி. இவர் செய்த நகைகள் சோடை போனதே இல்லை. அனைத்தும் ஜொலிக்கும். மேலும் நேர்மைக்கு பேர் போனவர். இவருக்கு பொருளில் ஆசையில்லை. சிவனருளுக்கு ஏங்கி இருந்தார்.
பண்டரியில் இருந்தவர்கள் எல்லாம் இவரை வித்தியாசமாக நினைத்தனர். "அட! இது என்ன, முன்னிருக்கும் விட்டலன் எனும் புதையலைக் கண்டும் இவன் காணாதது போல் செல்கிறான்!" என்று பேசிக்கொள்வர். ஆனால் நரஹரி சோனாரோ, எப்படி பல நட்சத்திரங்கள் வந்தாலும், தாமரை மலராமல் சூரியனுக்கு மட்டுமே மலருகிறதோ, அப்படியே தனது இஷ்ட தெய்வமான பரமசிவனிடம் மட்டுமே மனம் வைத்தவாறு இருந்தார். ஒருமுறை எவராவது அவர் காதில் சிவ நாமத்தை சொன்னாலும், பரவசராய் காணப்படுவார். பரமசிவன் கோவில் கண்டாமணி ஒலித்தால், இருந்த இடத்திலிருந்து வணங்குவார்.
துளசிதாசர் ப்ருந்தாவனம் செல்லாவிடில், கண்ணன் அவருடன் விளையாடி இருப்பானா என்று சொல்ல முடியாது அல்லவா? ராமரை மட்டும்தான் அவர் தரிசித்திருப்பார். அதுபோல் நரஹரிசோனார் வேறு எங்காவது இருந்திருந்தால், அவர்பால் கண்ணன் மனம் சென்றிருக்குமா என்று தெரியவில்லை. அவரோ அவன் காலடியில் அல்லவா இருக்கிறார். இருந்தும் பரமசிவனை அல்லவா பஜிக்கிறார். இறைவன் தனக்கு பிரியமானவர்களோடு விளையாடுகிறான். அவன் நரஹரிசோனாருடன் விளையாடியதில் மற்றொருவரும் சம்பந்தப்பட வேண்டி வந்தது.

No comments:

Post a Comment