1. நாம், வயது வளர்ந்து கொண்டே இருக்கின்றது என்று சந்தோஷப்பட்டு பிறந்த நாள் கொண்டாடி வருகின்றோம். அப்பொழுது, நம்மை அறியாமல் ஒரு விஷயத்தை மறந்து விடுகின்றோம். நமக்கு இந்த பிறவியில் இறைவனை அடைய இருக்கும் காலம் குறைந்து கொண்டே வருகின்றது என்பதுதான் அது.
2. ஒரு பொருளை பார்த்தவுடன், அந்த பொருளை வைத்துக்கொண்டே, பல ஆராய்ச்சிகள் செய்து, அது எப்படி வந்தது, யார் செய்தது, அதன் ரஸாயனம், இவற்றை தெரிந்து கொள்ளலாம். இப்படித்தான், உலகை பற்றி பல ஆராய்ச்சிகள் செய்து, அதன் தன்மையை வெளிப்படுத்திக்கொண்டு இருக்கின்றார்கள் விஞ்ஞானிகள். அந்த பொருளை செய்தவனிடமே அதைப்பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அப்படித்தான், ரிஷிகள், பகவானிடமே கேட்டு இந்த பிரபஞ்சத்தின் தன்மை, படைப்பின் ரகசியம் எல்லாம் நமக்கு எடுத்து கூறியுள்ளார்கள்.
3. ஒருவனுக்கு குரு கிடைப்பது அவனுக்கு அமிர்த கலசம் கிடைப்பது போல; கிடைத்தும் அவர் சொன்னதை கேட்காமல் இருப்பது என்பது, அப்படி கிடைத்த அமிர்த கலசத்தை கை தவறி கீழே போட்டு உடைப்பது போல.
4. பக்தர்கள் பகவானை அடைவதற்காக சாதனைகள் செய்வார்கள். அவதார புருஷர்களை குருவாக கிடைக்க பெற்றவர்களோ கிடைத்த பகவானுக்காக சாதனைகள் செய்கின்றார்கள்.
5. பகவானுக்கு புஷ்பங்களால் அர்ச்சனை செய்தேன். அப்பொழுது இந்தக் கைகளால் பகவானுக்கு அர்ச்சனை செய்ய நாம் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். புஷ்பங்கள் எவ்வளவோ மலர்ந்து, பிணத்திற்கும் பலதரப்பட்ட மனிதர்களுக்கும் போய் சேருகின்றன. அப்படி இருக்க, இந்த புஷ்பங்கள் பகவானுடைய திருவடியை அடைய பாக்யம் செய்து இருக்கின்றன என்ற எண்ணம் ஏற்பட்டது. "இல்லை, இல்லை! அந்த பூ தானாக இங்கு வந்து சேருமா? அதை பறித்து, தொடுத்து, இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கின்றாரே, அவர்தான் புண்ணியம் செய்துள்ளார்" என்று தோன்றியது. மொத்தத்தில் மூவருமே பாக்யம் செய்துள்ளார்கள் என்பதே உண்மை.
-மஹாரண்யம் ஸ்ரீமுரளீதர ஸ்வாமிஜி
No comments:
Post a Comment