நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்கள் கொண்டதுதான் இப்பிரபஞ்சம். இவை ஒன்றுடன் ஒன்று இயைந்து இருக்கும் வரையில் உலகில் இயற்கை சீராக இயங்குகிறது. இவற்றில், ஒன்று கொஞ்சம் தனது இயல்பிலிருந்து மாறுபட்டு சீற்றம் கொண்டால் கூட அதை நம்மால் தாங்க முடியாது. புயல், மழை, வெப்பம், நிலச்சரிவு என இப்படி ஒவ்வொன்றும் விபரீத விளைவுகள் தருபவைதானே! அப்படி இருக்க, அண்மையில் ஜப்பான் நாட்டில் முதலில் பூகம்பமும், சுனாமியும், பின் தீ விபத்தும் ஒன்றன்பின் ஒன்றாய் பெரிய அளவில் வந்து இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்த நவீன காலத்தில் மிகவும் அச்சம் தரக்கூடிய அணுக்கதிர் வீச்சும் ஏற்பட்டு இருக்கிறது. இந்த பேரழிவு தரக்கூடிய ஆபத்துக்கள் அனைத்தும் ஒரே சமயத்தில் வந்து அந்நாட்டு மக்களுக்கு சொல்ல முடியாத துயரத்தையும் அச்சத்தையும் தந்திருக்கிறது. அவர்கள் அதிலிருந்து மீள பல காலம் பிடிக்கும். இதுவரை அந்நாடு சந்தித்த ஆபத்துக்களில் இதுவே அதிக அழிவையும் அச்சத்தையும் தந்து இருக்கிறது. அதுபோலவே, மத்திய கிழக்காசிய நாட்டு மக்களும் கடுமையான வன்முறை செயல்களினால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் அனுபவித்து வரும் துயரத்தை உலகம் முழுவதும் பார்த்தும் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறது. இந்த நிலைமை மாறி சீரடையவும், இப்படி இயற்கை சீற்றங்களும் வன்முறை சம்பவங்களும் ஏற்படாமல் விலகவும், அமைதியும் சந்தோஷமும் உலகமக்கள் மனதில் நிரந்தரமாக நிலவவும், நாம் எல்லோரும் சேர்ந்து "ஹரே ராம" மஹாமந்திரம் சொல்லி கடவுளிடம் பிரார்த்தனை செய்வோமாக.
No comments:
Post a Comment